புதியவை :

Grab the widget  Tech Dreams

30 செப்டம்பர் 2009

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ பஞ்சநாதன் ., கைது

திருப்புத்தூர்: பட்டா மாறுதலுக்கு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வடக்கு இளையாத்தகுடி வி.ஏ.ஓ., பஞ்சநாதன் கைது செய்யப்பட்டார். திருப்புத்தூர் அருகிலுள்ள சேவினிப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் (70). இவருக்கு சொந்தமான 94 சென்ட் நிலத்தை மருமகள் உலகி பெயருக்கு, திருப்புத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்து கொடுத்தார்.

இந்நிலத்திற்கான பட்டா மாறுதலுக்கு உலகி, சகோதரர் ராசுவுடன் வடக்கு இளையாத்தகுடி வி.ஏ.ஓ., பஞ்சநாதனிடம் மனு கொடுத்தார். அவர் பட்டா மாறுதலுக்கு ரூ. ஐந்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு தொகை தங்களிடம் இல்லை என இருவரும் கூறினர். முதல் தவணையாக ரூ.1,500 கொடுங்கள், மீதி தொகையை பட்டா வந்த பின் தாருங்கள்' என பஞ்சநாதன் கறாராக கூறினார். இது குறித்து ராசு, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தந்தார்.

போலீசார் யோசனைப்படி நேற்று மாலையில் பஞ்சநாதனிடம் ரூ.1,500 ஐ ராசு லஞ்சமாக கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் கூடுதல் எஸ்.பி., குமாரசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் பாண்டியராஜன்,ராஜா குழுவினர், கையும் களவுமாக பஞ்சநாதனைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கண்ணதாசன் கைது





மதுரை: மதுரை வடக்கு தாலுகாவில் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கண்ணதாசன், இளநிலை உதவியாளர் சங்கரன் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் ஜான்கென்னடி. பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு விடுகிறார்.

மதுரை அருகே வரிச்சியூரில் கிரானைட் கற்களை அள்ளியது தொடர்பாக வி.ஏ.ஓ., மற்றும் பொதுமக்கள் அவரது இயந்திரத்தை சிறைப் பிடித்து, மதுரை கலெக்டரிடம் ஒப்படைத்தனர். அவர், ஜான்கென்னடிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார். தொடர் நடவடிக்கையாக மதுரை வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு பைல் அனுப்பப்பட்டது. ஜான் கென்னடி, மதுரை வடக்கு தாலுகா அலுவலகம் சென்று துணை தாசில்தார் கண்ணதாசனை சந்தித்தார். அவரும், இளநிலை உதவியாளர் சங்கரனும் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். ஜான்கென்னடி மறுத்து பேரம் பேசினார். நீண்ட நேர அலைக்கழிப்புக்கு பின் 2,300 ரூபாய்க்கு ஒப்புக் கொண்டனர்.

ஜான் கென்னடி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி பணம் கொடுக்க மதியம் 3.45 மணிக்கு வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். போலீசாரின் யோசனையின் படி, ஜான் கென்னடி பணத்தை கொடுத்தபோது, அதை பெற்றுக்கொண்ட துணை தாசில்தார் கண்ணதாசனையும், இளநிலை உதவியாளர் சங்கரனையும் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். வடக்கு தாலுகா அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் இழுத்துப் பூட்டப்பட்டன. தாசில்தார் இளமதி அலுவலகத்தில் இல்லை. அலுவலகம் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. தாசில்தார் மேஜையில் இருந்து பொக்லைன் இயந்திர சாவி மீட்கப்பட்டு, உரிமையாளர் ஜான்கென்னடியிடம் ஒப்படைக்கப்பட்டது. லஞ்சம் வாங்கியதாக பிடிபட்ட அலுவலர்கள் இருவரையும் அங்கேயே வைத்து நீண்ட நேரம் விசாரித்தனர்.

பூந்தமல்லி போக்குவரத்து சோதனை சாவடிகளில் ரூ. 55 ஆயிரம் லஞ்ச பணம் சிக்கியது.

பூந்தமல்லி போக்குவரத்து சோதனை சாவடியைச் சேர்ந்த போலீசார் வாகனங்களில் வருவோரிடம், போக்குவரத்து விதியை மீறியதாக கூறி பணவசூல் வேட்டை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அந்த சோதனை சாவடிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ரூ. 55 ஆயிரம் லஞ்ச பணம் சிக்கியது.

இதுபற்றி அங்கிருந்த போலீசாரிடம் கேட்டபோது, இது எங்கள் பணம் இல்லை. யார் பணம் என்றே தெரியாது என்று மறுத்தனர். இதையடுத்து அந்த சாவடியில் பணியாற்றும் 10 போலீசாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

ரூ. 10 ஆயிரம் லஞ்சம் - விவசாயத் துறை அலுவலக ஆடிட்டர் நாகராஜன்,உதவியாளர் வெங்கடாசலம் கைது.

சென்னை, செப். 30-

சென்னை சேப்பாக்கம் வேளாண்துறை மண்டல தணிக்கை அலுவலகத்தில் ஆடிட்டராக இருப்பவர் நாகராஜன் (53). இவரது உதவியாளர் வெங்கடாசலம்.

சில நாட்களுக்கு முன்பு நாகராஜன் சிட்லபாக்கத்தில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வெங்கடாசலத்துடன் சென்றார். அப்போது அவர் தணிக்கை செய்தபோது அம்மையத்தில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்தார்.

பின்னர் அவர், மைய பொறுப்பாளர் ரகுராமனிடம் சென்று உங்கள் மையத்தில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் என்றார். இதற்கு ரகுராமன் சம்மதித்தார்.

பின்னர் ரகுராமன் இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகுராமனிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தனர். அவர் அந்த நோட்டுக்களை உதவியாளர் வெங்காசலத்திடம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாய்ந்து வந்து வெங்கடாசலம், நாகராஜனை கைது செய்தனர். பின்னர் அவர்கள் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

29 செப்டம்பர் 2009

லஞ்சம் - போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்ட் .



மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் அதிவீரராமபாண்டியன். கடந்தாண்டு குற்றவழக்குகள் தொடர்பான தனிப்படையில் இருந்தார். அப்போது குற்றவாளி ஒருவரை வழக்கில் இருந்து விடுவிக்க, ஏட்டு கண்ணன் என்பவர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

"இன்ஸ்பெக்டர் கூறியபடிதான் லஞ்சம் வாங்கினேன்' என்று அவர் வாக்குமூலம் கொடுத்தார். முதல் குற்றவாளியாக அதிவீரராமபாண்டியன் வழக்கில் சேர்க்கப்பட்டார். இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு நேற்று கமிஷனர் நந்தபாலனுக்கு லஞ்சஒழிப்புத்துறை பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

26 செப்டம்பர் 2009

நண்டலாறு சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை.

பொறையாறு, செப். 26: நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாறு அருகேயுள்ள நண்டலாறு காவல் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸôர் சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டதில் ரூ.4,785 லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது.

பொறையாறு அருகே நண்டலாற்றுப் பகுதியில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் எல்லையையொட்டி, காவல் சோதனைச் சாவடி உள்ளது.

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, அதிகமான வாகனங்கள் இந்த எல்லையைத் தாண்டி செல்லும் போது, அந்த வாகனங்களை சோதனைச் சாவடியில் நிறுத்தி கட்டாய வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை ஆய்வுக் குழு அலுவலர் மதுரம், நாகப்பட்டினம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி மாணிக்கவாசகம், ஆய்வாளர் சித்திரவேல் ஆகியோர் நண்டலாறு சோதனைச் சாவடியில் சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பணியிலிருந்த திருவெண்காடு காவல் ஆய்வாளர் சுவாமிநாதன், பொறையாறு காவல் உதவி ஆய்வாளர் தர்மராஜ், தலைமைக் காவலர்கள் நாராயணசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் சட்டைப் பை, மோட்டார் சைக்கிள் டேங்க் கவர் ஆகியவற்றிலிருந்து ரூ. 4,785 லஞ்சப் பணம் கைப்பற்றப்பட்டது.

மேலும், அங்கு சோதனை செய்ததில், வாகனத் தணிக்கையின்போது பதிவு செய்யப்படும் போலீஸ் நோட்டீஸýகளை நீதிமன்றத்திற்கு அனுப்பாமல் வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவற்றையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எடுத்துச் சென்றனர். சோதனைச் சாவடியில் பணியில் இருந்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அரசு ஊழியரிடம் லஞ்சம் வாங்கிய சார் நிலை கருவூல காசாளர் கைது .


செஞ்சி: ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க, லஞ்சம் கேட்டதாக செஞ்சி சார் நிலை கருவூல காசாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக வேலை செய்பவர் மதியழகன்.


இந்த அலுவலத்தின் மூலம், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆறு பேருக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, ஒரு லட்சத்து மூன்று ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, செஞ்சி சார் நிலை கருவூலத்தில் தயார் நிலையில் இருந்தது. காசோலையை வழங்க, கருவூல காசாளர் ஞானசேகரன் மதியழகனிடம் 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் மதியழகன் புகார் செய்தார்.


லஞ்சப்பணத்தை மதியழகன் கொடுக்கும் போது வெளியே காத்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சுதர்சனன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், குப்புசாமி மற்றும் போலீசார் ஞானசேகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைது செய்த ஞானசேகரனை, விழுப்புரம் கோர்ட்டுக்கு அழைத்துச்சென்றனர். இதுவரை, லஞ்ச வழக்குகளில் பொதுமக்கள் புகார் கொடுப்பது வழக்கம். முதன் முறையாக, அரசு அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் ஒருவரே, மற்றொரு அரசு ஊழியர் மீது லஞ்ச புகார் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 19வது இடம்.

டெல்லி: ஊழல் கரை படிந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் கிடைத்துள்ளது.

வாழ்க்கையின் ஒருங்கிணைந்த ஒரு விஷயமாக இன்று ஊழலும், லஞ்சமும் சேர்ந்து போய் விட்டது. எத்தனை டன் சோப்புப் போட்டாலும் இந்த கரை போகாது என்ற அவல நிலை.

இந்த நிலையில் எந்தெந்த நாடுகளில் ஊழில் மலிந்துள்ளது என்பது குறித்த பட்டியல் ஒன்றை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 19வது இடம் கிடைத்துள்ளது. 10 புள்ளிகளில் இந்தியா 6.8 புள்ளிகளுடன் 19வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகங்களில்தான் பெருமளவில் லஞ்சம் கை மாறுகிறதாம்.

ரஷ்யா, மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளும்போதுதான் பெருமளவில் லஞ்சம் வாங்குகிறார்களாம்.

மேலும் வேலையை வேகமாக முடிப்பதற்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளதாக 30 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

லஞ்சம் மிக மிகக் குறைவாக புழங்கும் நாடுகளில் முதலிடத்தில் இருப்பவை பெல்ஜியம், கனடா நாடுகள்தான். இந்த நாடுகளில் மிகக் குறைந்த அளவில் லஞ்சம் வாங்குகிறார்களாம். இந்த இரு நாடுகளும் லஞ்சம் குறித்த இன்டெக்ஸில் 8.8 புள்ளிகளுடன் உள்ளனர்.

இந்த இரு நாடுகளையும் சேர்ந்த நிறுவனங்கள் பொதுவாக லஞ்சம் தருவதில்லையாம்.

இந்த இரு நாடுகளுக்கும் அடுத்து நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வருகின்றன. இவை 8.7 புள்ளிகளுடன் உள்ளன.

இவற்றுக்கு அடுத்த இடங்களில் உள்ள நாடுகள் - ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து ஆஸ்திரேலியா , அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஸ்பெயின் ஆகியவை.

கடைக்காரரை மிரட்டி ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ரெயில்வே இன்ஸ்பெக்டர் கைது.

கும்மிடிப்பூண்டி பஜாரில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் தங்கராஜ் (46). இந்த கடையில் பாத்திரங்கள் மற்றும் டி.வி., மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களும் விற்பனை செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு தங்கராஜின் பாத்திரக்கடைக்கு கும்மிடிப்பூண்டி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைசாமி வந்தார். கடையின் மேல்தளத்தில் உள்ள டி.வி. ஷோரூமில் பொருட்களை பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெண், ரெயில்வே காப்பர் கேபிள்களுடன் கடைக்கு வந்தார். அதை தங்கராஜிடம் விலைக்கு வாங்கி கொள்ளும்படி கேட்டார். அதற்கு தங்கராஜ் மறுத்துவிட்டார்.

அந்த நேரத்தில் அங்கிருந்த ரெயில்வே இன்ஸ்பெக்டர் துரைசாமி அந்த பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார். விசாரணையில் அந்த பெண் ரெயில்வே காப்பர் கேபிளை திருடியது தெரிய வந்தது.

உடனே இன்ஸ்பெக்டர் துரைசாமி கடைக்கு போன் பண்ணி தங்கராஜிடம் பேசினார். நான் வழக்கு போட்டால் உன் கடை பெயர் கெட்டுபோகும். ஜென்மத்துக்கும் நீ வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது. நான் ஏட்டை அனுப்பி வைக்கிறேன் ரூ.40 ஆயிரம் கொடுத்து விடு. நான் வழக்கில் உன்னை சேர்க்காமல் விட்டு விடுகிறேன் என்றார்.

அதை கேட்டு தங்கராஜ் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து 10 நாட்களாக போனில் தொந்தரவு செய்து கடைசியாக ரூ.30 ஆயிரமும் ஒரு ஹோம் தியேட்டரும் கொடு என்று கேட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டரின் போன் மிரட்டலை தங்கராஜ் செல்போனில் பதிவு செய்துள்ளார். இதுபற்றி சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுத்தார்.

சி.பி.ஐ. போலீஸ் டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் மாறுவேடத்தில் 2 கார்களில் கும்மிடிப்பூண்டி சென்றனர்.

தங்கராஜின் பாத்திரக்கடையில் லஞ்சம் வாங்குவதற்காக துரைசாமி காத்து இருந்தார். கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டதால் பஜாருக்கு வரும்படி தங்கராஜ் அழைத்தார். தங்கராஜ் பவுடர் தடவிய ரூ.500 நோட்டு கட்டுகளுடன் காரில் சென்றார். அந்த காரில் ஒரு சி.பி.ஐ. போலீஸ் அதிகாரியும் நண்பர் போல் இருந்து கொண்டார்.

பஜாரில் காரை நிறுத்தி இன்ஸ்பெக்டர் துரைசாமியிடம் பணத்தை கொடுத்தார். காரில் ஏறி அமர்ந்து பணத்தை எண்ணி பார்த்து வாங்கி கொண்டார். ரூ.40 ஆயிரம் கிடைத்த மகிழ்ச்சியில் அதை வாங்கி பேண்ட் பாக்கெட்டில் வைத்தப்படி கீழே இறங்கினார்.

உடனே தயாராக இருந்த சி.பி.ஐ. போலீசார் அவரை கைது செய்தனர். நள்ளிரவு வரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

தர்மபுரி அருகே ரூ. 1500 லஞ்சம் வாங்கிய ஊராட்சி உதவியாளர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கேத்துவட்டிப்பட்டி ஊராட்சியில் உதவியாளராக இருப்பவர் சரவணன் (வயது 34). இதே பஞ்சாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தண்ணீர் திறப்பாளராக கோபால் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

கோபாலுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வு நிலுவைத் தொகை வந்தது. அந்த தொகைக்காக காசோலையை கேட்டபோது ஊராட்சி உதவியாளர் சரவணன் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் ரூ. 1500 பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து கோபால் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்படி இன்று காலை கோபால், ஊராட்சி உதவியாளர் சரவணனுக்கு ரூ. 1500 லஞ்சம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நாச்சியப்பன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜன் ஆகியோர் சரவணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
1 1

போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் நடராஜன், கணேசன்

எண்ணூர் : ஷேர்ஆட்டோக்களில் அபராதத்திற்கு மேல் "கெடு பிடி' வசூலித்த போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் உட்பட நான்கு பேர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் சிக்கினர்.
சென்னையை அடுத்த எண்ணூர், மணலி, மணலி புதுநகர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஷேர்ஆட்டோக்களில் கெடு பிடி வசூல் நடத்துவதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் குவிந்தன. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையில், மாறுவேடத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
அப்போது, போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் நடராஜன், கணேசன், தலைமை காவலர்கள் சுந்தர், அருணாச்சலம் ஆகியோர் அப ராத கட்டணத்துடன் கூடுதலாக வசூல் செய்தனர். அவர்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். கையும் களவுமாக பிடிபட்ட போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் உட்பட நான்கு பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

25 செப்டம்பர் 2009

திருவண்ணாமலை மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் கைது .

திருவண்ணாமலை: பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த ஓராண்டுக்கு முன் புதிய மண் பாடி லாரி ஒன்றை வாங்கினார்.

இதை பாடி கட்டி, "ரிஜிஸ்ட்ரேஷன்' செய்யாமல் கடந்த ஓராண்டாய் லாரியை வாடகைக்கு விட்டு வந்தார். இது குறித்த தகவல் மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரனுக்கு நேற்று முன்தினம் தெரிந்தது. லாரியை நேற்று முன் தினம் இரவுகண்ணனின் லாரியில் மணல் லோடு ஏற்றி சென்றபோது குணசேகரன் பறிமுதல் செய்தார். அப்போது, குணசேகரன், ""50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் லாரியை விடுவிப்பதாகவும், வாகன பதிவு செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக,'' கண்ணனிடம் தெரிவித்தார்.

கண்ணன் லாரியில் இருந்த மணலை இறக்கவிட்டு லாரியை ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு கொண்டு வருவதாக கூறிவிட்டு முதல் தவணையாக 15 ஆயிரம் ரூபாயை குணசேகரனிடம் கொடுத்தார். இரண்டாவது தவணையாக 10 ஆயிரம் ரூபாயைநேற்று கொடுப்பதாக கூறினார். கண்ணன் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி கண்ணன் நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த குணசேகரனிடம் 10 ஆயிரத்தை கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., ராமேஸ்வரி தலைமையிலான போலீசார் குணசேகரனை கைது செய்தனர்.

குணசேகரன் வீடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டியில் உள்ளது. அவரது வீட்டை சோதனை நடத்த திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரனுக்கு உத்தரவிட்டார். டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் உள்ளிட்ட குழுவினர் நேற்று சாமல்பட்டியில் உள்ள குணசேகரன் வீட்டை ஆர்.ஐ., சேகர் மற்றும் வி.ஏ.ஓ., முன்னிலையில் சோதனை நடத்தின

ர். அப்போது, குணசேகரன் மத்தூர் யூனியன் நாராலப்பள்ளி ஒன்னக்கரை பகுதியில் 40 ஏக்கர் நிலம் வாங்கி மாந்தோட்டம் அமைத்திருப்பதும், குணசேகரின் மனைவி சாந்தி பெயரில் சாமல்பட்டியில் பழைய திருமண மண்டபத்தை விலைக்கு வாங்கியிருப்பதும் தெரிந்தது. சமீபத்தில் ஸ்கார்பியோ, இன்டிகா என இரு கார்கள் வாங்கியிருப்பதும், அவரது மகன் மற்றும் மகளை 20 லட்சம் ரூபாய் கொடுத்து டாக்டர் படிக்க சேர்த்து இருப்பது உள்ளிட்ட பல்வேறு சொத்து மற்றும் ரொக்க பணம், நகை உள்ளிட்ட விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சேகரித்தனர். அது குறித்த ஆவணங்களையும் கைப்பற்றினர்.


ரூ. 3,500 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, விவசாய கிணற்றுக்கு மின் இணைப்பு பெற சான்றிதழ் வழங்க, 3,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (55); குருபரப்பள்ளி வி.ஏ.ஓ.,வாக பணிபுரிகிறார்.

தற்போது, மாரசந்திரம் வி.ஏ.ஓ.,வாக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். மாரசந்திரத்தை அடுத்த குரல்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஜெயவேலன் (27). இவர், தனக்கு சொந்தமான விவசாயக் கிணறுக்கு, மின் இணைப்பு பெற சான்றிதழ் வேண்டி, வி.ஏ.ஓ., கோவிந்தராஜிடம் விண்ணப்பித்தார். சான்றிதழ் வழங்க நான்காயிரம் ரூபாய் லஞ்சம் தரும்படி கோவிந்தராஜ் கேட்டதற்கு, 3, 500 ரூபாய் தருவதாக ஜெயவேலன் ஒப்புக்கொண்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெயவேலன், இதுகுறித்து, கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் அறிவுரைப்படி,ஜெயவேலன் நேற்று முன்தினம் இரவு, கட்டிகானப்பள்ளியில் உள்ள வி.ஏ.ஓ., கோவிந்தராஜ் வீட்டுக்கு சென்று, அவரிடம் 3,500 ரூபாய் கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கோவிந்தராஜை கைது செய்தனர்.

ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ - மணிவண்ணன் கைது .






கள்ளக்குறிச்சி: சொத்து மதிப்புச் சான்று பெற, 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம் திருக்கணங்கூரில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றுபவர் மணிவண்ணன்.

இவரிடம், திருக்கணங்கூர் காட்டுக்கொட்டகையில் வசிக்கும் ரவிக்குமார், கடந்த இரு தினங்களுக்கு முன், சொத்து மதிப்புச் சான்றிதழ் கேட்டார். வி.ஏ.ஒ., மணிவண்ணன், 2,000 ரூபாய் எடுத்துக் கொண்டு, கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி கூறினார். விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு, ரவிக்குமார் தகவல் கொடுத்தார். போலீசார் அறிவுரையின்பேரில், நேற்று மதியம் 1.45 மணிக்கு கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் உள்ள வி.ஏ.ஓ., வீட்டிற்குச் சென்று, 2,000 ரூபாய் பணத்தை கொடுத்தார். டி.எஸ்.பி., சுதர்சன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், குப்புசாமி, ஏட்டு ரவி ஆகியோர் லஞ்சப் பணத்துடன் கையும், களவுமாக வி.ஏ.ஓ., மணிவண்ணனை கைது செய்து, விழுப்புரத்திற்கு கொண்டு சென்றனர்.

24 செப்டம்பர் 2009

லஞ்சம் வாங்கிய ஊராட்சி உதவியாளர் சரவணன் கைது .

தர்மபுரி: தர்மபுரி அருகே 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி உதவியாளரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கேத்துரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோபால்(52).

கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சி டேங்க் ஆபரேட்டர். இவருக்கு, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, நிலுவைத் தொகை வர வேண்டியிருந்தது. நிலுவைத் தொகையை வழங்கும்படி, ஊராட்சி உதவியாளர் சரவணனிடம்(34) கோபாலின் மகன் தர்மராஜ்(31) கேட்டுள்ளார். அதற்கு சரவணன், இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டார். 1,500 ரூபாய் தருவதாக தர்மராஜ் ஒப்புக்கொண்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தர்மராஜ், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி, நேற்று ஊராட்சி அலுவலகம் சென்ற தர்மராஜ், சரவணனிடம் 1,500 ரூபாய் பணம் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், சரவணனை கைது செய்தனர்.

இந்திய உணவு கழகத்தில் லஞ்சம்

சென்னை: இந்திய உணவு கழகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சப் பணத்தை கம்ப்யூட்டர் அறையில் ஒளித்து வைத்த அலுவலக உதவியாளர் சீனிவாசன் உட்பட ஒன்பது பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள இந்திய உணவுக் கழக பொது மேலாளர் ஜெயக்குமார் அலுவலகத்தில் சமீபத்தில் சி.பி.ஐ., தனிப்படையினர் திடீர் சோதனை நடத்தினர். அதில், லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் சிக்கியது. துணை பொது மேலாளர் துரைராஜ் உட்பட உணவுக் கழக அதிகாரிகள் எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். கிரீம்ஸ் சாலையில் சி.பி.ஐ., தனிப்படையினர் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, லஞ்சப் பணத்துடன் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.

சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு எதிரேயுள்ள இந்திய உணவுக் கழக அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டர் அறையில் பணத்தை மறைத்துவைத்த தகவல் சி.பி.ஐ., விசாரணையில் தெரியவந்துள்ளது. மொத்தம் எட்டு பேர் மீது வழக்கு தொடர்ந்த சி.பி.ஐ., போலீசார், அவ்வழக்கில் சீனிவாசன் பெயரையும் தற்போது சேர்த்துள்ளனர். பொது மேலாளர், துணை மேலாளர் "பை-பாஸ்' ஆபரேஷன் செய்தவர்கள் என்பதால் மருத்துவமனையில் "அட்மிட்' ஆகினர்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினால், சி.பி.ஐ., போலீசார் கைது செய்யக் கூடும் என்பதால், தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய உணவுக் கழக அதிகாரிகள் ஒன்பது பேரையும், டில்லியில் உள்ள உயர் அதிகாரிகள் நேற்று பிற்பகல் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழக அளவில் இந்திய உணவுக் கழகத்தில் புரோக்கர்களை நியமித்து லஞ்சம் வாங்கிய, "டாப் 9' அதிகாரிகள்.

23 செப்டம்பர் 2009

வீடியோ பிரிவு போலீசாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

நெல்லையில் உள்ள வீடியோ கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி ரோந்து சென்று வீடியோ கடைகளில் திருட்டு வி.சி.டி.க்கள் உள்ளதா என்று சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்கள் பல இடங்களில் பணம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. மனோகர குமார், இன்ஸ்பெக்டர் எங்கால், மாவட்ட ஆய்வு குழு அதிகாரி நாராயணன் மற்றும் போலீசார் வீடியோ கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது வீடியோ கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற் றும் போலீஸ் ஏட்டுகள் ஒரு ஜீப்பில் தியாகராஜ நகர் பகுதியில் சென்று கொண்டு இருப்பதாக தக வல் கிடைத்தது.

உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார்¢ விரைந்து சென்று வீடியோ கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் ஜீப்பை மடக்கி அதிரடி சோதனை செய்தனர்.

அப்போது அந்த ஜீப்பில் ரூ.2500 பணம் ரொக்க மாக கிடந்தது. மேலும் 919 திருட்டு சி.டி.க்களும் இருந்தன. அவைகள் யாருடையது என்று விசாரணையில் தெரியவில்லை.

இதனால் ஜீப்பில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் 2 போலீஸ் ஏட்டுகள் மீது இலாகப்பூர்வ நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது துறை வாரியான விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலவச மின் இணைப்புக்காக ரூ.500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது; தலையாரியும் பிடிபட்டார்


மருங்காபுரி அருகே உள்ள யாகபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.விவசாயி. இவர் வீட்டுக்கு ஒரு மின் விளக்கு திட்டத்தில் தனது வீட்டுக்கு இலவச மின் இணைப்பு கேட்டு துவரங்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் மனு செய்தார்.

அதற்கு கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் வாங்கி வரும்படி மின் அதிகாரிகள் கூறினர்.

இதனால் செல்வராஜ் மருங்காபுரி பொறுப்பில் உள்ள தென்முகம் இடையப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தங்கவேலு (55)விடம் சென்று தனக்கு வருமான சான்றிதழ் தரும்படி கேட்டார்.

அதற்கு தங்கவேலு ரூ.500 லஞ்சம் கேட்டார். இதனால் மனவேதனை அடைந்த செல்வராஜ் இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு அம்பிகாபதி திட்டப்படி இன்று காலை செல்வராஜ் ரசாயன பவுடர் தூவப்பட்ட 500 ரூபாய் நோட்டை கிராம நிர்வாக அதிகாரி தங்கவேலுவிடம் கொடுக்க சென்றார்.

அந்த பணத்தை தலையாரி வெள்ளைச்சாமி(54) வாங்கி தங்கவேலுவிடம் கொடுத்தார். உடனே மறைந்து இருந்த டி.எஸ்.பி. அம்பிகாபதி, இன்ஸ் பெக்டர்கள் பிரசன்னா, வெங்கடேஷ், கோவிந்தராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் தங்கவேலுவையும், வெள்ளைச்சாமியையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பிறகு அவர்களிடம் விசாரணை செய்வதற்காக திருச்சிக்கு அழைத்து சென்றனர். மேலும் தங்கவேலு மற்றும் வெள்ளைச்சாமி வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

கோவை ஊழியர்களிடம் லஞ்சம்: கூட்டுறவு சங்க அதிகாரிகள் 4 பேர் கைது .

கோவை கோபாலபுரத்தில் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு 34 சதவீதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது.

கோவை கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு சம்பள நிலுவை தொகையாக ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டது. இந்த தொகையை ஊழியர்களுக்கு 2 மாதத்திற்கான நிலுவை தொகையை மட்டும் வழங்கி விட்டு 6 மாதத்தொகையை உயர் அதிகாரிகள் சிலர் அபகரித்துள்ளனர்.

இது குறித்து ஊழியர்கள் சிலர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் கொடுத்தனர். அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சண்முகபிரியா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஞான சேகரன், சுந்தராஜன், கருணாகரன், ஜெரால்ட் ஆகியோர் அடங்கிய குழு கூட்டுறவு சங்க அலுவலகத்தில் திடீர் என சோதனை நடத்தியது.

அப்போது சங்க துணை பதிவாளர் நாகராஜு 2 லட்சமும், தனி அலுவலர் ரத்தினசபாபதி 1 லட்சமும், கூட்டுறவு சங்கத்தின் செயலாளரும் நாமக்கல் கிளை மேலாளருமான முருகேஸ் 3 லட்சம் என 6 லட்சத்தை பிரித்து வைத்திருந்தனர். அந்த 6 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ஈரோடு மாவட்டம் இலவமலை வீட்டு வசதி கூட்டுறவு சங்க செயலாளர் சக்திகனகரத்தினம் என்பவரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சாப்பாடு சீட்டு கொடுக்க லஞ்சம் வாங்கிய ஊழியர் ரகசிய காமிரா மூலம் சிக்கினார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தினசரி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். மேலும் பல்வேறு மாவட்டங்களில் விபத்தில் சிக்குபவர்களும் இங்கு சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரியில் பொதுமக்களிடம் கூட்டம் எப்போதும் அலைமோதும்.

இதை சில ஆசாமிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆஸ்பத்திரி ஊழியர் போல் வார்டுகளுக்குள் சென்று அங்கு நோயாளிகளின் செல்போன், பணம் ஆகியவற்றை திருடி சென்ற வண்ணம் இருந்தனர். மேலும் நோயாளிகளிடம் ஆஸ்பத்திரி ஊழியர்கள் சிலர் பணம் தந்தால்தான் சிகிச்சைக்கு உதவுவோம் என கூறி பணம் பறித்து வந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி சில ஊழியர்களைகையும், களவுமாக பிடித்தனர். ஆனாலும் லஞ்சம் குறைந்தபாடில்லை. இதனால் லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க அரசு ஆஸ்பத்திரி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தமிழகத்திலேயே முதல் முதலாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 32 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த காமிரா அனைத்தும் ஒருங்கிணைந்து டீன் அறையில் உள்ள திரையில் தெரியும்படி இணைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகள் குறித்து கடந்த சில நாட்களாக வெள்ளோட்டம் நடந்து வருகிறது.

இந்த வெள்ளோட்டத்தின் போது உணவு சீட்டு வழங்க நோயாளிகளிடம் ஊழியர் ஒருவர் ரூ.20 லஞ்சம் பெற்றது. காமிராவில் பதிவாகி இருந்தது தெரியவந்தது. உடனே அந்த ஊழியரை டீன் சிவகுமார் அழைத்து கண்டித்தார். பின்னர் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதேபோல் அவசர சிகிச்சை பிரிவில் இரவு பணியாற்றிய ஊழியர் ஒருவர் 18 முறை லஞ்சம் வாங்கியது பதிவாகி இருந்ததும் தெரியவந்தது.

இன்னொரு காட்சியை பார்க்கும்போது சமையல் அறையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் முட்டையை ஆம்ப்லேட் போட்டு சாப்பிட்டதும் பதிவாகி இருந்தது.

லஞ்சம் வாங்கும் பேர் வழிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது இந்த ரகசிய காமிராக்கள். இதில் சிக்குபவர்களை எந்த விசாரணையுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 1

விஜயக்குமார் கைது

சேலம் டவுனில் உள்ள சுகவனேஸ்வரர் கோவிலில் உதவி ஆணையராக பணியாற்றி வந்தவர் விஜயக்குமார்(வயது 45). இவர் கோவில் குருக்களிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.10ஆயிரம் கொடுத்தார். இதை கண்காணித்த சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிகாரி விஜயக்குமாரை கைது செய்தனர்.

பின்னர் அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கரூர் அருகே ரூ.700 லஞ்சம் வாங்கிய கிராம பெண் அதிகாரி சுப்புலட்சுமி கைது


கரூர் அருகே உள்ள தோரணக்கல்பட்டியை சேர்ந்தவர் பாலன். விவசாயி. இவர் வீட்டு மனைபட்டா மாற்ற கோரி கிராம அதிகாரி சுப்புலட்சுமியிடம் விண்ணப்பித்து இருந்தார்.

அப்போது சுப்புலட்சுமி பட்டா மாற்றுவதற்கு ரூ.700 லஞ்சம் தரவேண்டும் என்றார்.

லஞ்சம் பணம் கொடுக்க விரும்பாத பாலன் இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அம்பிகாபதியிடம் புகார் செய்தார்.

போலீசாரின் அறிவுறையின்படி விவசாயி பாலன் இன்று காலை கரூரில் உள்ள கிராம அதிகாரி சுப்புலட்சுமி வீட்டுக்கு சென்றார்.

அவரிடம் ரூ.700 லஞ்ச பணத்தை கொடுத்தார். அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பு லட்சுமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பறிமுதல் செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணவாளக்குறிச்சி போலீஸ் நிலைய ஏட்டு சுப்ரமணியம் கைது.

குமரி மாவட்டம் மணவா ளக்குறிச்சியை அடுத்த கருங்காலிவிளையை சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (வயது 52). வியாபாரி. இவரது மகள் நிஷா(22) சென்னையில் போலீசாக வும், மகன் சுமன் (21) உத்திர பிரதேசத்தில் ரெயில்வே போலீசாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நிலப்பிரச் சினை தொடர்பாக சுயம்பு லிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடியபட் டணத்தை சேர்ந்த வாலண் டின்மேரி(53) என்ற பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண் டிடம் புகார் கொடுத்தார்.அதன்பேரில் எஸ்.பி. உத்த ரவுபடி மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வழக்கை முடித்து இருதரப்பி னரையும் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலைய ஏட்டு சுப்ரமணியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சுயம்புலிங்கத்தை தொடர்பு கொண்டு அந்த வழக்கு இன்னும் முடிய வில்லை. எனவே உங்களின் மகனும், மகளும் வரும் 12-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த 8-ந் தேதி சுயம்புலிங்கம் போலீஸ் நிலையம் சென்று ஏட்டு சுப்ரமணியத்தை பார்த்து எனது மகனும், மகளும் இப்போது வர முடியாத சூழ்நிலையில் உள்ளனர் என கூறினார்.


உடனே ஏட்டு சுப்பிரமணியம் “அப்படியென்றால் ரூ.2 ஆயிரம் கொடு. உன்மகன், மகள் இங்கு வரவேண்டாம். வழக்கை முடித்து விடுகிறேன்” என கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுயம்புலிங்கம் ரூ.1000 தருவ தாக கூறவே சுப்பிரமணியம் அதற்கு ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து சுயம்புலிங்கம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த ஆலோசனைப்படி ரசாயணபொடி தடவிய ரூ.1000-த்தை சுயம்புலிங்கம் நேற்று மாலை சுப்பிரமணி யத்திடம் கொடுக்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியத்தை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

சுபேர்அலி முகமது - உதவி ஆய்வாளர் கைது

திருச்சி மேலக் கல்கொண்டார் கோட்டை யைச் சேர்ந்தவர் முத்துகுமரன். இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் டீசல் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.
இவர்மேலக் கல்கொண்டார் கோட்டையில் புதியதாக வீடு கட்டி உள்ளார். இதற்கு புதிய வரி நிர்ணயம் செய்ய திருச்சிமாநகராட்சி பொன்மலை கோட்ட வருவாய் உதவி ஆய்வாளர் சுபேர்அலி முகமதுவை சந்தித்தார்.
அப்போது சுபேர்அலி முகமது வரி நிர்ணயம் செய்ய தனக்கு ரூ.8 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டார். அதற்கு முத்துக்குமரன் சம்மதிக்கவில்லை. இதனால் சுபேர்அலி முகம்மது அவருக்கு பணி செய்து கொடுக்கவில்லை. மீண்டும் அவரை முத்துகுமரன் சந்தித்தார்.
அப்போது சுபேர் அலி முகமது ரூ.8 ஆயிரத்திற்கு பதில் ரூ.6500 லஞ்சம் கொடுத்தால் வேலையை முடித்து தருவதாக கூறினார்.
இது குறித்து அவர் துணை போலீஸ் சூப்பிரண்டு அம்பிகாபதியிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசாரின் அறிவுரைப்படி இன்று காலை முத்துகுமரன் மேலகல்கண்டார் கோட்டையில் உள்ள அலுவலகம் சுபேர் அலிமுகமதுவிடம் ரூ.6500 பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த போலீசார் சுபேர்அலி முகமதுவை கைது செய்தனர்.

லால்குடி அருகே வாரிசு சான்றுக்கு ரூ.500 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி ராதா கைது


திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பம்பரம்சுத்தி கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் ராதா(வயது52). அதே ஊரை சேர்ந்தவர் நவ்ரளி. இவரது தந்தை இறந்து விட்டதால் அதற்கு வாரிசு சான்றிதழ் கேட்டு ராதாவிடம் விண்ணப்பித்து இருந்தார். வாரிசு சான்றிதழ் வழங்க தனக்கு ரூ.500 லஞ்சம் தரவேண்டும் என்று ராதா கேட்டார்.
இதைத் தொடர்ந்து நவ்ரளி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. அம்பிகாபதி தலைமையில் போலீசார் அங்கு சென்று மறைந்து இருந்தனர். போலீசார் கொடுத்த ரூ.500ஐ நவ்ரளி அதிகாரி ராதாவிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக ராதாவை கைது செய்தனர்.


04 செப்டம்பர் 2009

கல்வித்துறை அதிகாரி மாணிக்கவேல் கைது

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே, பணி நிரந்தரம் செய்ய, தற்காலிக ஆசிரியரிடம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மயிலாடுதுறை அடுத்த பாகசாலை டி.இ.எல்.சி., பள்ளியில், குருபாத நீதிராஜ் என்பவர் தற்காலிக ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது தந்தை தியாகராஜன் தரங்கம்பாடி டி.இ.எல்.சி., துவக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிகிறார்.

குருபாத நீதிராஜை பணி நிரந்தரம் செய்ய, செம்பனார்கோவில் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் மாணிக்கவேல், அதிகாரிகளுக்கு 75 ஆயிரம் ரூபாயும், தனக்கு 50 ஆயிரம் ரூபாயும் சேர்த்து, ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். முதல் கட்டமாக நேற்று முன்தினம் 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் படி குருபாத நீதிராஜை கட்டாயப்படுத்தியுள்ளார்மாணிக்கவேல்.
குருபாத நீதிராஜின் தந்தை தியாகராஜன், நாகை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் வழிகாட்டுதல் படி, தியாகராஜன், கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் மாணிக்கவேலுவிடம் தற்போது 50 ஆயிரம் ரூபாய் தர இயலாது. 10 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, தரங்கம்பாடி டி.இ.எல்.சி., பள்ளிக்கு மாணிக்கவேலுவை வரவழைத்துள்ளார்.
இரவு 8.30 மணிக்கு தரங்கம்பாடி டி.இ.எல்.சி., பள்ளிக்கு வந்த மாணிக்கவேல், தியாகராஜனிடமிருந்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை வாங்கி அறையைவிட்டு வெளியே வந்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டி.எஸ்.பி. மாணிக்கவாசகம் தலைமையிலான போலீசார், மாணிக்கவேலுவை கைது செய்து அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து இரவு 1 மணிவரை தீவிர விசாரணை செய்ததில், உயரதிகாரிகளுக்காக பணம் வாங்கியதாக மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.