25 பிப்ரவரி 2010
டெண்டருக்கு ஒப்புதல் தர லஞ்சம் வாங்கிய கொம்யூன் ஊராட்சி ஆணையர் கைது
புதுச்சேரி: டெண்டருக்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் வாங்கிய கொம்யூன் ஊராட்சி ஆணையரை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். புதுச்சேரி வில்லியனூர் அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் குப்தன். மண்ணாடிப்பட்டு கொம்யூன் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்கான டெண்டர் கோரி, ஊராட்சி ஆணையர் அனிச்சனிடம் குப்தன் விண்ணப்பித்திருந்தார்.
டெண்டருக்கு ஒப்புதல் அளிக்க குப்தனிடம், ஆணையர் அனிச்சன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முதல் தவணையாக அவரிடம் குப்தன் 3,000 ரூபாய் வழங்கினார். மீதி பணத்தை வழங்காததால் டெண்டர் வழங்காமல் அனிச்சன் காலம் கடத்தினார்.
இதுகுறித்து குப்தன், சென்னையில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். சி.பி.ஐ., இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில் அதிகாரிகள் புதுச்சேரி வந்தனர். சி.பி.ஐ., அதிகாரிகளின் ஆலோசனைப்படி, கோர்க்காட்டில் உள்ள அனிச்சன் வீட்டிற்கு குப்தன் நேற்று காலை சென்று, அவரிடம் ரசாயன பவுடர் தடவிய 5,000 ரூபாய் வழங்கினார். அங்கு கண்காணித்துக் கொண்டிருந்த சி.பி.ஐ., போலீசார், அனிச்சனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அனிச்சனை, புதுச்சேரி 2வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சித்தார்த்தர் உத்தரவிட்டார். அதன்பேரில் அனிச்சன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக