புதியவை :

Grab the widget  Tech Dreams

23 ஜூன் 2010

துடி துடித்து இறந்த கர்ப்பிணி :பணிக்கு வராத பெண் டாக்டர்.


திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி, கீழபள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சுபகானி. ஒட்டல் தொழிலாளி. இவரது மனைவி ஷமீலாபீவி(26). திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. மூன்று வயதில் மகன் உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான ஷமீலா பீவி, பிரசவ வலி ஏற்பட்டதால் காலையில் 6 மணிக்கு புளியங்குடி உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

புளியங்குடி ஆஸ்பத்திரி 24 மணிநேரமும் டாக்டர்கள் இருக்க கூடிய 72 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியாகும். ஆனால் ஷமீலா பீவி சென்ற நேரத்தில் இரவு பணி முடித்த டாக்டர், கர்ப்பிணியை பார்த்துவிட்டு வயிற்றில் குழந்தையின் துடிப்பு நன்றாக இருப்பதாகவும் 9 மணிவாக்கில் பிரசவம் ஏற்படலாம் என கூறிவிட்டு அடுத்த டாக்டரிடம் பணியை ஒப்படைத்துவிட்டு சென்றார்.6 மணிக்கு பிறகு பணிக்கு வந்தவர் டாக்டர் சித்ரா. இவர் கண், மூக்கு நோய்களுக்கு சிகிச்சையளிப்பவர். எனவே பிரசவத்திற்காக அடுத்து பணிக்கு வரவேண்டிய பெண் டாக்டருக்கு போன் செய்துஅழைத்துள்ளார். அந்த பெண் டாக்டர் உரிய நேரத்திற்கு வரவில்லை. காலை 8 மணியை கடந்ததும் பிரசவ வலியால் ஷமீலா பீவி துடிதுடித்தார்.

தொடர்ந்து பலமுறை போன் செய்தும் பணிக்கு வரவேண்டிய பிரசவ டாக்டர் வரவில்லை. அங்கிருந்து நர்ஸ்களோ மேற்கொண்டு செய்வதறியாது திகைத்தனர். மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டிய கர்ப்பிணி காலை 9 மணிக்கு பரிதாபமாக இறந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்தது.

. 24 மணிநேரமும் பணியில் இருக்கவேண்டிய டாக்டர்கள் வராததால் இரண்டு உயிர்கள் பறி போன அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக இதுபோல சம்பவங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகள் கடைசிநேரத்தில்தான் வந்தார்கள். எனவே எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை என சமாளிப்புகளை சொல்வார்கள். ஆனால் இன்றைய சம்பவத்தில் காலை 6 மணிக்கே ஆஸ்பத்திரிக்கு வந்தும் டாக்டர்களின் கவனக்குறைவால் 3 மணிநேரம் துடிதுடித்து பின் இறந்துள்ளார். எனவே அவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கக்கோரி ஷமீலாபீவியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார், ஆர்.டி.ஓ.,உள்ளிட்ட அதிகாரிகள் வந்து உடல்களை பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவத்தில் பணிக்கு வராமல் உயிர் இழப்பிற்கு காரணமாக டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கலெக்டர் ஜெயராமன் உத்தரவிட்டார். எனவே டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மருத்துவ துறை இயக்குநருக்கு பரிந்துரைத்துள்ளதாக நெல்லை மருத்துவ பணிகள் இணை இயக்குநர் உஷா ரிஷபதாஸ் தெரிவித்தார்.

புளியங்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் நர்சுகள் மீது வழக்கு

புளியங்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புளியங்குடி புதுமனை 3ம் தெருவை சேர்ந்தவர் சுபகானி. இவரது மனைவி ஜமிலாபீவி (26). நேற்று முன்தினம் ஜமாலாபீவி இரண்டாவது பிரசவத்திற்காக அதிகாலை 6 மணியளவில் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இருந்த நர்சுகள் தாயும் சிசுவும் நன்றாக இருப்பதாகவும், இன்னும் இரண்டு மணிநேரத்தில் குழந்தை பிறந்துவிடும் எனவும் கூறியதாக தெரிகிறது. ஆனால் நேரம் அதிகமாகவே ஜமிலாபீவி பிரசவலியால் துடித்துள்ளார்.

ஆனால் நர்சுகள் டாக்டர்களுக்கு தகவல் கூறியும் டாக்டர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வலியின் தாக்கத்தால் குழந்தை பிரசவிக்க முடியாமல் ஜமிலாபீவி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுபகானி புளியங்குடி போலீஸ் ஸ்டேஷசனில் புகார் மனு அளித்தார்.

அந்த மனுவில், தனது மனைவி பிரசவவலியால் துடி துடித்தபோதும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அலட்சியமாகவும், மெத்தனமாகவும் செயல்பட்டுள்ளனர். எனது மனைவியின் இறப்பிற்கு இவர்கள் தான் காரணம். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தெய்வம் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது வழக்கு பதிவு செய்தார். மேலும் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



1 கருத்து:

  1. ச்சே .என்ன கொடுமை இது. புனிதமான டாக்டர் தொழில் பார்க்கும் லட்சனமா இது. குறைந்தது எட்டு வருஷம் தூக்கி உள்ளே போடனும்

    பதிலளிநீக்கு