புதியவை :

Grab the widget  Tech Dreams

31 டிசம்பர் 2009

ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை பெண் அதிகாரி கைது


ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை பெண் அதிகாரி சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவொற்றியூரில் எண்ணூர் டேங்க் டெர்மினல் லிமிடெட் என்ற நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் தன்ராஜ். இவர், லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி சுனில்குமாரிடம் அளித்துள்ள புகாரில், எங்கள் கம்பெனி ஊழியர்களைப் பற்றி ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்கும் பொறுப்பு,திருவொற்றியூரில் தொழிலாளர் நலத்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றும் மேரி என்பவரிடம் உள்ளது.

இதுதொடர்பாக, அவரிடம் நாங்கள் விண்ணப்பம் அளித்திருந்தோம். ஆனால் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் கொடுப்பதாக மேரி கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
இதுகுறித்து எஸ்பி லட்சுமி உத்தரவின்பேரில், டிஎஸ்பி வல்சராஜ் தலைமையிலான போலீசார் திருவொற்றியூரில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆபீசை கண்காணித்தனர். நேற்று மாலையில் பணத்தை தன்ராஜ் கொடுத்தபோது மேரியை கைது செய்தனர்.

29 டிசம்பர் 2009

பிச்சைக்காரரிடம் திருடிய போலீஸ்காரர்


செங்கல்பட்டு : வண்டலூரை சேர்ந்தவர் குமார்(43). ரயில்வே டிரைவர். செங்கல்பட்டு & கடற்கரை ரயிலை நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு ஓட்டிச் சென்றார். கார்டு ராமதாஸ் உடன் சென்றுள்ளார். செங்கல்பட்டில் இருந்து 10.15 மணிக்கு திரும்ப வேண்டும். 45 நிமிடம் இருந்ததால் இருவரும் ரயில் பெட்டியில் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, செங்கல்பட்டு ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் சீனிவாசன் (27) அங்கு வந்தார். ஓய்வு நேரம் என்பதால் லுங்கி அணிந்திருந்தார்.

பிளாட்பாரத்தில் படுத்திருந்த பிச்சைக்காரரின் பையில் கைவிட்டு பணத்தை எடுத்துள்ளார் சீனிவாசன்.இதைப்பார்த்த குமாரும், ராமதாசும் தட்டிக் கேட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், போலீஸ்காரனான என்னையே திட்டுகிறீர்களா? என்று டிரைவர் குமாரை உயிர்நிலையில் எட்டி உதைத்து முகத்தில் குத்தியுள்ளார். அதே இடத்தில் குமார் மயங்கி விழுந்தார். ரயில்வே ஊழியர்கள் ஓடிவந்து குமாரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, செங்கல்பட்டு ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் காயாம்பு வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய போலீஸ்காரர் சீனிவாசனை தேடி வருகிறார். இந்நிலையில், சீனிவாசனை சஸ்பெண்ட் செய்து ரயில்வே போலீஸ் எஸ்பி உத்தரவிட்டார்.

ரயில்வே டிரைவரை தாக்கிய போலீஸ்காரர் சீனிவாசனை உடனே கைது செய்யக்கோரி, தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் ரயில் டிரைவர்கள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

28 டிசம்பர் 2009

ஊனமுற்றோர் அலுவலகத்தில் விடுமுறையிலும் லஞ்ச வசூல்: நான்கு ஊழியர்கள் கைது


விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலகத்தில், உதவித்தொகை அனுப்புவதற்கு லஞ்ச வசூலில் ஈடுபட்டிருந்த நான்கு ஊழியர்களை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.விருதுநகர் மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை அலுவலகம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளது. அரசு விடுமுறை தினமான நேற்று காலை 10 மணி முதல், மனவளர்ச்சி குன்றியோருக்கு, அரசு உதவித்தொகை அனுப்புவதற்கு, லஞ்ச வசூலில் ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாக, ரகசிய தகவல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது.

அங்கு போலீசார் சோதனை நடத்தினர். இந்த அலுவலகத்தில் முடநீக்கு தொழில் நுட்ப உதவியாளர் பிரகாஷ், தொழிற்கூட உதவியாளர் ராஜாமணி, பல்நோக்கு மறு வாழ்வு உதவியாளர் கருணாகரன், இரவுக் காவலர் பரமசிவம் ஆகியோர் இருந்தனர். அவர்களிடம் கணக்கில் வராத 58 ஆயிரம் ரூபாய் இருந்தது பற்றி, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு 60 சதவீதமும், அதற்கு மேல் உள்ளவர்களுக்கு மாதம் 500 ரூபாய் வீதம், அரசு உதவித் தெகை வழங்கி வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் 500 பேர் இந்த உதவித் தொகை பெற்று வந்தனர். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, உதவித்தொகை வழங்கப்படவில்லை. இந்த தொகையான 76 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. ஒரு நபருக்கு நான்கு ஆயிரத்து 500 வீதம், மணியார்டர் மூலம் அனுப்பபட வேண்டும்.

புதிதாக இந்தாண்டுக்கு ஆயிரத்து 200 பேருக்கு உதவித்தொகை வழங்க அரசு அனுமதித்திருந்தது. இதனை சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அனுப்ப வேண்டும். மணியார்டர் செய்வதற்கான கமிஷன் தொகை உட்பட அனைத்தும் அரசு வழங்கியுள்ளது. உதவித்தொகை பெறக்கூடிய அனைவரையும் அலுவலகத்திற்கு நேரில் வர கோரி ஊழியர்கள் கடிதம் அனுப்பியிருந்தனர்.நேரில் வந்த பயனாளிகளிடம் ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் வீதம் லஞ்சமாக வழங்க வேண்டும் என, ஊழியர்கள் தெரிவித்தனர். இதன் பேரில் டிச., 26ல், எழு நபர்களும், நேற்று 51 நபர்களிடம் தலா ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வசூலித்திருந்தனர். 58 ஆயிரம் ரூபாயையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பிரகாஷ், ராஜாமணி, கருணாகரன், பரமசிவம் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

25 டிசம்பர் 2009

பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க ரூ.200 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி சவுமிய நாராயணபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து, விவசாயி. இவர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்காக திட்டமிட்டு இருந்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள விவசாய உதவி அலுவலர் ஜேம்ஸ் (வயது57) என்பவரை அணுகினார்.
இத்திட்டத்தில் சேருவதற்காக விண்ணப்பித்தில் கையெழுத்திட ரூ.200 தந்தால்தான் கையெழுத்திடுவேன் என்று கூறியதாக தெரிகிறது.
இது குறித்து காளிமுத்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். பின்னர் போலீசின் அறிவுரையின்படி நேற்று மாலை 6 மணி அளவில் அதிகாரி ஜேம்ஸ் வீட்டிற்கு விவசாயி காளிமுத்து சென்று அவரிடம் ரூ.200-ஐ கொடுத்தார்.
அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி. குமாரசாமி, இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன், ராஜா ஆகியோர் கையும், களவுமாக ஜேம்சை பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் வேளாண்மை அலுவலக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.


24 டிசம்பர் 2009

ஊழல் பணத்தால் திமுக வெற்றி: விஜயகாந்த்


ஊழல் பணம்தான் ஆளும் கட்சியான திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:எது நடக்கக் கூடாதோ அது நடந்துள்ளது.​

திருச்செந்தூர்,​​ வந்தவாசி ​(தனி)​ இடைத்தேர்தல் முடிவுகள் ஜனநாயக முறைக்கு எதிரானது.​ எந்த ஊழலை ஒழிக்க பாடுபடுகிறோமோ அந்த ஊழல் பணம்தான் ஆளும் கட்சியான திமுகவுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது.​ தாற்காலிகமான இந்த வெற்றி திமுகவினருக்கு மகிழ்ச்சியைத் தரலாம்.​ ஆனால் எதிர்காலத்தில் இது அவர்களுக்கே ஆபத்தாகிவிடும்.​ "வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்ற பாடம் நாளை திமுகவுக்கு கிடைக்கும்.​

வெற்றி,​​ தோல்வி சகஜம் என்று வேதாந்தம் பேசி பயனில்லை.​ இந்தத் தோல்வி ஏழைகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட தோல்வியாகும்.​ இதனால் தமிழகம் பெரிதும் பாதிக்கப்படும்.​ எனவே தமிழக மக்கள் விழிப்புடன் செயல்பட்டு மாற்றம் காண வேண்டியது அவசியமாகும்.​ இந்த தர்ம யுத்தத்தில் எதிர்பாராமல் தேமுதிக தன்னை ஈடுபடுத்திக் கொண்டது.​ கொட்டிய பண மழையிலும் நேர்மையாக நமக்கு மக்கள் வாக்களித்துள்ளனர்.​

தமிழகத்தில் நல்ல அரசியல் உருவாக வேண்டும் என்பதை ஏற்று வாக்களித்த இந்த நல்லோர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஆட்டிப்படைக்கும் அதிகார சூழ்நிலையிலும் தேர்தல் பணியாற்றிய தேமுதிக நிர்வாகிகளுக்கு என் இதயத்தில் என்றும் நீங்காத இடம் உண்டு.

வாக்காளர்களுக்கு தாராளமாக லஞ்சம் கொடுத்ததை பத்திரிகைகளும்,​​ தேர்தல் பார்வையாளர்களும் நன்கறிவார்கள்.​ நேர்மையாக தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் இந்த இடைத் தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டும்.​ எத்தனை முறை பணம் கொடுத்தாலும் அத்தனை முறையும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்.​ அப்போதுதான் நேர்மையாக தேர்தல் நடைபெறும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.


விருதுநகரில் நிதி நிறுவன மோசடிரூ.100 கோடிக்கு மேல் சுருட்டல்விருதுநகர்:விருதுநகரில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த நிதி நிறுவனத்தை, கண்ணீருடன் மக்கள் முற்றுகையிட்டனர். நிதி நிறுவன பங்குதாரர் விஜயகுமார் உட்பட இருவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரும், குமாரலிங்கபுரம் சீனிவாசன் என்பவரும் புல்லலக்கோட்டை ரோடு விக்னேஷ் காலனியிலுள்ள ஒரு மாடியில், கோல்ட் பவர் மார்க்கெட்டிங்(பி)லிட்., என்ற பெயரில் நிதி நிறுவனத்தை சில மாதங்களுக்கு முன் துவக்கினர்.

இந்த நிதி நிறுவனத்தில் 5,000 ரூபாய் கட்டினால், ஐந்து மாதத்துக்கு 3,350 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது என்ற தகவல் மக்களிடையே பரவியது.இதனால், தினமும் நூற்றுக்கணக்கான பேர் நிதி நிறுவனத்தில் பணம் கட்டினர். முதலில் பணம் செலுத்தி யவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர் களுக்கு சரியாகப் பணம் வழங்கப்படவில்லை என நேற்று முன்தினம் தகவல் பரவியது. நேற்று காலையிலிருந்தே நிதி நிறுவனம் முன், பணம் போட்டவர்கள் அதிகளவில் கூடினர்.


இதையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.டி.எஸ்.பி., பிச்சை, பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெரியகாளை, எஸ்.ஐ.க்கள் கவுசல்யா, தேவமாதா ஆகியோர், அலுவலகத்தில் இருந்த பங்குதாரரர் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதாக தெரிய வந்தது.இதையடுத்து போலீசார், வெளியே நின்ற ஒருவரை அழைத்து வந்து விஜயகுமாரிடம் பேச அனுமதித்தனர்.

அவர் வெளியே வந்து கூடியிருந்தவர்களிடம், "நிதி நிறுவனத்தில் பணம் இல்லை. நவ., 17க்கு பின் பணம் செலுத்தியவர்களின் விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப் படவில்லை. ஜன., 18ல் பணம்வழங்க இயலாது என விஜயகுமார் கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து, பணம் கட்டிய சரவணபாண்டியன், தாமோதரன் ஆகியோர், பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். விஜயகுமாரை, போலீசார் கைது செய்தனர்.

நேற்றிரவு நிதி நிறுவனம் நடத்திய மற்றொருவரான சீனிவாசனையும் போலீசார் கைது செய்தனர்."ஆசை' கண்ணை மறைக்குது: கூலி வேலை பார்ப்பவர்கள் 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தி உள்ளனர். ஆனால், போலீஸ், வக்கீல், ஆசிரியர்கள் பாகுபாடின்றி 10 லட்சம், 20 லட்சம் ரூபாய் கட்டியுள்ளனர். குறைந்த நாளில் நிறைய பணம் பார்க்கும், "ஆசை'யால் இவர்கள் ஏமாந்து நிற்கின்றனர்.

22 டிசம்பர் 2009

1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பொய்யாமணி(கரூர் ) வி.ஏ.ஓ . நடராஜன் கைது .

குளித்தலை:கரூர் அருகே, லஞ்சம் வாங்கியதற்காக வி.ஏ.ஓ.,வை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர்.கரூர் மாவட்டம் கோரப்பட்டியைச் சேர்ந்த சின்னதுரை(50) என்பவர், கடந்த 18ம் தேதி, தனது நிலத்தின் பட்டா சிட்டா நகல் கேட்டு, பொய்யாமணியிலுள்ள வி.ஏ.ஓ., நடராஜனிடம்(52) மனு அளித்தார். நகலை 22ம் தேதி வாங்கி கொள்ளும்படியும், அதற்கு 1,000 ரூபாய் தர வேண்டும் எனவும் கூறியதையடுத்து, நேற்று முன்தினம், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சின்னதுரை, புகார் கொடுத்தார்.வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு நேற்று காலை 11.50 மணிக்கு சென்ற அவர், ரசாயனம் தடவிய ரூபாயை வி.ஏ.ஓ.,விடம் கொடுத்தார். அதை வாங்கிய போது, அவரை கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரிடமிருந்து கணக்கில் வராது வைத்திருந்த 8,350 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.கைதான வி.ஏ.ஓ., கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலராகவும் உள்ளார்.

ஒரே அலுவலகத்தில் இரண்டு சார்பதிவாளர்கள் : உடுமலையில் கூத்து


உடுமலை சார்பதிவாளர் அலுவலகத்தில், ஒரே நேரத்தில் இரண்டு சார்பதிவாளர்கள் பணி புரிந்ததால் குழப்பம் ஏற்பட்டது. உடுமலை சார்-பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்த ராஜகோபால் முறைகேடுகளில் ஈடுபட்டு, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக பதிவுத்துறை தலைவரால் செப்.,9ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து, காளியப்பன் சார்பதிவாளராக நியமிக்கப்பட்டு, பணிபுரிந்து வந்தார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ராஜகோபால் நேற்று காலை சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்தார். "பதிவுத் துறை தலைவருக்கு சஸ்பெண்ட் செய்ய அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்றம் அக்., 28ல் தீர்ப்பு அளித்துள்ளது. இது குறித்து பதிவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் மீண்டும் பணியில் சேர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, துறைக்கு கடிதம் அனுப்பி விட்டு இன்று முதல் சார்பதிவாளராக மீண்டும் பணியாற்றுவேன்' என, கூறியபடியே, சார்பதிவாளர் சீட்டில் அமர்ந்து, பணிகளை கவனிக்க துவங்கினார்.

தற்போது சார்பதிவாளராக உள்ள காளியப்பன், சிறிது நேரத்தில் அலுவலகத்திற்குள் வந்தார். அவரது இருக்கையில், ராஜகோபால் அமர்ந்திருந்ததை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அவரும் அதே இடத்தில் இருக்கை போட்டு அமர்ந்தார். ஒரே அலுவலகத்தில், இரண்டு சார்பதிவாளர்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அலுவலர்கள் என்ன செய்வது என தெரியாமல் இருந்தனர். பத்திரப்பதிவு பணிகளுக்காக காத்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள், அலுவலகம் துவங்கியவுடன் நடந்த "கூத்தை' குழப்பத்துடன் ரசித்தனர்.

சஸ்பெண்ட் அதிகாரி ராஜகோபால், டேபிளில் இருந்த பைல்களின் பெயர்களை கூப்பிட்டு பதிவு பணிகளுக்காக அழைத்தார். ஆனால், யார் உண்மையான சார்பதிவாளர் என குழப்பம் நீடித்ததால், பொதுமக்கள் யாரும் அலுவலகத்திற்குள் செல்லவில்லை. பணிகள் முழுவதும் ஸ்தம்பித்ததால் அலுவலகம் முன் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். துறை உத்தரவு இல்லாமல் அலுவலக பணிகளை மேற்கொள்ள முயன்றது குறித்து முன்னாள் அதிகாரி ராஜகோபாலிடம் சார்பதிவாளர் காளியப்பன் கேட்டார். அதற்கு, "உயர்நீதிமன்ற தீர்ப்பு இருப்பதால் நான் பணியில் ஈடுபவேன்' என ராஜகோபால் தெரிவித்தார். யாருக்கு பொறுப்பு என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டதால், பதிவாளர் அலுவலகத்தில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டது. உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட பதிவாளர் ராஜகோபால் உடுமலை அலுவலகத்திற்கு வந்தார். சஸ்பெண்ட் அதிகாரி ராஜகோபாலிடம்,"துறை உத்தரவு இல்லாமல் பணியில் சேர முடியாது; முறையான உத்தரவு பெற்ற பின் அலுவலகத்திற்குள் வரவும்' என தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட பதிவாளர் ராஜகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் பணியாற்றியதால் உடுமலை சார்பதிவாளராக இருந்த ராஜகோபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பதிவுத் துறை தலைவர் உத்தரவு இல்லாமல் மீண்டும் அவர் பணியில் சேரமுடியாது. விதிமுறைகளை மீறி சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து அரசு அதிகாரிகளையும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ராஜகோபால் செயல்பட்டுள்ளார். தற்போது, பணியில் உள்ள சார்பதிவாளர் காளியப்பனே தொடர்ந்து இந்த பணியில் நீடிப்பார். அவரிடம் மேற்கொள்ளப்படும் பதிவுகளே செல்லும். முறையான உத்தரவுகள் இல்லாமல் அரசு அலுவலகத்தில் நுழைந்து இடையூறு மற்றும் குழப்பம் ஏற்படுத்தியவர் மீது உடுமலை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.

கோவையில் பல கோடி சுருட்டல் ; நூதன மோசடி


கோவை : கோவையில் நூதன பிசினசில் இறங்கிய தனியார் நிறுவனம், மக்களிடம் முதலீடு பெற்று பல கோடி ரூபாயை சுருட்டிவிட்டதாக, அதிர்ச்சி புகார் கிளப்பியுள்ளனர் முதலீட்டாளர்கள். கோவை, சாயிபாபா காலனியில், "யூரோபே அசோசியேட்ஸ்' எனும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தின் பெயரில், ஐயாயிரம் ரூபாய் செலுத்தினால், ஒரு அடையாள எண் வழங்கப்படும் என்றும், அதை பயன்படுத்தி "ஆன்-லைனில்' குறிப்பிட்ட சில விளம்பரங்களை ரெகுலராக பார்க்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால், ஆன்-லைனில் வெளியாகும் விளம்பரக் கட்டணத்தில், 50 சதவீதத்தை வாடிக்கையாளருக்கு வழங்குவதாகவும், இந்நிறுவனம் அறிவித்தது.

இதை நம்பி, பலர் இத்திட்டத்தில் இணைந்து பணம் செலுத்தினர். மக்களின் நம்பிக்கையை பெற, ஆரம்பத்தில் சிலருக்கு பணம் வழங்கிய நிறுவனத்தினர், கடந்த அக்டோபரில், நிறுவன அலுவலகத்தை மூடி விட்டு "எஸ்கேப்' ஆயினர். அங்கு பணம் செலுத்தி ஏமாந்த சிலர், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நேற்று, கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மோசடியில் பாதிக்கப்பட்டோர் கூறியதாவது: கடந்த 2008ல், ஆன்-லைன் விளம்பரம் பார்க்க, ஐயாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், விளம்பரங்களை பார்ப்பவர்களுக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் வீதம் 12 மாதம் வரை கொடுப்பதாகவும் கூறினர். 10 நாட்களுக்குள் 160 விளம்பரங்களை பார்க்க வேண்டும் என்றனர்.

மோசடியில் ஈடுபட்ட நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களிடம் விளம்பரம் பெற்று தமது இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளது. இதற்காக பெரிய தொகைகளை அவர்களிடம் பெற்றுக் கொண்டது. தமது இணைய தள விளம்பரங்களை பல்லாயிரம் பேர் பார்ப்பதாக "ஹிட்' எண்ணிக்கை கணக்கு காண்பிக்க, எங்களிடமும் பணம் பெற்று விளம்பரங்களை பார்க்க வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்தனர்.

ஸ்வீடன் நாட்டில் தலைமை அலுவலகம் உள்ளதாகவும், இந்தியாவில் டில்லியில் பிரதான அலுவலகம் உள்ளதாகவும் கூறியதை நம்பி ஏமாந்தோம். கோவை, திருப்பூர், ஈரோடு நகரங்களிலும் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. கோவையில் 60 ஆயிரம் நபர்கள் இந்நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். ஒவ்வொருவரும் ஐயாயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.

கடந்த மாதங்களாக சாயிபாபா காலனியில் உள்ள நிறுவனத்தை திறக்க வில்லை. பிற பகுதிகளில் இருந்த அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. நிறுவன உரிமையாளர்கள் மோகன்ராஜ், திருமுருகன் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.10 டிசம்பர் 2009

அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் வாங்கியதாக ஊழியர் மீது புகார்: டீன் விசாரணை

தமிழகத்தில் 2-வது பெரிய ஆஸ்பத்திரியாக திகழ்வது மதுரை அரசு ஆஸ்பத்திரியாகும். தென் தமிழகத்தை சேர்ந்த ஆயிரக் கணக்கான நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இதனால் எப்போதும் கூட்டம் அலை மோதும்.
இங்கு வரும் நோயாளிகளிடம் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலர் லஞ்சம் வாங்குவதாக அடிக்கடி புகார் வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர், திடீர் என சென்று சோதனையிட்டு சிலரை பிடித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் லஞ்சம் வாங்கும் நிலை உருவாகி இருக்கிறது. தற்போது அரசு ஆஸ் பத்திரியிலேயே பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப் பட்டு வருகிறது. இங்கு பாலமேடு பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். இவரது இறப்பு சான்றிதழ் கோரி அவரது உறவினர் பாலமுருகன் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். சான்றிதழுக்கு ரு.150 தந்தால்தான் கொடுக்க முடியும் என சில ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாலமுருகன் போலீசிலும், அரசு ஆஸ்பத்திரி டீன்னிடமும் புகார் தெரிவித்தார். இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் டீன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


09 டிசம்பர் 2009

ரூ 3000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலைப் பொறியாளர் கைது

ஸ்ரீபெரும்புதூர்,டிச,9. மின் இணைப்பு வழங்க ரூ 3000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôரால் கைது செய்யப்பட்டார்.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி இவர் அதே பகுதியில் தான் புதிதாக கட்டும் வீட்டிற்கு மின் இணைப்பு வாங்குவதற்காக கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தண்டலம் கிராமத்தில் உள்ள மின் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். விண்ணப்பித்து நான்கு மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டலம் மின் அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த இளநிலை பொறியாளர் வெங்கடேசனிடம் தெரிவித்துள்ளார். அதற்கு வெங்கடேசன் ரூ.3000 பணம் கொடுத்தால் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

சுப்ரமணி இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸில் புகார் தெரிவித்தார். இதையடுத்து புதன்கிழமை சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸôர் சுப்ரமணியை ரூ 3000 பணத்தை இளநிலைப் பொறியாளர் வெங்கடேசனிடம் கொடுக்கச் சொல்லியுள்ளனர். இதையடுத்து சுப்ரமணியிடம் இருந்து வெங்கடேசன் பணத்தை பெற்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸôர் வெங்கடேசனை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


ரூ.10 ஆயிரம் லஞ்சம் : துணை நில ஆய்வாளர் கைது


சென்னை : இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை நில ஆய்வாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்


இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஜல்லடியன்பேட்டையைச் சேர்ந்தவர் தனசேகர்(42). பி.எஸ்.என்.எல்.,லில் பணிபுரிந்து வருகிறார். குடியிருக்கும் வீட்டிற்கு, சொந்த பெயரில் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்காக, தாம்பரம் நத்தம் நில வரித்திட்டம், துணை நில ஆய்வாளர் கபிலனை(52) அணுகினார். பட்டா வழங்குவதற்கு கபிலன், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதில் முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் நேற்றும், மீதி 40 ஆயிரம் ரூபாயை வரும் வெள்ளிக்கிழமை அன்றும் தரும்படி தனசேகரிடம் கூறினார். இதுகுறித்து தனசேகர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை நகர் பிரிவு-1 டி.எஸ்.பி.,க்கள் நடராஜன், திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், கஜேந்திரவரதன், குமரகுருபரன், லட்சுமிகாந்தன் ஆகியோர் நேற்று காலை தாம்பரம் தாசில்தார் அலுவலகத்தில் மறைந்திருந்து கண்காணித்தனர்

தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள டீ கடைக்கு தனசேகரை வரவைத்த கபிலன், லஞ்சப் பணம் 10 ஆயிரம் ரூபாயை வாங்கினார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கபிலனை கையும், களவுமாக கைது செய்தனர். கபிலனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், கபிலனின் பாக்கெட்டில் இருந்த 26 ஆயிரத்து 800 ரூபாயையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர். பின், கபிலனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
08 டிசம்பர் 2009

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்: வீடியோ ஆதாரத்தால் சிக்கினார்

திருப்பூரில் சிட்டா அடங்கல் வழங்க 4,500 ரூபாய் லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ.,வை சஸ்பெண்ட் செய்து, ஆர்.டி.ஓ., சையத் ஹூமாயூன் உத்தரவிட்டார். நில அளவையர் சண்முகம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருப்பூர் தாராபுரம் ரோடு நாச்சிமுத்து கவுண்டர் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர், திருப்பூர் தாலுகா அலுவலகம் நில அளவைத் துறைக்கு சிட்டா அடங்கல் கோரி விண்ணப்பித்தார். நகர வி.ஏ.ஓ., பொன்னுசாமி மற்றும் நில அளவையர் சண்முகம் ஆகியோர் சிட்டா அடங்கல் வழங்க தாமதம் செய்து, ஒரு மாதம் காலம் கடத்தினர். பின், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளனர்.

பக்ரீத் அரசு விடுமுறை தினத்தில், ஜீவானந்தத்தின் வீட்டுக்கு, வி.ஏ.ஓ., பொன்னுசாமி, நில அளவையர் சண்முகம் உதவியாளர்களுடன் வந்து இடத்தை அளந்தனர். பின், லஞ்சமாகக் கேட்ட பணத்தை தரும்படி பேசினர். பேரத்துக்கு பின், 20 ஆயிரமாக லஞ்சப் பணம் குறைக்கப்பட்டு, முன்பணமாக 4,500 ரூபாயை தன் வீட்டுக்கு வெளியே ஜீவானந்தம், வி.ஏ.ஓ.,விடம் கொடுத்தார். இதை, ஜீவானந்தத்தின் சகோதரர் சுப்ரமணியன், வீடியோவில் பதிவு செய்து கொண்டார்.வி.ஏ.ஓ., லஞ்சம் பெற்றது தொடர்பாக, வீடியோ ஆதாரத்துடன் கலெக்டருக்கு புகார் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக வி.ஏ.ஓ., பொன்னுசாமியை ஆர்.டி.ஓ., சையத் ஹூமாயூன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். நில அளவையர் சண்முகம் இட மாற்றம் செய்யப்பட்டு, அவரிடம் சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடக்கிறது.

04 டிசம்பர் 2009

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.22 ஆயிரத்து 670 பறிமுதல்; லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கியது

ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 4-
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் தேன்ராஜன். இவருக்கு சொந்தமான வேன் கடந்த 23.11.09 அன்று கிருஷ்ணன்கோவில் அருகே விபத்துக்கு உள்ளானது. அந்த வேன் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவகத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வேனை எடுத்து வருவதற்காக தேன்ராஜன் தனது டிரைவர் குருசாமி என்பவரை அனுப்பினார். இதற்காக குருசாமி வட்டார போக்கு வரத்து அலுவலகத்துக்கு சென்றார்.
அப்போது அங்கு பணியில் இருந்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கணேஷ் சுப்பிரமணியம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் வேனை விடமுடியும் என்று கூறிய தோடு ஆர்.சி.புக் மற்றும் சான்றிதழ்களையும் வாங்கி வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி டிரைவர் குருசாமி தனது உரிமையாளர் தேன் ராஜனிடம் கூறினார். இதையடுத்து தேன்ராஜன் விருதுநகர் லஞ்சஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
போலீசாரின் அறிவுரைப்படி டிரைவர் குருசாமி நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரம் பணத்துடன் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்றார். ஆய்வாளர் கணேஷ் சுப்பிரமணியனிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். ஆனால் அதனை வாங்க மறுத்த கணேஷ் சுப்பிரமணியம் உங்களுடைய ஆர்.சி.புத்தகம் மற்றும் சான்றிதழ்களை விருதுநகருக்கு அனுப்பி விட்டேன் என்றும், அங்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் கூறினார்.
அந்த சமயம் வெளியில் காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு குலோத்துங்க பாண்டியன் தலைமையில் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அவர்களை கண்டதும் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அங்கு உலாவிக்கொண்டிருந்த புரோக்கர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து இரவு 10 மணி வரை போலீசார் நடத்திய சோதனையில் ஏஜெண்டுகள் சரவணன், கண்ணன் ஆகியோரிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 670 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஆய்வாளர் கணேஷ் சுப்பிரமணியம், தற்காலிக ஊழியர் சிங்காரம் ஆகியோரிடம் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு குலோத்துங்க பாண்டியன் தெரிவித்தார்.


03 டிசம்பர் 2009

திருச்சியை சேர்ந்தவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொறையாறு சப்-இன்ஸ்பெக்டர் கைது

நாகை மாவட்டம் பொறையாறு அருகே காழியப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ்(வயது 65). இவர் சில ஆண்டுகளாக திருச்சியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்தாஸ் திருக்கடையூரை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் நிலம் வாங்க ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்து ஒப்பந்தம் செய்தார்.
அப்போது ஒப்பந்த காலத்திற்குள் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தருவதாக அருள்தாசிடம், பாலமுருகன் தெரிவித்தார். ஆனால் ஒப்பந்தக்காலம் முடிந்து பல மாதங்களாகியும் அருள்தாசின் பெயருக்கு நிலம் பத்திரப்பதிவு செய்யப்படவிலலை.
இதனால் அருள்தாஸ் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவை பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன்(52) ரூ.45 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அருள்தாஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், மீது நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மாணிக்கவாசகத்திடம் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி முதல் தவணையாக ரூ.20 ஆயிரம் பணத்தை பொறையாறு போலீஸ் நிலையத்தில் வைத்து தருவதாக சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் அருள்தாஸ் கூறினார்.
அதன்படி நேற்று மாலை ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு பொறையாறு போலீஸ் நிலையத்திற்கு அருள்தாஸ் சென்றார். பணத்தை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் அருள்தாஸ் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மேஜையில் வைத்தார்.
அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மாணிக்க வாசகம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சித்திரவேலு மற்றும் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்தனர்.

இதன் பின் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனை போலீசார் கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் லஞ்சஒழிப்பு போலீசார் பொறையாறில் குணசேகரன் தங்கியிருந்த தனியார் லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.