10 ஜூன் 2010
உடுமலை வனப் பகுதியில் தொடரும் சந்தன கட்டை திருட்டு.
உடுமலையில் வனத்துறையின் ஆய்வில் 196 கிலோ சந்தனக் கட்டை பிடிபட்டது. கடத்தலில் ஈடுபட்ட மூவர் சிக்கினர்; தொடர்புடையவர்களை பிடிக்க வனத்துறை விசாரணை செய்கிறது.
வனத்துறைக்கு கிடைத்த தகவலின் படி, சந்தனக் கட்டை கடத்தல் தொடர்பாக நேற்று, மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான குழுவினர் ஈடுபட்டனர்.
உடுமலை மற்றும் திருப்பூரில் நடந்த தொடர் சோதனையில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான 196 கிலோ சந்தனைக் கட்டையை கைப்பற்றினர்.
உடுமலையில் வாகனச் சோதனையிலும், திருப்பூரில் நல்லூர் பள்ளக்காட்டுபுதூரில் ஒரு வாடகை வீட்டிலும் சந்தனக் கட்டைகளை கைப்பற்றினர்.
மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது: வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கடந்த ஒரு மாதமாக கண்காணிக்கப்பட்டது. இன்று சந்தனக்கட்டை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின் படி, உடுமலையில் வாகனச் சோதனை செய்யப்பட்டது. சோதனையில், பாலக்காட்டைச் சேர்ந்த அபிலேஷ்(29); கடம்பூரைச் சேர்ந்த பிபின்சந்திரன்(31) இருவரும் 76 கிலோ சந்தனைக் கட்டைகளுடன் சிக்கினர்.இருவரிடமும் விசாரித்ததில், திருப்பூரில் இருந்தும் கடத்தப்பட உள்ள செய்தி கிடைத்தது. நல்லூர் பள்ளக்காட்டு புதூரில் உள்ள ஒரு வீட்டில் சோதனையிட்டதில் 120 கிலோ சந்தனக் கட்டைகள் கைப்பற்றப்பட்டன. திருப்பூர் சோதனையில், கோட்டையம் சந்தோஷ்(36) சிக்கினார்; ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார்.
கடத்தலில் தொடர்புடைய நபர்களை பிடிக்க, விசாரணை நடக்கிறது. உடுமலை மற்றும் திருப்பூரில் கைப்பற்றப்பட்ட 196 கிலோ சந்தனக் கட்டைகளின் மதிப்பு எட்டு லட்ச ரூபாய் இருக்கும். சந்தன ஆயில் தயாரிப்பதற்காக கடத்தல் நடப்பது தெரியவந்துள்ளது.
பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதற்காக என, வீடு வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் கைபற்றப்பட்டுள்ளன. இந்த ஆண்டு பிடிக்கப்பட்ட பெரிய கடத்தல் இதுவாகும்; இதற்கு முன், கடந்த 2009ம் ஆண்டு 300 கிலோ அளவிலான பெரிய கடத்தல் பிடிக்கப்பட்டது.இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக