சுயஉதவி குழு பெண்களுக்கு கடன் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட, பாங்க் மேலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்துள்ள மாவடியை சேர்ந்தவர் கங்காதேவி என்ற ஜெனிபர்(44). திருமணமாகி மகள் உள்ளார். கணவரை விட்டு பிரிந்துவிட்டார். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசத் தெரியும். அதையே மூலதனமாக்கினார். சுய உதவி குழுக்களின் தலைவிகள், தொழிலதிபர்கள் ஆகியோரின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு, தம்மை பாங்க் அதிகாரி என கூறி ஆங்கிலத்தில் பேசி கலக்குவார்.
நாங்குநேரி பகுதியில் பாண்டியன் கிராம பாங்க் களஅதிகாரியாக பணியாற்றிய பாலசுப்பிரமணியன்(54) என்பவருடன், ஜெனிபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். அத்துடன், ஷேக் பாபு என்ற வாலிபருடன் இணைந்து வாழும் ஜெனிபர், குமரி மாவட்டம் தோவாளையில் சிறிய ஓட்டல் நடத்தி வந்தார். அந்த பகுதியில் தொழில் செய்து வரும் பொன்ராஜ் என்பவருக்கு தொழில் கடன் பெற்றுத்தருவதாக கூறி, 66 ஆயிரத்து 500 ரூபாய் வாங்கியுள்ளார். அதனை நம்ப செய்வதற்காக தற்போது கூடங்குளம் பாண்டியன் கிராம பாங்க் மேலாளராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வரும் பாலசுப்பிரமணியத்தை(54) அழைத்து வந்துள்ளார். அவரும் கடன் கிடைக்குமென நம்பிக்கை கூறியுள்ளார். ஆனால் கடன் கிடைத்தபாடில்லை.
இதே போன்று பலரிடம் ஜெனிபர் கடன் பெற்று தருவதாக, பாலசுப்பிரமணியத்தை பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பணத்தை இழந்த பொன்ராஜ் புகாரின் பேரில் போலீசார் விசாரித்தனர். பல பெண்களிடம் மோசடி செய்து, 10 லட்சம் ரூபாய்க்கும் மேலாக ஜெனிபர் கும்பல் வசூலித்திருப்பது தெரியவந்தது. எஸ்.பி., உத்தரவின் பேரில், நாங்குநேரி போலீசார், ஜெனிபர், ஷேக் பாபு, பாங்க் மேலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்தனர். ஜெனிபரிடமிருந்த பல மோசடி ஆவணங்களையும் கைப்பற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக