
மருங்காபுரி அருகே உள்ள யாகபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.விவசாயி. இவர் வீட்டுக்கு ஒரு மின் விளக்கு திட்டத்தில் தனது வீட்டுக்கு இலவச மின் இணைப்பு கேட்டு துவரங்குறிச்சி மின்வாரிய அலுவலகத்தில் மனு செய்தார்.
அதற்கு கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் வாங்கி வரும்படி மின் அதிகாரிகள் கூறினர்.
இதனால் செல்வராஜ் மருங்காபுரி பொறுப்பில் உள்ள தென்முகம் இடையப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தங்கவேலு (55)விடம் சென்று தனக்கு வருமான சான்றிதழ் தரும்படி கேட்டார்.
அதற்கு தங்கவேலு ரூ.500 லஞ்சம் கேட்டார். இதனால் மனவேதனை அடைந்த செல்வராஜ் இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு அம்பிகாபதி திட்டப்படி இன்று காலை செல்வராஜ் ரசாயன பவுடர் தூவப்பட்ட 500 ரூபாய் நோட்டை கிராம நிர்வாக அதிகாரி தங்கவேலுவிடம் கொடுக்க சென்றார்.
அந்த பணத்தை தலையாரி வெள்ளைச்சாமி(54) வாங்கி தங்கவேலுவிடம் கொடுத்தார். உடனே மறைந்து இருந்த டி.எஸ்.பி. அம்பிகாபதி, இன்ஸ் பெக்டர்கள் பிரசன்னா, வெங்கடேஷ், கோவிந்தராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் தங்கவேலுவையும், வெள்ளைச்சாமியையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பிறகு அவர்களிடம் விசாரணை செய்வதற்காக திருச்சிக்கு அழைத்து சென்றனர். மேலும் தங்கவேலு மற்றும் வெள்ளைச்சாமி வீட்டில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக