ஆந்திர மாநிலம் சட்டசபை சிறப்பு செயலாளராக இருப்பவர் கே.கோபாலகிருஷ்ணய்யா. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள கோபாலகிருஷ்ணய்யாவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு அகுந்த் சபர்வால் தலைமையில் 3 டி.எஸ்.பி.க்கள், 10 இன்ஸ்பெக்டர் மற்றும் 40 போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
அப்போது அவர் ரூ.100 கோடிக்கு (மார்க்கெட் மதிப்பு) சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது. அவரது வீடு முழுவதிலும் ஆங்காங்கே வீட்டுமனை பத்திரங்களும், ஆயிரம் ரூபாய் பணக்கட்டுகளுமாக இருந்தன. இதைப் பார்த்ததும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு அகுந்த்சபர்வால் கூறியதாவது:-
கோபாலகிருஷ்ணய்யா வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் சிக்கின. அவருக்கு ஐதராபாத் பஞ்சராஹில்ஸ் பகுதியில் 2 அடுக்குமாடி குடியிருப்புகள், 5 வீட்டுமனைகள், நெல்லூரில் 17 வீட்டுமனைகள், சித்தூரில் 9 வீட்டுமனைகள், கிருஷ்ணா மாவட்டம் நாகயலங்காவில் 16 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவை உள்ளன.மேலும் அவரது வீட்டில் இருந்து ரூ.13 லட்சம் ரொக்கம், 1.2 கிலோ தங்க நகைகள், 9 கிலோ வெள்ளி நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 14 பேனாக்கள் ஆகியவை சிக்கின. இவற்றின் மார்க்கெட் மதிப்பு ரூ.100 கோடியை தாண்டும். அவர் மேலும் வேறு எங்காவது சொத்து சேர்த்துள்ளாரா? அவரது “பினாமி” யார்? என்பது பற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சட்டசபை செயலாளர் கோபாலகிருஷ்ணய்யாவுக்கு ஆந்திர மந்திரிகள் பலருடன் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. காண்டிராக்டர்களுக்கு இவர் மந்திரிகள் மூலம் நிறைய “காண்டிராக்ட்” எடுத்து கொடுத்துள்ளார்.இதன்மூலம் அவருக்கு கோடிக்கணக்கில் கமிஷன் கிடைத்துள்ளது. இதனால் அவர் எப்போதும் தனது கையில் விலை உயர்ந்த செல்போன்கள், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பேனாக்களுடன் வலம் வந்தார். இவரது ஆடம்பரத்தை பார்த்தே ஊழியர்கள் தான் இவரைப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் கூறி சிக்க வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக