புதியவை :

Grab the widget  Tech Dreams

30 ஜூன் 2010

ரூ.80 லட்சம் மோசடி: கம்ப்யூட்டர் என்ஜினீயர் மனைவியுடன் கைது.


தேனாம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தனது நண்பர் ராஜசேகர், அவரது மனைவி ஹேமா ஆகியோர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்வதாக கூறி என்னிடம் ரூ.6 லட்சம் வாங்கினர்.

இதேபோல எனது நண்பர் கள் 11 பேரிடம் பணம் வாங்கியுள்ளனர். மொத்தம் ரூ.80 லட்சம் வசூல் செய்த அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து லாபம் தருவதாக கூறினர். ஆனால் லாபத்தொகை எதுவும் தரவில்லை.

பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகின்றனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சாலினி ஆகியோர் விசாரணை நடத்தினர். திருவேற்காட்டில் தங்கி இருந்த ராஜசேகர், ஹேமா இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கம்ப்யூட்டர் என்ஜினீயரான ராஜசேகர், ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் எம்.சி.ஏ. முடித்துள்ள தனது மனைவி ஹேமாவுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறி ஏமாற்றியதாக விசாரணை யில் தெரியவந்தது.

கைதான இருவரும் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.




29 ஜூன் 2010

65 பெண்களை ஏமாற்றிய நபருக்கு தர்ம அடி


காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இலவச வீட்டு மனை பெற்றுத் தருவதாகக் கூறி, 65 பெண்களிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வாங்கி, ஏமாற்றியவரை பெண்கள் செருப்பால் அடித்து உதைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம்(41). இவர் "மக்கள் தளபதி' என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கு அரசு அனுமதி பெறவில்லை. தனிச்சுற்றுக்கு மட்டும் எனக் கூறி தி.மு.க., பிரமுகர்களிடம் விளம்பரம் பெற்று, மாத இதழை வெளியிட்டு வந்தார்.சில மாதங்களுக்கு முன், அரசு டாக்டரை அடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் இவர் தாயார் குளம், கரிக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு, இலவச வீட்டு மனை பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். "அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தெரியும். எனவே எளிதாக வீட்டு மனை பெற்றுவிடுவேன். அதற்கு சிறிது பணம் செலவாகும். அதை மட்டும் தாருங்கள்' எனக் கூறியுள்ளார். அதை நம்பிய பெண்கள் அவ்வப்போது அவர் கேட்ட தொகையை செலுத்தியுள்ளனர். ஒவ்வொருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்றுக் கொண்ட விநாயகம், தனது மனைவி உட்பட 65 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அவர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, ஆர்.டி.ஓ.,விற்கு பரிந்துரை செய்துள்ளார். அவர் தாசில்தாருக்கு அனுப்பியுள்ளார். அதன்பேரில், வருவாய் துறை அதிகாரிகள் ஓரிக்கை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்குவது குறித்து பரிசீலனை செய்துள்ளனர். அவ்விடத்தில் மொத்தம் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. அதில் குறிப்பிட்ட பகுதி ஏற்கனவே அரவாணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடத்தை அரவாணிகளுக்கே ஒதுக்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.


இந்நிலையில், அந்த இடத்தை விநாயகம் கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு, அதிகாரிகள் ஒதுக்க முடிவு செய்ததை அறிந்த அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் கிருஷ்ணவேணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த இடத்தை, ஓரிக்கை ஊராட்சியில் வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு வழங்க வேண்டும். வெளியிலிருந்து வருபவர்களுக்கு வழங்கக் கூடாது என, தாலுகா அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளார். இதனால் அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்றுமுன்தினம், விநாயகம் மீண்டும் 65 பெண்களிடம் சென்று, நிலத்தை பெற மேற்கொண்டு 10 ஆயிரம் ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். அவர்கள் மறுநாள் பணம் தருவதாகக் கூறியுள்ளனர்.


நேற்று பணம் பெற வந்த விநாயகத்தை பெண்கள் சுற்றி வளைத்தனர். தங்களுக்கு நிலத்தை காட்ட வேண்டும் என்றனர். அவரும் ஆட்டோவில் பெண்களுடன் ஓரிக்கை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள நிலத்திற்கு அழைத்து சென்றார். அப்போது, அங்கிருந்த அரவாணிகள் இந்நிலம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதை எப்படி உங்களுக்கு தருவார்கள் எனக் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் விநாயகத்தை தாக்க துவங்கினர். சிலர் செருப்பால் அடித்தனர். பின் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்து, காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத், மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரு மற்றும் போலீசார் விரைந்து சென்று, விநாயகத்தை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.அவரிடம் பணம் கொடுத்த பெண்கள், தங்களை விநாயகம் ஏமாற்றி விட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மோசடி, நம்பிக்கை துரோகம், மிரட்டல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.


இது குறித்து விநாயகம் கூறுகையில், "மக்களிடம் வாங்கிய பணத்தை வருவாய் துறை அதிகாரிகளுக்கு கொடுத்தேன். நான் எதுவும் எடுக்கவில்லை. அதிகாரிகளும் இடத்தை அளந்து கொடுக்க தயாராக இருந்தனர். அதற்குள் சில பெண்கள் அவசரப்பட்டு என்னை தாக்கிவிட்டனர்' என்றார்.யார், யாருக்கு பணம் கொடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு பெயர்களை வெளியிட மறுத்து விட்டார். இது குறித்து, தாலுகா அலுவலகத்திலிருந்த மண்டல துணை தாசில்தார் விஜயனை கேட்டபோது, "விநாயகம் 65 பெண்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டும் எனக் கொடுத்த மனுவை பரிசீலனை செய்தோம். ஒன்றியக் கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்ததும் நிறுத்திவிட்டோம். இடம் வழங்க முடிவு செய்யவில்லை. அவரிடம் யாரும் பணம் பெறவில்லை. அவர் வேண்டுமென்று கூறுகிறார்' என்றார்.


ஏமாந்த பெண்களிடம் அவரை எப்படி நம்பி பணம் கொடுத்தீர்கள் எனக் கேட்டபோது, "நம்பிக்கையின்பேரில் கொடுத்தோம். அவர் ரசீது எதுவும் தரவில்லை' என்றனர்.இதற்கிடையில், ஜெயகாந்தன் என்ற வாலிபர் தனது நண்பருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 20 ஆயிரம் பெற்றுக் கொண்டார். ஆனால் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டார் எனப் போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



27 ஜூன் 2010

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் : நில அளவை ஊழியர் கைது





காரைக்குடி : காரைக்குடியில் பட்டா மாறுதலுக்காக, டாக்டர் மனைவியிடம் 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, நில அளவை உதவியாளர் ஆறுமுகம் (49) கைது செய்யப்பட்டார்.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்தவர் டாக்டர் விஜயராஜ். இவரது மனைவி ராதா (45). கடந்த பிப்., 28 ல், விஜயராஜ் இறந்து விட்டார். அவரது பூர்வீக சொத்தான இரண்டு ஏக்கர் இடத்தை, மனைவி பெயருக்கு மாற்றி வைத்திருந்தார். அவரது இறப்புக்கு பின், தனது பெயருக்கு பட்டா மாறுதல் கோரி,ராதா திருப்புத்தூர் தாலுகா அலுவலகத்தில், மனு செய்தார். ஆறு மாதமாகியும் வருவாய் துறையினர் பட்டா மாற்றி தரவில்லை.


ஜூன் 16ல், நில அளவை உதவியாளரை சந்தித்து ராதா முறையிட்டார். "பட்டா மாறுதலுக்கு முதல் தவணையாக 1,500ம், பட்டா மாற்றியவுடன் 3,500ம் தர வேண்டும்,' என, நில அளவை உதவியாளர் கூறினார்.


இதுகுறித்து, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில், ராதா புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி,நேற்று காலை 8.30 மணிக்கு, காரைக்குடி பெரியார் தெருவில் வசிக்கும் ஆறுமுகம் வீட்டிற்கு சென்று, 1,500 ரூபாயை, ராதா கொடுத்தார். இதை கண்காணித்த டி.எஸ்.பி., கலாவதி, இன்ஸ்பெக்டர்கள் ராஜா, பாண்டியராஜன், மற்றும் போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.



25 ஜூன் 2010

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது


மண்ணச்சநல்லூர் : திருச்சி அருகே பட்டா வழங்க கூலித் தொழிலாளியிடம் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேலசீதேவி மங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா மனைவி தமிழரசி(50). கூலித்தொழிலாளியான இவருக்கு, 2004ம் ஆண்டு இரண்டு சென்ட் நிலம் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. இதில், தொகுப்பு வீடு கட்டுவதற்காக பட்டா தேவைப்பட்டதால், மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.


இதுதொடர்பாக, வி.ஏ.ஓ.,வை சந்தித்து சான்று வாங்கி வரும்படி தாலுகா அலுவலக அதிகாரிகள் தமிழரசியிடம் தெரிவித்தனர். மேலசீதேவி மங்கலம் வி.ஏ.ஓ., அன்பழகனிடம், பட்டா பெறுவதற்கான சான்றுகளை தமிழரசி கேட்டபோது, அவர் தர மறுத்து அலைக்கழித்தார். 1,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் சான்று வழங்குவதாகவும் வி.ஏ.ஓ., அன்பழகன் தெரிவித்துள்ளார்.


லஞ்சம் கொடுக்க விரும்பாத தமிழரசி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அம்பிகாபதியிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், நேற்று மதியம் 12.45 மணியளவில் மண்ணச்சநல்லூரில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் சென்ற தமிழரசி, வி.ஏ.ஓ., அன்பழகனுக்கு, 1,000 ரூபாய் பணம் கொடுக்க முயன்றார்.

அப்போது, திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., அம்பிகாபதி மற்றும் அங்கு மறைந்திருந்து கண்காணித்த போலீசார், வி.ஏ.ஓ., அன்பழகனை சுற்றிவளைத்து கைது செய்தனர். திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட வி.ஏ.ஓ.,விடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பின் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வி.ஏ.ஓ.,வை ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.



விவசாயியிடம் லஞ்சம்: விஏஓ கைது


நாமக்கல், ஜூன் 24: சிட்டா அடங்கல் நகல் வழங்குவதற்காக விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பெரப்பஞ்சோலையில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கார்கூடல்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பதவியையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறது. கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் தனது நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். கரும்பு பயிருக்கு கடன் வாங்குவதற்காக சிட்டா அடங்கல் நகல் பெற வேண்டியிருந்தது. இதற்காக கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை அணுகியுள்ளார் பாலச்சந்திரன். ரூ. 3 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே சிட்டா அடங்கல் நகல் வழங்க முடியும் எனக் கூறியுள்ளார் முருகேசன்.

இது தொடர்பாக, நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்தார் பாலச்சந்திரன். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை தண்ணீர்பந்தல்காடு பேருந்து நிறுத்தம் அருகே சந்தித்து ரூ. 3 ஆயிரத்தை கொடுத்துள்ளார் பாலச்சந்திரன். அவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டை நோக்கி வந்த முருகேசனை லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, பாலச்சந்திரன் அளித்த ரூ. 3 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸôர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை கைது செய்து நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மீது வழக்குப் பதிவு செய்து ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்காவலில் அடைத்தனர்.




24 ஜூன் 2010

நிர்வாண சாமியாருக்கு நான்கரை ஆண்டு சிறை.



திருவள்ளூர்: பெண்ணின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்ற நிர்வாண சாமியாருக்கு நான்கரை ஆண்டு சிறை தண்டனை விதித்து, திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் கோர்ட் தீர்ப்பளித்தது.


திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலய்ய நாயுடு(60). சாமியாரான இவர், 2007ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி அன்று எதிர் வீட்டில் வசித்து வந்த ராமு மனைவி பார்வதி(50) என்ற பெண்ணின் கையை பிடித்து இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றார். பார்வதி கொடுத்த புகாரின்பேரில் மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து சாமியார் பாலய்ய நாயுடுவை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை திருவள்ளூர் ஜே.எம்.2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட் அரிதாஸ் முன்னிலையில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பாலய்ய நாயுடுவுக்கு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், பிரிவு 506/1ன் கீழ் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பிரிவு 448ன் கீழ் ஆறு மாதம் சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது

தந்தையை தவிக்கவிட்டதாக மகன் கைது.


சென்னை: ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட உதவாமல், 83 வயதான தந்தையை தவிக்கவிட்ட மூத்தமகனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மூத்தோர் குடிமக்கள் பராமரிப்பு சட்டம் பாய்ந்தது.


சென்னை, பட்டாளம் டிமல்லர்ஸ் சாலையில் வசிப்பவர் முத்துக்கிருஷ்ணன் (83). இவருக்கு குமார், சேகர், கமலக்கண்ணன் என்ற மூன்று மகன்களும், பத்மினி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி, குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இரண்டாவது மகன் தந்தைக்கு பணஉதவி செய்து, மூன்றாவது மகன் மாத வாடகைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தும் உதவி வருகின்றனர். ஆனால் மூத்த மகன் குமார், இரண்டு ஆண்டுகளாக எந்த உதவியும் செய்யாமல் இருந்து வந்தார். முத்துக்கிருஷ்ணன் பலமுறை நேரில் சந்தித்து கேட்டும் உதவ மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த முத்துக்கிருஷ்ணன், நேற்று முன்தினம் அயனாவரம் போலீசில் புகார் செய்தார்.


முத்துக்கிருஷ்ணன் கொடுத்த புகாரில் கூறியதாவது: எனக்கு 83 வயதாகிறது. எனது மூன்று மகன்களில், இரு மகன்கள் உதவி செய்து வருகின்றனர். மூத்த மகன் குமார், அச்சகம் ஒன்றில் பார்ட்னராக உள்ளான். ரயில்வேயில் ஒப்பந்த வேலைகள் எடுத்து பார்க்கிறார். நல்ல வருமானத்துடன் வசதியாக வாழ்ந்து வருகிறான். கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த உதவியும் செய்யவில்லை. மகனிடம் மன்றாடி கேட்டும் எந்த பயனும் இல்லை. எனவே போலீசில் புகார் செய்தேன். இவ்வாறு முத்துக்கிருஷ்ணன் கூறினார்.


இதுகுறித்து அயனாவரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிந்து, வயதான தந்தையை தவிக்கவிட்ட மகன் குமாரை (55), மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார். கைதான குமார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். முதியவர் கொடுத்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, மகனை கைது செய்த இன்ஸ்பெக்டர் ரமேஷை, கூடுதல் கமிஷனர் ஷகீல் அக்தர் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர். சென்னையில், தந்தையை தவிக்கவிட்டதாக மகன் கைதாவது இதுவே முதல் முறை. இந்த நடவடிக்கை தொடருமென போலீசார் எச்சரித்துள்ளனர்.



பாங்க் மேலாளர் உட்பட 3 பேர் கைது : கடன் வாங்கி தருவதாக பணமோசடி.


சுயஉதவி குழு பெண்களுக்கு கடன் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட, பாங்க் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்துள்ள மாவடியை சேர்ந்தவர் கங்காதேவி என்ற ஜெனிபர்(44). திருமணமாகி மகள் உள்ளார். கணவரை விட்டு பிரிந்துவிட்டார். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசத் தெரியும். அதையே மூலதனமாக்கினார். சுய உதவி குழுக்களின் தலைவிகள், தொழிலதிபர்கள் ஆகியோரின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு, தம்மை பாங்க் அதிகாரி என கூறி ஆங்கிலத்தில் பேசி கலக்குவார்.

நாங்குநேரி பகுதியில் பாண்டியன் கிராம பாங்க் களஅதிகாரியாக பணியாற்றிய பாலசுப்பிரமணியன்(54) என்பவருடன், ஜெனிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அத்துடன், ஷேக் பாபு என்ற வாலிபருடன் இணைந்து வாழும் ஜெனிபர், குமரி மாவட்டம் தோவாளையில் சிறிய ஓட்டல் நடத்தி வந்தார். அந்த பகுதியில் தொழில் செய்து வரும் பொன்ராஜ் என்பவருக்கு தொழில் கடன் பெற்றுத்தருவதாக கூறி, 66 ஆயிரத்து 500 ரூபாய் வாங்கியுள்ளார். அதனை நம்ப செய்வதற்காக தற்போது கூடங்குளம் பாண்டியன் கிராம பாங்க் மேலாளராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியத்தை(54) அழைத்து வந்துள்ளார். அவரும் கடன் கிடைக்குமென நம்பிக்கை கூறியுள்ளார். ஆனால் கடன் கிடைத்தபாடில்லை.


இதே போன்று பலரிடம் ஜெனிபர் கடன் பெற்று தருவதாக, பாலசுப்பிரமணியத்தை பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பணத்தை இழந்த பொன்ராஜ் புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். பல பெண்களிடம் மோசடி செய்து, 10 லட்சம் ரூபாய்க்கும் மேலாக ஜெனிபர் கும்பல் வசூலித்திருப்பது தெரியவந்தது. எஸ்.பி., உத்தரவின் பேரில், நாங்குநேரி போலீசார், ஜெனிபர், ஷேக் பாபு, பாங்க் மேலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்தனர். ஜெனிபரிடமிருந்த பல மோசடி ஆவணங்களையும் கைப்பற்றினர்.



லஞ்சம்:வணிகவரித்துறை அதிகாரிகள் கைது


நாகர்கோவில் : நாகர்கோவிலில் வணிக நிறுவனத்திற்கு பதிவு சான்று வழங்க லஞ்சம் வாங்கிய வணிகவரித்துறை அதிகாரி மற்றும் உதவி வணிக வரித்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


நாகர்கோவில் சைமன்நகர் தங்கையாநாடார் மகன் ராஜேந்திரன். இவர் நல்லமிளகு, ஏலம், கிராம்பு போன்ற தானியங்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வைத்தியநாதபுரம் பகுதியில் வணிக நிறுவனம் துவங்குவதற்காக திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் அமைத்துள்ள கடைக்கு பதிவு சான்று பெறுவதற்காக நாகர்கோவிலில் உள்ள வணிகவரித்துறையில் கடந்த மாதம் விண்ணப்பித்தார்.

ஒருமாதம் ஆகியும் வணிகவரித்துறையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதையடுத்து கடந்த 21ம் தேதி வணிகவரித்துறை அலுவலகம் சென்று அங்கு பணியில் இருந்த உதவி வணிக வரி அதிகாரி சுப்புராமன் (32) என்பவரை சந்தித்துள்ளார். அவரிடம் பதிவு சான்று குறித்து கேட்ட போது தனக்கு 1000 ரூபாய் தந்தால்தான் சான்று தரமுடியும் என கூறியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரன் வணிக வரி அதிகாரி செல்வராஜ் (54) என்பவரை சந்தித்துள்ளார். அவரும் தனக்கு 2000 ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார். 23ம் தேதி கடையில் ஆய்வுக்காக வரும்போது பணத்தை தரவேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின்படி லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜேந்திரனிடம் கொடுத்து அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது கொடுக்க ஆலோசனை வழங்கினர்.

வணிகவரித்துறை அதிகாரிகள் கூறியதுபோல் நேற்று ராஜேந்திரனின் கடைக்கு சென்றனர். அவர்களிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவர் கொடுத்தார். அதிகாரிகள் லஞ்ச பணம் பெறும்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஹெக்டர் தர்மராஜ், பீட்டர்பால்துரை, சப் இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் ஏட்டுகள் அடங்கிய குழுவினர் அதிகாரிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் சிஜேஎம் கோர்டில் நீதிபதி துரைசண்முகம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.


23 ஜூன் 2010

துடி துடித்து இறந்த கர்ப்பிணி :பணிக்கு வராத பெண் டாக்டர்.


திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி, கீழபள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சுபகானி. ஒட்டல் தொழிலாளி. இவரது மனைவி ஷமீலாபீவி(26). திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. மூன்று வயதில் மகன் உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான ஷமீலா பீவி, பிரசவ வலி ஏற்பட்டதால் காலையில் 6 மணிக்கு புளியங்குடி உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

புளியங்குடி ஆஸ்பத்திரி 24 மணிநேரமும் டாக்டர்கள் இருக்க கூடிய 72 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாகும். ஆனால் ஷமீலா பீவி சென்ற நேரத்தில் இரவு பணி முடித்த டாக்டர், கர்ப்பிணியை பார்த்துவிட்டு வயிற்றில் குழந்தையின் துடிப்பு நன்றாக இருப்பதாகவும் 9 மணிவாக்கில் பிரசவம் ஏற்படலாம் என கூறிவிட்டு அடுத்த டாக்டரிடம் பணியை ஒப்படைத்துவிட்டு சென்றார்.6 மணிக்கு பிறகு பணிக்கு வந்தவர் டாக்டர் சித்ரா. இவர் கண், மூக்கு நோய்களுக்கு சிகிச்சையளிப்பவர். எனவே பிரசவத்திற்காக அடுத்து பணிக்கு வரவேண்டிய பெண் டாக்டருக்கு போன் செய்துஅழைத்துள்ளார். அந்த பெண் டாக்டர் உரிய நேரத்திற்கு வரவில்லை. காலை 8 மணியை கடந்ததும் பிரசவ வலியால் ஷமீலா பீவி துடிதுடித்தார்.

தொடர்ந்து பலமுறை போன் செய்தும் பணிக்கு வரவேண்டிய பிரசவ டாக்டர் வரவில்லை. அங்கிருந்து நர்ஸ்களோ மேற்கொண்டு செய்வதறியாது திகைத்தனர். மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டிய கர்ப்பிணி காலை 9 மணிக்கு பரிதாபமாக இறந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.

. 24 மணிநேரமும் பணியில் இருக்கவேண்டிய டாக்டர்கள் வராததால் இரண்டு உயிர்கள் பறி போன அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக இதுபோல சம்பவங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகள் கடைசிநேரத்தில்தான் வந்தார்கள். எனவே எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை என சமாளிப்புகளை சொல்வார்கள். ஆனால் இன்றைய சம்பவத்தில் காலை 6 மணிக்கே ஆஸ்பத்திரிக்கு வந்தும் டாக்டர்களின் கவனக்குறைவால் 3 மணிநேரம் துடிதுடித்து பின் இறந்துள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கக்கோரி ஷமீலாபீவியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார், ஆர்.டி.ஓ.,உள்ளிட்ட அதிகாரிகள் வந்து உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தில் பணிக்கு வராமல் உயிர் இழப்பிற்கு காரணமாக டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜெயராமன் உத்தரவிட்டார். எனவே டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மருத்துவ துறை இயக்குநருக்கு பரிந்துரைத்துள்ளதாக நெல்லை மருத்துவ பணிகள் இணை இயக்குநர் உஷா ரிஷபதாஸ் தெரிவித்தார்.

புளியங்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நர்சுகள் மீது வழக்கு

புளியங்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புளியங்குடி புதுமனை 3ம் தெருவை சேர்ந்தவர் சுபகானி. இவரது மனைவி ஜமிலாபீவி (26). நேற்று முன்தினம் ஜமாலாபீவி இரண்டாவது பிரசவத்திற்காக அதிகாலை 6 மணியளவில் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருந்த நர்சுகள் தாயும் சிசுவும் நன்றாக இருப்பதாகவும், இன்னும் இரண்டு மணிநேரத்தில் குழந்தை பிறந்துவிடும் எனவும் கூறியதாக தெரிகிறது. ஆனால் நேரம் அதிகமாகவே ஜமிலாபீவி பிரசவலியால் துடித்துள்ளார்.

ஆனால் நர்சுகள் டாக்டர்களுக்கு தகவல் கூறியும் டாக்டர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வலியின் தாக்கத்தால் குழந்தை பிரசவிக்க முடியாமல் ஜமிலாபீவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுபகானி புளியங்குடி போலீஸ் ஸ்டேஷசனில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், தனது மனைவி பிரசவவலியால் துடி துடித்தபோதும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அலட்சியமாகவும், மெத்தனமாகவும் செயல்பட்டுள்ளனர். எனது மனைவியின் இறப்பிற்கு இவர்கள் தான் காரணம். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தெய்வம் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது வழக்கு பதிவு செய்தார். மேலும் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



22 ஜூன் 2010

லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் கொம்பையன் கைது.


ஈரோடு: லாரி உரிமையாளரிடம் 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர், கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடாவை சேர்ந்த ஆனந்தகுமார் (32), சொந்தமாக லாரி வைத்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானிசாகரிலிருந்து தெங்குமரஹடா செல்லும் வழியில், சுஜில்குட்டை வனச்சோதனை சாவடி உள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த கொம்பையன் (43) வனக்காப்பாளராக பணிபுரிகிறார்.

கடந்த 20ம் தேதி, தெங்குமரஹடாவிலிருந்து இலவம் பஞ்சு லோடு ஏற்றி வந்த ஆனந்தகுமாரிடம், 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால், "அடுத்த முறை பணம் தரவில்லையெனில், இரவு நேரத்தில் வனத்துக்குள் வண்டி ஓட்டிச் சென்றதாக வழக்கு போட்டு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதித்து விடுவேன்' என, கொம்பையன் மிரட்டியுள்ளார்.

ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசிடம் நேற்று, ஆனந்தகுமார் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின்படி, நேற்று மதியம் சுஜில்குட்டை வழியாக லாரியை ஓட்டிச் சென்ற ஆனந்தகுமார், வனச்சோதனை சாவடியில் பணியில் இருந்த கொம்பையனிடம், ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்தார். கொம்பையனை கையும், களவுமாக பிடித்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

ராசிபுரத்தில் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது.


நாமக்கல் : ராசிபுரத்தில் ஜாதி சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நம்பத்ரி குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் குறளரசன்(20). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் வழங்கப்படும் உதவித்தொகைக்காக ஜாதி சான்றிதழ் கேட்டு தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தார். சான்றிதழ் வழங்காமல் அதிகரிகள் இழுத்தடித்து வந்தனர்.

இந்நிலையில் அங்கு ஓப்பந்த அடிப்படையில் இளநிலை உதவியாளராக பணிபுரிபவர் ரவி என்பவர் ரூபாய் 300 கொடுத்தால் ஜாதி சான்றிதழ் வாங்கி தருவதாக கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத குறளரசன் சேலம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ். பி., ரெங்கராஜிடம் புகார் செய்தார். ரெங்கராஜ் அறிவுரைப்படி குறளரசன் ரவியிடம் ரூ.300 கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த ரெங்கராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரவியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூபாய். 300 யும் பறிமுதல் செய்தனர்.

ரூ. 3500 லஞ்சம் வாங்கிய மி்ன்துறை வணிக ஆய்வாளர் கைது



செஞ்சி : செஞ்சியில் ரூ. 3500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். செஞ்சி தாலுகா போந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தகோபாலன் மகன் கந்தன் (32). நந்தகோபாலன் கடந்த 1987ம் ஆண்டு அவரது விவசாய நிலத்துக்கு இலவச மின்சாரம் கோரி விண்ணப்பித்திருந்தார்.


மின் இணைப்பு வழங்க அவருக்கு இப்போது அரசு ஆணை வந்தது. இந்நிலையில் நந்தகோபாலன் நிலத்தை ஆய்வு செய்த செஞ்சி ஈச்சூர் மின் பிரிவு வணிக ஆய்வாளர் இளங்கோவன் ( 51) , கந்தனிடம் ரூ. 8000 லஞ்சம் கேட்டுள்ளார். 3 தவணைகளாக பணத்தை தருவதாக கூறிய கந்தன், நேற்று மாலை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., யிடம் புகார் கொடுத்தார்.


அவர்கள் கொடுத்த ரசாயனப் பொடி தடவிய ரூ. 3 500 பணத்தை இன்று காலையில் இளங்கோவனிடம் , கந்தன் கொடுத்தார். அப்போது போலீசார் இளங்கோவனை கையும் , களவுமாக கைது செய்தனர்.



21 ஜூன் 2010

லஞ்சம் :தர்மபுரி நகராட்சி சர்வேயர் சுப்பிரமணி கைது.


தர்மபுரி : நில வரைபடம் வழங்க, 600 ரூபாய் லஞ்சம் வாங்கிய நகராட்சி சர்வேயரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச் சந்தையைச் சேர்ந்தவர் பூபாலன்(45). இவரது தந்தைக்கு சொந்தமான நிலம், அன்னசாகரம் பகுதியில் உள்ளது. இந்நிலத்தை அவரது பெரியப்பா, தனக்கு சொந்தம் எனக் கூறி வந்தார். இதனால், நகராட்சியில் நில வரைபடம் வாங்க முடிவு செய்த பூபாலன், தர்மபுரி நகராட்சி நகர சார்பு ஆய்வாளர் மற்றும் சர்வேயர் சுப்பிரமணியிடம் விண்ணப்பம் செய்தார்.

கடந்த 15ம் தேதி வரைபடம் கேட்டு சென்ற போது, சுப்பிரமணி 600 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், உடனடியாக வரைபடம் கொடுப்பதாக கூறினார். அதிர்ச்சியடைந்த பூபாலன், தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அறிவுரைப்படி நேற்று மாலை தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் இருந்த சுப்பிரமணியிடம், 600 ரூபாயை லஞ்சமாக கொடுத்த போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், சுப்பிரமணியை கைது செய்தனர்.

19 ஜூன் 2010

லஞ்சம் :இரண்டு பெண் அலுவலருக்கு சிறை தண்டனை.


திருச்சி: திருச்சி அருகே திருமண நிதியுதவி வழங்க லஞ்சம் வாங்கி பிடிபட்ட இரண்டு பெண் அலுவலர்களுக்கும் இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள மாவிலிப்பட்டியைச் சேர்ந்த ஜெயலட்சுமி அரசின் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் வாங்க விண்ணப்பித்திருந்தார். அவருக்கு அரசின் நிதியை வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட தா.பேட்டை பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர் கமலம் மற்றும் ஊரக நகர்நல அலுவலர் அங்காயி ஆகியோர் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் பிடிக்கப்பட்டனர்.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. நீதிமன்ற விசாரணை முடிந்த நேற்று முன்தினம் நீதிபதி ராஜசேகரனால் தீர்ப்பளிக்கப்பட்டது.

லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட அலுவலர் அங்காயி ,கமலத்துக்கு தலா இரண்டாண்டு சிறையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

17 ஜூன் 2010

லஞ்சம் தர மறுத்த முதியவரை தாக்கிய சேலம் கவுன்சிலர் .


சேலம்: குடிநீர் இணைப்பு பெற லஞ்சம் தர மறுத்த முதியவரை சற்றும் இரக்கமில்லாமல் தாக்கி காயப்படுத்தியுள்ளார் சேலம் மாநகராட்சி கவுன்சிலர் சுந்தரம் என்கிற கேபிள் சுந்தரம். இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சேலம் மாநகராட்சியின் 29வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சுந்தரம் என்கிற கேபிள் சுந்தரம். இவரை தியாகராஜன் என்ற முதியவர் குடிநீர் இணைப்பு பெறுவற்காக அணுகியுள்ளார்.

அப்போது முதியவரிடம் ரூ. 15,000 கொடுத்தால் இணைப்பு பெற்றுத் தருவதாக கூறியுள்ளார் சுந்தரம். ஆனால் லஞ்சம் எல்லாம் தர முடியாது என்று மறுத்துள்ளார் முதியவர் தியாகராஜன்.

இதனால் ஆத்திரமடைந்த கேபிள் சுந்தரம், முதியவர் தியாகராஜனை தாக்கி காயப்படுத்தி விட்டார்.

அதிர்ச்சி அடைந்த முதியவர் தியாகராஜன் போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் கேபிள் சுந்தரம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரூ. 3000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது



செங்கல்பட்டு : கூடுவாஞ்சேரியில் ரூ. 3000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது செய்யப்பட்டார். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் மோகன் . இவர் கூடுவாஞ்சேரியில் 2000 சதுர அடியளவில் நிலம் வாங்கியிருந்தார். அந்த இடத்துக்கு உள்பிரிவு பெற்று ‌பட்டா மாற்றம் செய்ய செங்கல்பட்டு தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.


இந்நிலையில் சர்வேயர் உமாபதி பட்டா மாற்றம் செய்ய ரூ. 5000 லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து மோகன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் யூனிட் 5 , டி.எஸ்.பி., சரஸ்வதி தலைமையிலான போலீசார், மோகனிடம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை கொடுத்து அனுப்பினர். அவற்றை மோகன், உமாபதியிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் உமாபதியை கையும் களவுமாக கைது செய்தனர்.



கணவனின் மூக்கை அறுத்த பாசக்கார மனைவி


புழல் : நிலம் விற்ற பணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், தூங்கிக் கொண்டிருந்த கணவன் மூக்கை அரிவாள்மனையால் அறுத்த மனைவி கைது செய்யப்பட்டார்.

புழல் அடுத்த புத்தாகரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சாமிக்கண்ணு (50). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பத்மினி (42).

நெற்குன்றத்தில் தங்களுக்கு சொந்தமான நிலத்தை ரூ.10 லட்சத்துக்கு விற்றுவிட்டு சமீபத்தில் புத்தாகரம் பகுதிக்கு வந்துள்ளனர்.நிலம் விற்ற பணம் தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் சாமிக்கண்ணு தூங்கியுள்ளார்.

அப்போது, அங்கு அரிவாள் மனையுடன் சென்ற பத்மினி கணவனின் முகம், மூக்கு மற்றும் உதடுகளை அறுத்துள்ளார்.இதில் படுகாயம் அடைந்த சாமிக்கண்ணு, கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின்படி புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து, பத்மினியை கைது செய்து, திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்

16 ஜூன் 2010

லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை ரத்து

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில், நோயாளிகளிடமும், உறவினர்களிடமும் லஞ்சம் வாங்கிய ஆறு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கு பிறப்பு முதல் இறப்பு வரை ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.

பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தால் 500 ரூபாய், பெண் குழந்தைக்கு 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இதேபோல் ஸ்டிரெச்சர் தள்ள, வீல்சேரில் அழைத்துச் செல்ல, மாவுக்கட்டு கட்ட என ஒவ்வொன்றுக்கும் ஊழியர்கள் விலை நிர்ணயித்துள்ளனர்.

கடந்த மார்ச், மே மாதத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். மார்ச் 2ல் நடத்திய சோதனையில் 8 பேர் சிக்கினர். இவர்களிடமிருந்து 3000 ரூபாய் பறிமுதல் செய்யப் பட்டது.

மார்ச் 18ல் மீண்டும் சோதனை நடத்தியதில் மூன்று பேர் பிடிபட்டனர். ஜூன் 3ல் நடத்தப்பட்ட சோதனையில், பிடிபட்ட இரு பெண் ஊழியர்களிடமிருந்து 1470 ரூபாயும், துப்புரவு தொழிலாளர்களிடமிருந்து 515 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன.விசாரணையில், ஆறு பேர் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சில நாட்களுக்கு முன், மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமாருக்கு லஞ்சஒழிப்பு போலீசார் பரிந்துரைத்தனர். இதுகுறித்து சிவக்குமார் நமது நிருபரிடம் கூறுகையில், ""சம்பந்தப்பட்ட ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் அவர்களுக்கு ஊக்கத்தொகை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்க உள்ளேன்,'' என்றார்.

15 ஜூன் 2010

சார்பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் ரெய்டு.

விருதுநகர் : விருதுநகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ. 18,360 பணம் கைப்பற்றப்பட்டது.

விருதுநகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று மாலை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் விஜய ராஜ் தலைமையிலான அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் டி.எஸ்.பி., சியாமளா தேவி, இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகாரிகளைப் பார்த்ததும் உடன் கழிவறைக்கு ஓட்டம் பிடித்த உதவியாளர் முனியாண்டியிடமிருந்து ரூ. 4490, உதவியாளர் சுரேந்திரனிடமிருந்து ரூ. 200 மற்றும் குப்பைத்தொட்டியிலிருந்து ரூ. 1600 கைப்பற்றப்பட்டது. மேலும் இன்று நடந்த பத்திரப்பதிவு மூலமாக எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது என்பது குறித்தும் பத்திரப்பதிவு அலுவலர்களால் கணக்கு கொடுக்க முடியவில்லை. மொத்தம் கணக்கில் வராத ரூ. 18,360 கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.





பல்லடம் : பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு நடத்தினர்.

5.15 மணிமுதல் இரவு 8.40 மணி வரை நடந்த சோதனையில் பதிவாளர் பாலகிருஷ்ணன் மேஜையிலிருந்து கணக்கில் வராத ரூ.22,300 பணத்தை கைப்பற்றினர். பணம் குறித்து பாலகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர் .

கோவில்பட்டி : கோவில்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடுகள் அதிகம் நடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரெய்டு நடந்தது.

14 ஜூன் 2010

இதயமில்லா மனிதர்கள் - இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றவர்கள் .


மங்களூர்:துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர்- இந்தியா விமான விபத்தில் பலியானவர்கள் அணிந்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.


துபாயில் இருந்து மங்களூருக்கு கடந்த மாதம் 22ம் தேதி அதிகாலை வந்த ஏர்- இந்தியா விமானம் தரை இறங்கும்போது, ஓடுபாதையை தாண்டிச்சென்று, பள்ளத்தாக்குப் பகுதியில் வெடித்துச் சிதறியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 158 பேர் உடல் கருகி இறந்தனர்.இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் உட்பட ஏராளமானோர் ஈடுபட்டனர். இவர்களில் சிலர், இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மங்களூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.


இவ்வழக்கில் இரு நாட்களுக்கு முன்பு சத்தார் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் இவரிடம் விசாரணை செய்ததில் அவருடைய கூட்டாளியான மங்களூர் ஜொக்காடு பகுதியை சேர்ந்த இர்ஷாத்(21) என்பவரை கைது செய்தனர்.இவர் மங்களூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேபாள நாட்டைச் சேர்ந்த இவரும், சத்தாரும், மற்றொரு நபரான அல்டாப் என்பவரும் சேர்ந்து இறந்தவர்கள் அணிந்திருந்த 32 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.


இவற்றில் பலவற்றை பதுக்கி வைத்துவிட்டு சில நகைகளை மட்டும் விற்பதற்காக நகைக் கடைக்கு சென்றபோதுதான் போலீசில் சிக்கினர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அல்டாப் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.



12 ஜூன் 2010

நான் அவனில்லை - திருமணம் செய்வதாக சொல்லி 17 பெண்களை மயக்கி மோசடி





திருமணம் செய்துகொள்வதாக கூறி கல்லூரி பேராசிரியை உள்பட 17 பெண்களிடம் மோசடி செய்ததாக கோவையைச் சேர்ந்த ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

.
பெண் சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் மூலம் அவரை பொறி வைத்து போலீசார் பிடித்தனர். அவர் பயன்படுத்திய கார், விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.போரூரைச் சேர்ந்த திலகவதி என்ற பெண் சென்னை புறநகர் போலீஸ் கமிஷ்னர் ஜாங்கிட்டிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அசோக் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடைய ஏடிஎம் கார்டில் இருந்த பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளதாக அந்த புகாரில் கூறியிருந்தார்.

ஜாங்கிட் உத்தரவின் கீழ் புறநகர் உதவிக் கமிஷனர் வீரபெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அன்பழகன் ஆகியோருடன் மங்கள லட்சுமி என்ற பெண் சப் இன்ஸ்பெக்டரும் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தார்.

அவரை எப்படி பொறியில் சிக்க வைத்து பிடித்தோம் என்பதை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் விவரித்தார்.

அசோக் செல்போனுக்கு மங்கள லட்சுமி போன் செய்து, "சதீஷ் இருக்கிறாரா? அவரிடம் திருமண விஷயமாக பேச வேண்டும்' என்று கூறி இருக்கிறார். உடனே, அசோக் "இது சதீஷ் நம்பர் அல்ல, என் பெயர் அசோக்' என்று கூறியிருக்கிறார். உடனே மங்கள லட்சுமி "சாரி, ராங் நம்பர்' என கூறியிருக்கிறார்.

ஆனால் அசோக் விடாமல் "பரவாயில்லை, சதீஷ் என் நண்பர்தான். அவரிடம் என்ன கூற விரும்புகிறீர்களோ அதை என்னிடம் கூறலாம்' என்று கூறியிருக்கிறார். அப்போது மங்கள லட்சுமி "நான் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். நீண்ட நாட்களாகியும் எனக்கு திருமணம் ஆகவில்லை' என்று கூறியிருக்கிறார். "நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?' என்று மங்கள லட்சுமி கேட்டிருக்கிறார்.

"நான் எம்பிஏ பட்டதாரி. தங்க வியாபாரம் செய்கிறேன். விதவை பெண்கள், நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள் யாருக்காவது வாழ்வு கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களை வேண்டுமானால் நான் திருமணம் செய்துகொள்கிறேன்' என்று அசோக் கூறினார்.

"திருமணத்திற்காக நான் 3 லட்ச ரூபாய் சேர்த்து வைத்திருக்கிறேன். இப்போதே அந்த பணத்திற்கு தங்கம் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஆகவே நேரில் பார்ப்போமா' என மங்கள லட்சுமி கேட்டிருக்கிறார்.மங்கள லட்சுமி விரித்த வலையில் விழுந்த அசோக் அவரை நேராக சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். பணத்துடன் முதலில் வண்டலூருக்கு வருமாறு கூறினார்.
மங்கள லட்சுமி மப்டியில் வண்டலூருக்கு சென்றிருக்கிறார். அவருக்கு பின்னால் போலீசார் மாறு வேடத்தில் சென்றார்கள். அப்போது அசோக் சிங்கபெருமாள் கோயிலுக்கு வருமாறு போனில் கூறியிருக்கிறார்.

மங்கள லட்சுமி சிங்கபெருமாள் கோயிலுக்கு சென்றார். "இங்கு வேண்டாம். திண்டிவனம் பஸ்ஸில் ஏறி மேல்மருவத்தூருக்கு வந்து விடுங்கள். அங்கு தங்கம் வாங்கி தருகிறேன்' என்று கூறியிருக்கிறார். அதன்படி மங்கள லட்சுமி ஒரு பஸ்ஸில் ஏறி மேல்மருவத் தூருக்கு சென்று கொண்டிருந்தார். அந்த பஸ் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அசோக் மீண்டும் கூப்பிட்டார்.

"நீங்கள் பஸ்ஸை விட்டு இறங்கி விடுங்கள். நான் காரில் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்' என்று கூறியிருக்கிறார். அதன் படியே, மங்கள லட்சுமி பஸ்ஸை விட்டு இறங்கி, நின்று கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அசோக் ஒரு காரில் வந்தார். அவருடைய காரில் மங்கள லட்சுமி ஏறும் சமயத்தில் பின்னால் மாறுவேடத்தில் வந்த போலீசார் அவருடைய காரை சூழ்ந்து கொண்டு மடக்கி பிடித்தார்கள்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவருடைய உண்மையான பெயர் ரவிச்சந்திரன் (வயது 34) என தெரியவந்தது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுண்டக்காபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், 10 ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார் என தெரியவந்தது.

5 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை வீட்டிலிருந்து பெற்றோர் துரத்தி விட்டனர். அதன் பிறகு அவர் மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் சுற்றிக் கொண்டிருந்தார். கல்யாண மாலை புத்தகத்தை பார்த்த பிறகு அவருக்கு இந்த மோசடி திட்டம் உருவாகி இருக்கிறது. அதில் உள்ள பெண்களுக்கு போன் செய்து தன் வலையில் வீழ்த்தி வந்திருக்கிறார்.

முதலில் தாராபுரத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பேராசிரியை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார். முதலில் பேராசிரியையின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரச் செய்து அங்கு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு பேராசிரியையின் பெற்றோர்கள் அவர்களே சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மனைவியுடன் குடும்பம் நடத்தினார். அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஸ்ரேயா என்ற குழந்தை உள்ளது.

ஒரு செல்போன் வாங்கி அந்த செல்போன் மூலம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சாந்தி என்ற பேராசிரியை தொடர்பு கொண்டு திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவரை பெண் பார்த்து விட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் மீண்டும் வந்து தனது தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் தேவைப்படுவதாகவும் தன்னிடம் ரூ.1 லட்சம் மட்டுமே இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதை நம்பி பேராசிரியை தனது ஏடிஎம் கார்டை கொடுத்திருக்கிறார். அதிலிருந்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து எடுத்துக்கொண்டு அசோக் தலைமறைவாகிவிட்டார். இதேபோல ஆவடியைச் சேர்ந்த ரமா என்ற பேராசிரியை ஏமாற்றி அவருடைய ஏடிஎம் கார்டிலிருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை மோசடி செய்திருக்கிறார்.

இதுபோல சுமார் 17 பெண்களிடம் அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 4 பெண்கள் பற்றிய விவரமே தெரியவந்துள்ளது. மற்றவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மதுரையைச் சேர்ந்த நண்பரிடமிருந்து காரை பழுது பார்ப்பதாக கூறி வாங்கி வந்து ஏமாற்ற முயன்றபோது தான் அவர் போலீசாரிடம் சிக்கினார். அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர் பயன்படுத்தி ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு பெண்களையும் ஏமாற்றுவதற்கு முன்பு ஒரு செல் நம்பரை வாங்கி பயன்படுத்தி விட்டு பின்னர் தூக்கி எறிந்துவிடுவார். மேலும் பொய்யான முகவரியை கொடுத்து இதுபோல அவர் சிம்கார்டு பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.


நீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது: நீதிபதி இக்பால்






நீதித்துறையில் லஞ்சம் மற்றும் ஊழலை சகித்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி எம்.ஒய். இக்பால் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெள்ளிக் கிழமையன்று பதவியேற்றுக் கொண்ட பின், உயர் நீதிமன்ற வளாகத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்டு நீதிபதி இக்பால் பேசியதாவது:

தமிழக மக்களுக்கு நீதி பரிபாலனை செய்வதற்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். சென்னை ஐகோர்ட்டு என்பது பாரம்பரியமிக்க நீதி பரிபாலனை செய்துகொண்டிருக்கும் ஒரு கோவிலாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு நீதி வழங்கும் விஷயத்தில் நீதிபதிகளும், வக்கீல்களும், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறார்கள். அதாவது, உலகத்தில் நீதி வழங்கும் பணிக்காக கடவுளால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள்.


நீதி பரிபாலனை என்பது ஒரு தெய்வீக பணி. ஒவ்வொரு வழக்கிலும் நீதி கிடைத்துவிடாதா? என்பதுதான் ஒவ்வொரு மக்களின் கண்களிலும் தென்படும் நம்பிக்கை. இதை நிறைவேற்றுவதற்கு வக்கீல்களும், நீதிபதிகளும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, நல்லொழுக்கம், தர்மம் ஆகியவற்றின் அடிப்படையிலும் நாம் செயல்படுவது அவசியம்.


நீதி என்னும் புனித நீரூற்றை ஊழல் என்ற கறை படிந்த கரங்களால் மாசுபடுத்தக்கூடாது. ஒவ்வொரு நீதிபதிகளும் எப்பேற்பட்ட சூழ்நிலைகளிலும் நியாயமாகவும், நேர்மையாகவும் இருப்பது அவசியம். வக்கீல்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு முழுமையான நீதியை வழங்க முடியாது. வழக்கை நீதிபதிகள் நுட்பமாக கவனிக்காத பட்சத்தில், ஒரு நல்ல வாதத்தை வக்கீல்கள் வைக்க முடியாது. நீதிமன்றத்தில் நல்ல சூழ்நிலை நிலவ வேண்டுமானால் நீதிபதிகள், வக்கீல்கள் இடையே நல்லுறவு இருக்க வேண்டும்.


ஒரு தனி மனிதனுக்கு நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றால், அவன் விரக்தியில் சட்டத்துக்கு புறமான முறைகளை பின்பற்ற ஊக்கமளித்துவிடும். இதுபோன்ற எண்ணங்கள் உருவாக்கப்பட்டுவிட்டால் கும்பலாக சேர்ந்து நீதி பெற முயற்சிப்பது, உடனடியாக நீதி பெறுவதற்கு ஏதாவது சட்டவிரோத காரியங்களை மேற்கொள்வது, குற்றவாளிகளுடன் இணைந்து கொள்வது போன்ற அவலநிலை ஏற்பட்டு, சமூக விரோதிகளை அதிகரிக்க செய்திடும்.


நீதிமன்ற புறக்கணிப்புகளை கோர்ட்டு ஊழியர்களும், வக்கீல்களும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு உறுதி செய்யவேண்டும். எந்தவொரு பிரச்சினையுமே பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். நீதிபதிகள், வக்கீல்கள் இடையே பிரச்சினைகள் உருவானால், அதை தீர்ப்பதற்கு வெளியில் உள்ளவர்களை அழைக்க கூடாது. வக்கீல்கள்தான் கோர்ட்டின் அதிகாரிகளாக இருக்கின்றனர். நீதி நிர்வாகம் செய்வதற்கு அவர்களின் உதவி அதிகம் தேவை. ஒவ்வொருவரும் பரஸ்பரம் மரியாதை கொடுத்து நடந்துகொள்வது மூலம் ஒரு ஆரோக்கியமான நல்லெண்ணத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்.


பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில் ஏழை மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நீதி பரிபாலனை முறையை மேலும் வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஊழல் எந்த வகையிலும் இருக்கக்கூடாது. நீதித்துறையின் ஒழுக்கத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் கேடு வந்துவிடக்கூடாது. இதுதான் நீதித்துறையின் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளது.


நீதித்துறை ஊழல் நிறைந்ததாக இருந்தால் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு, அதனால் சமூக ஒழுக்கம் கெட்டுவிடக்கூடும். எங்கோ நடக்கும் ஒருசில ஊழல் சம்பவங்களால் ஒட்டுமொத்த நீதித்துறையையே ஊழல் மிகுந்ததாக கூறிவிட முடியாது. நீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது. ஊழல் பேர்வழிகளுக்கு நீதி பரிபாலனை முறையில் இடமில்லை. கொடுக்க முடியாததை கொடுப்பதாக யாரும் உறுதி அளிக்க கூடாது. சமுதாயத்தில் பின்தங்கிய மக்களும் நீதி பெறுவதற்காக மற்றவர்களைபோல், அவர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.


நீதித்துறைக்கு நீண்ட நாட்களுக்கு எது சரியாக உள்ளதோ அதை மட்டுமே செய்யவேண்டும். பிரபலத்துக்காகவோ, அரசியலுக்காகவோ எதுவும் செய்யக்கூடாது. ஏழை எளிய மக்கள், சிறுபான்மையினர் நலன் புறக்கணிக்கப்படக்கூடாது. பிரிவினையை ஏற்படுத்தும் அரசியலில் தங்களை ஈடுபடுத்த வேண்டாம். ஒருதரப்பு மக்களுக்கு மட்டும் பயன் ஏற்படும் வகையில், நலிந்த மக்களை புறக்கணித்துவிட வேண்டாம்.


லஞ்சம் வாங்கிய கூட்டுறவுத்துறை அலுவலர் கைது

திருச்சி :

திருச்சியில் லஞ்சம் வாங்கிய தனி அலுவலர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி புல்லம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தனி அலுவலராக இருப்பவர் ஆனந்தன். இவர் பால் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கால அவகாசத்தை நீட்டித்து கொடுக்க ரூ. 2000 லஞ்சம் வாங்கினார்.

அப்போது திருச்சி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

11 ஜூன் 2010

75 வயது முதியவரை மரத்தில் தொங்கவிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்



ஜெய்ப்பூர் : 75வயது முதியவரை கயிறால் கட்டி, மரத்தில் தொங்கவிட்டு கொடுமைப்படுத்திய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் டோல்பூர் மாவட்டத்தில் உள்ள சாய்பா போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் 3 போலீசார் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ஜெய்தேவ் என்ற 75 வயது முதியவரை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் உள்ள மரத்தில் கட்டி தொங்க விட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக டோல்பூர் எஸ்.பி., சுரேந்திர குமார் உத்தரவின் பேரில், போலீசார் ராஜேந்திர காவியா, சமன்லால் மற்றும் கஜேந்திரா ஆகிய மூன்று பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இயக்குனருக்கு , நடிகை முத்தம் ! ஒரு கோடி கேட்டு மிரட்டல்?



கன்னட திரையுலகின் பிரபல நடிகை அமூல்யா 14 வயதிலேயே கதாநாயகியானவர். முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கன்னட இயக்குனர் ரத்னஜா இயக்கிய “பிரேமிசம்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதே இயக்குனர் “நெனபிரலி” என்ற படத்தையும் டைரக்டு செய்துள்ளார்.

பிரேமிசம் படத்தில் நடித்த போது அமூல்யாவுக்கும், ரத்னஜாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் ரகசியமாக முத்தமிட்ட புகைப்படம் நேற்று பெங்களூரில் வெளியானது.

டெலிவிஷன்களிலும் பத்திரிகைகளிலும் இப்படம் வந்தன. இதனால் கன்னட திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. ரத்னஜாவும் அமூல்யாவும் அதிர்ச்சியானார்கள்.

ஒரு முத்தம் கொடுத்தால் அடுத்து நான் இயக்கும் இரு படங்களில் உன்னை கதாநாயகியாக நடிக்க வைப்பேன் என்று இயக்குனர் ஆசைகாட்டியதாகவும், அதனால் அமூல்யா இயக்குனருக்கு முத்தம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை ரத்னஜாவே தனது செல்போனில் படம் பிடித்து வைத்திருந்ததாகவும் அதை பழுதுபார்க்க கொடுத்த போது படம் வெளியாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தை வெளியிட்டவர் ரத்னஜாவுக்கு டெலிபோன் செய்து ரூ.1 கோடி கேட்டு மிரட்டி உள்ளார். பணம் கொடுத்தால் படங்களை வெளியிட மாட்டேன் என்றும் கூறி இருக்கிறார். அதோடு ரத்னஜாவும் அமூல்யாவும் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற ஒரு நிமிட வீடியோபடமும் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார்.

மிரட்டலுக்கு ரத்னஜா பணியவில்லை. ரூ.1 கோடி கொடுக்கவும் மறுத்து விட்டார். இதையடுத்து முத்தக்காட்சி புகைப்படத்தை அந்த ஆசாமி வெளியிட்டு விட்டார்.

இது பற்றி ரத்னஜாகூறும் போது முத்தக்காட்சி புகைப்படம் உண்மையானது அல்ல. போலி படம். மார்பிங் செய்து வெளியிடப்பட்டு உள்ளது. படத்தை வெளியிடாமல் இருக்க என்னிடம் ரூ.1 கோடி கேட்டு பிளாக்மெயில் செய்தனர் என்றார்.

இந்த புகைப்படம் குறித்து அமூல்யா கூறியதாவது:-

இயக்குனர் ரத்னஜாவையும், என்னையும் சம்பந்தப்படுத்தி யாரோ வேண்டும் என்றே இப்படி ஒரு சதியை செய்துள்ளனர். எனது புகழை கண்டு பொறுக்க முடியாத அந்த நபர் நிச்சயம் எனது குடும்பத்தினரோ அல்லது உறவினர்களோ அல்ல. சினிமா துறையை சேர்ந்த யாரோ தான் இப்படி ஒரு கீழ்த்தரமான படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த படம் தயாரிக்கப்பட்டு இருப்பது அந்த படத்தை உன்னிப்பாக கவனித்தாலே நன்கு தெரியும். அந்த படத்தில் உள்ள பெண்ணின் தலை முடியில் உள்ள ரப்பர் வளையம் வித்தியாசமானது. அது போன்ற ரப்பர் வளையத்தை நான் பயன்படுத்துவது கிடையாது. மொத்தத்தில் அந்த படத்தில் சினிமா இயக்குனருடன் நெருக்கமாக இருக்கும் பெண் நான் அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது புகழை கெடுக்க, வேண்டுமென்றே நடந்துள்ள இந்த சதி திட்டத்தை சட்டரீதியாக சந்திப்பேன்.

இவ்வாறு நடிகை அமூல்யா கூறினார். பேட்டியின் போது அவரால் துக்கத்தை அடக்க முடியவில்லை. கண்ணீர் வழிந்தோட குரல் கம்மிய நிலையில் பேசினார்.



10 ஜூன் 2010

நடுரோட்டில் மாமூல் வாங்கும் போலீஸ் - படங்கள்







ஊழல் அதிகாரிகள் கலக்கம்:ஜார்க்கண்ட் கவர்னர் அதிரடி


ராஞ்சி:ஜார்க்கண்ட் அரசு பணியாளர் தேர்வாணையத்தில், முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது, வழக்குப்பதிவு செய்ய அம்மாநில கவர்னர் பரூக் உத்தரவிட்டுள்ளார்.

கவர்னரின் அதிரடியால், ஊழல் அதிகாரிகள் கதிகலங்கி உள்ளனர்.ஜார்க்கண்டில், 2007-08 ம் ஆண்டு நடந்த அரசு பணியாளர் தேர்வில், பெரிய அளவில் மோசடிகள் நடந்ததாக புகார் எழுந்தது. தேர்வாணைய தலைவராக இருந்த திலீப்குமார் பிரசாத் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் லஞ்சம் பெற்று கொண்டு, வேலை வழங்கியதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதுகுறித்து, ஊழல் கண்காணிப்பு துறை போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், தேர்வுத்துறை அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வாணைய பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர். புகார்கள் குறித்து விளக்கமளிக்குமாறு ஊழல் கண்காணிப்பு பிரிவு, 19 ஊழல் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது.


இந்த நிலையில், ஊழல் அதிகாரிகள் மீது எப் .ஐ.ஆர்., பதிவு செய்ய, அம்மாநில கவர்னர் பரூக் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, ஊழல் கண்காணிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில அரசு துறையில், லஞ்ச லாவண்யம் தாண்டவமாடுகிறது. அரசு அதிகாரிகள் ஊழலில் திளைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஊழல் அதிகாரிகள் மீது, கவர்னர் அதிரடி நடவடிக்கையை துவங்கியிருப்பது, மற்ற ஊழல் அதிகாரிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.



உடுமலை வனப் பகுதியில் தொடரும் சந்தன கட்டை திருட்டு.



உடுமலையில் வனத்துறையின் ஆய்வில் 196 கிலோ சந்தனக் கட்டை பிடிபட்டது. கடத்தலில் ஈடுபட்ட மூவர் சிக்கினர்; தொடர்புடையவர்களை பிடிக்க வனத்துறை விசாரணை செய்கிறது.

வனத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, சந்தனக் கட்டை கடத்தல் தொடர்பாக நேற்று, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர்.

உடுமலை மற்றும் திருப்பூரில் நடந்த தொடர் சோதனையில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான 196 கிலோ சந்தனைக் கட்டையை கைப்பற்றினர்.

உடுமலையில் வாகனச் சோதனையிலும், திருப்பூரில் நல்லூர் பள்ளக்காட்டுபுதூரில் ஒரு வாடகை வீட்டிலும் சந்தனக் கட்டைகளை கைப்பற்றினர்.

மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது: வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கடந்த ஒரு மாதமாக கண்காணிக்கப்பட்டது. இன்று சந்தனக்கட்டை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின் படி, உடுமலையில் வாகனச் சோதனை செய்யப்பட்டது. சோதனையில், பாலக்காட்டைச் சேர்ந்த அபிலேஷ்(29); கடம்பூரைச் சேர்ந்த பிபின்சந்திரன்(31) இருவரும் 76 கிலோ சந்தனைக் கட்டைகளுடன் சிக்கினர்.இருவரிடமும் விசாரித்ததில், திருப்பூரில் இருந்தும் கடத்தப்பட உள்ள செய்தி கிடைத்தது. நல்லூர் பள்ளக்காட்டு புதூரில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட்டதில் 120 கிலோ சந்தனக் கட்டைகள் கைப்பற்றப்பட்டன. திருப்பூர் சோதனையில், கோட்டையம் சந்தோஷ்(36) சிக்கினார்; ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார்.

கடத்தலில் தொடர்புடைய நபர்களை பிடிக்க, விசாரணை நடக்கிறது. உடுமலை மற்றும் திருப்பூரில் கைப்பற்றப்பட்ட 196 கிலோ சந்தனக் கட்டைகளின் மதிப்பு எட்டு லட்ச ரூபாய் இருக்கும். சந்தன ஆயில் தயாரிப்பதற்காக கடத்தல் நடப்பது தெரியவந்துள்ளது.

பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக என, வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் கைபற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிடிக்கப்பட்ட பெரிய கடத்தல் இதுவாகும்; இதற்கு முன், கடந்த 2009ம் ஆண்டு 300 கிலோ அளவிலான பெரிய கடத்தல் பிடிக்கப்பட்டது.இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.

09 ஜூன் 2010

3,500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய இன்ஜினியர் கைது


சென்னை : மின் இணைப்பு கொடுப்பதற்கு 3,500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவி இன்ஜினியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.

சென்னையைடுத்த, நங்கநல்லூர், தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் வெங்கடநாராயணன்(62); டி.ஐ., சைக்கிள்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வெங்கடநாராயணன், தன் வீட்டில் ஏற்கனவே இருந்த இருமுனை மின் இணைப்பை மாற்றி, மும்முனை இணைப்பை பெற, நங்கநல்லூரில் உள்ள மின்வாரியத்திற்கு கடந்த 3ம் தேதி சென்றுள்ளார். அங்கு உதவி இன்ஜினியராக பணிபுரிபவர் வெங்கடேசன்(50). இவர் மும்முனை இணைப்பை வழங்க 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் வெங்கடநாராயணன் புகார் செய்தார். ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று வெங்கடநாராயணன், வெங்கடேசனிடம் 3,500 ரூபாய் லஞ்சப் பணத்தை வழங்கினார். இதற்காக காத்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., நடராஜன் தலைமையிலான அதிகாரிகள், வெங்கடேசனை கைது செய்து, செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.

பழநியில் நிலம் அளக்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் ராஜேஸ்வரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகா அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் மகாலிங்கம்(42). விவசாயி. இவரும்.இவரது நண்பர் குப்புச்சாமியும் சில ஆண்டுகளுக்கு முன் 3 ஏக்கர் நிலம் வாங்கினர்.

சொட்டு நீர்பாசனம் செய்வதற்கு தனிப்பட்டா தேவைப்படவே வருவாய்துறையிடம் மகாலிங்கம் மனு செய்தார். நிலத்தை அளக்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என சர்வேயர் ராஜேஸ்வரன் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் மகாலிங்கம் புகார் தந்தார்.

பணம் தருவதாக ராஜேஸ்வரனிடம் கூறுமாறு போலீசார் ஆலோசனை தந்தனர். அதன்படி மகாலிங்கம் பேசியபோது, தான் தங்கியுள்ள லாட்ஜிற்கு பணத்துடன் வருமாறு ராஜேஸ்வரன் கூறியுள்ளார். நேற்றிரவு லாட்ஜ் அறையில் ரூ. 8 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கியபோது, டி.எஸ்.பி., முருகேசன், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சுந்தரராஜன் மற்றும் போலீசார் ராஜேஸ்வரனை கைது செய்தனர். சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

லஞ்ச பணத்தை தூக்கி எறிந்து தப்பி ஓடிய ஆர்.ஐ., கைது






விருதுநகர் : லஞ்சம் வாங்கிய போது, போலீசாரைப் பார்த்ததும் பணத்தை கீழே வீசி தப்பி ஓடிய வருவாய் ஆய்வாளர், திண்டுக்கலில் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கங்காகுளத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர், சில நாட்களுக்கு முன், டிராக்டரில் மண் அள்ளும் போது, சிவகாசி ஆர்.ஐ., பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அப்போது பழனிச்சாமி, நடைச் சீட்டைக் காட்டினார். "இதை ஏற்க முடியாது; மாதம் ஆயிரம் ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும்' என, ஆர்.ஐ., வலியுறுத்தினார்.

இதுகுறித்து பழனிச்சாமி, விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு, சாட்சியாபுரம் ஆர்.ஐ., அலுவலகம் சென்ற பழனிச்சாமி, பாலசுப்பிரமணியனிடம், ரசாயனம் தடவிய ஆயிரம் ரூபாயை கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மற்றும் போலீசார், பாலசுப்பிரமணியத்தை பிடிக்க முயன்றனர். அப்போது அவர், பணத்தைக் கீழே வீசி, போலீசாரையும் தள்ளி விட்டு, டூவீலரில் தப்பிச் சென்றார்.

அவருக்கு நெருக்கமான நபர் மூலம், அவரது மொபைலில் தொடர்பு கொண்ட போது, திண்டுக்கலில் உள்ள லாட்ஜில் இருப்பது தெரிந்து, நேற்று அதிகாலை 2 மணிக்கு, போலீசார் அவரை கைது செய்தனர்.