புதியவை :

Grab the widget  Tech Dreams

03 டிசம்பர் 2009

திருச்சியை சேர்ந்தவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொறையாறு சப்-இன்ஸ்பெக்டர் கைது

நாகை மாவட்டம் பொறையாறு அருகே காழியப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ்(வயது 65). இவர் சில ஆண்டுகளாக திருச்சியில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்தாஸ் திருக்கடையூரை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் நிலம் வாங்க ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்து ஒப்பந்தம் செய்தார்.
அப்போது ஒப்பந்த காலத்திற்குள் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தருவதாக அருள்தாசிடம், பாலமுருகன் தெரிவித்தார். ஆனால் ஒப்பந்தக்காலம் முடிந்து பல மாதங்களாகியும் அருள்தாசின் பெயருக்கு நிலம் பத்திரப்பதிவு செய்யப்படவிலலை.
இதனால் அருள்தாஸ் பொறையாறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகார் மனுவை பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன்(52) ரூ.45 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அருள்தாஸ் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், மீது நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மாணிக்கவாசகத்திடம் புகார் செய்தார்.
இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி முதல் தவணையாக ரூ.20 ஆயிரம் பணத்தை பொறையாறு போலீஸ் நிலையத்தில் வைத்து தருவதாக சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் அருள்தாஸ் கூறினார்.
அதன்படி நேற்று மாலை ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு பொறையாறு போலீஸ் நிலையத்திற்கு அருள்தாஸ் சென்றார். பணத்தை சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனிடம் அருள்தாஸ் கொடுத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மேஜையில் வைத்தார்.
அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு மாணிக்க வாசகம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், சித்திரவேலு மற்றும் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்தனர்.

இதன் பின் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரனை போலீசார் கைது செய்து நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் லஞ்சஒழிப்பு போலீசார் பொறையாறில் குணசேகரன் தங்கியிருந்த தனியார் லாட்ஜில் அதிரடி சோதனை நடத்தினர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக