

மதுரை: மதுரை வடக்கு தாலுகாவில் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் கண்ணதாசன், இளநிலை உதவியாளர் சங்கரன் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் ஜான்கென்னடி. பொக்லைன் இயந்திரங்களை வாடகைக்கு விடுகிறார்.
மதுரை அருகே வரிச்சியூரில் கிரானைட் கற்களை அள்ளியது தொடர்பாக வி.ஏ.ஓ., மற்றும் பொதுமக்கள் அவரது இயந்திரத்தை சிறைப் பிடித்து, மதுரை கலெக்டரிடம் ஒப்படைத்தனர். அவர், ஜான்கென்னடிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார். தொடர் நடவடிக்கையாக மதுரை வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு பைல் அனுப்பப்பட்டது. ஜான் கென்னடி, மதுரை வடக்கு தாலுகா அலுவலகம் சென்று துணை தாசில்தார் கண்ணதாசனை சந்தித்தார். அவரும், இளநிலை உதவியாளர் சங்கரனும் 3,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். ஜான்கென்னடி மறுத்து பேரம் பேசினார். நீண்ட நேர அலைக்கழிப்புக்கு பின் 2,300 ரூபாய்க்கு ஒப்புக் கொண்டனர்.
ஜான் கென்னடி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி பணம் கொடுக்க மதியம் 3.45 மணிக்கு வடக்கு தாலுகா அலுவலகத்திற்கு சென்றார். போலீசாரின் யோசனையின் படி, ஜான் கென்னடி பணத்தை கொடுத்தபோது, அதை பெற்றுக்கொண்ட துணை தாசில்தார் கண்ணதாசனையும், இளநிலை உதவியாளர் சங்கரனையும் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். வடக்கு தாலுகா அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் இழுத்துப் பூட்டப்பட்டன. தாசில்தார் இளமதி அலுவலகத்தில் இல்லை. அலுவலகம் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. தாசில்தார் மேஜையில் இருந்து பொக்லைன் இயந்திர சாவி மீட்கப்பட்டு, உரிமையாளர் ஜான்கென்னடியிடம் ஒப்படைக்கப்பட்டது. லஞ்சம் வாங்கியதாக பிடிபட்ட அலுவலர்கள் இருவரையும் அங்கேயே வைத்து நீண்ட நேரம் விசாரித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக