புதியவை :

Grab the widget  Tech Dreams

24 ஜூன் 2010

லஞ்சம்:வணிகவரித்துறை அதிகாரிகள் கைது


நாகர்கோவில் : நாகர்கோவிலில் வணிக நிறுவனத்திற்கு பதிவு சான்று வழங்க லஞ்சம் வாங்கிய வணிகவரித்துறை அதிகாரி மற்றும் உதவி வணிக வரித்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.


நாகர்கோவில் சைமன்நகர் தங்கையாநாடார் மகன் ராஜேந்திரன். இவர் நல்லமிளகு, ஏலம், கிராம்பு போன்ற தானியங்கள் வியாபாரம் செய்து வருகிறார். இவர் வைத்தியநாதபுரம் பகுதியில் வணிக நிறுவனம் துவங்குவதற்காக திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் அமைத்துள்ள கடைக்கு பதிவு சான்று பெறுவதற்காக நாகர்கோவிலில் உள்ள வணிகவரித்துறையில் கடந்த மாதம் விண்ணப்பித்தார்.

ஒருமாதம் ஆகியும் வணிகவரித்துறையில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இதையடுத்து கடந்த 21ம் தேதி வணிகவரித்துறை அலுவலகம் சென்று அங்கு பணியில் இருந்த உதவி வணிக வரி அதிகாரி சுப்புராமன் (32) என்பவரை சந்தித்துள்ளார். அவரிடம் பதிவு சான்று குறித்து கேட்ட போது தனக்கு 1000 ரூபாய் தந்தால்தான் சான்று தரமுடியும் என கூறியுள்ளார். இதையடுத்து ராஜேந்திரன் வணிக வரி அதிகாரி செல்வராஜ் (54) என்பவரை சந்தித்துள்ளார். அவரும் தனக்கு 2000 ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார். 23ம் தேதி கடையில் ஆய்வுக்காக வரும்போது பணத்தை தரவேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். புகாரின்படி லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜேந்திரனிடம் கொடுத்து அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது கொடுக்க ஆலோசனை வழங்கினர்.

வணிகவரித்துறை அதிகாரிகள் கூறியதுபோல் நேற்று ராஜேந்திரனின் கடைக்கு சென்றனர். அவர்களிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவர் கொடுத்தார். அதிகாரிகள் லஞ்ச பணம் பெறும்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், ஹெக்டர் தர்மராஜ், பீட்டர்பால்துரை, சப் இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் ஏட்டுகள் அடங்கிய குழுவினர் அதிகாரிகளை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் நாகர்கோவில் சிஜேஎம் கோர்டில் நீதிபதி துரைசண்முகம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக