புதியவை :

Grab the widget  Tech Dreams

08 ஜூன் 2010

மதுரையில் ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது


மதுரை : கட்டடத்தின் அருகே செல்லும் மின் வயர்களில் பாதுகாப்பிற்காக பி.வி.சி., பைப்களை பொருத்த, 2500 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மதுரை மாகாளிப்பட்டி மின்வாரிய இளநிலை பொறியாளர் முருகனை போலீசார் கைது செய்தார்.

மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(43). கத்தாரில் வேலை பார்த்து, சில மாதங்களுக்கு முன் இங்கு வந்தார். கீரைத்துறை தாயுமானவர் சுவாமி கோயில் தெருவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். மின் வயர்கள் வீட்டின் மிக அருகில் செல்வதால், மாடியில் கட்டட வேலை செய்யும் போது மின் கசிவு ஏற்படலாம். எனவே, பாதுகாப்பு நடவடிக்கையாக மின்வயர்களில் பி.வி.சி.,பைப்களை பொருத்த அனுமதிக்குமாறு, மாகாளிப்பட்டி மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் முருகனிடம்(40), கிருஷ்ணமூர்த்தி விண்ணப்பித்தார்.

முருகன், ""நீங்களே பி.வி.சி.,பைப்களை பொருத்திக்கொள்ளுங்கள். எனக்கு 3000 ரூபாய் லஞ்சம் கொடுங்கள்,'' என கூறியுள்ளார். கிருஷ்ணமூர்த்தி மறுத்துள்ளார். பின் பேரம் பேசியதில், 2500 ரூபாய் தர சம்மதித்தார்.

அவர் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். நேற்று மாலை 6 மணிக்கு முருகனிடம் ரசாயனம் தடவிய 2500 ரூபாயை கிருஷ்ணமூர்த்தி கொடுத்தார். மறைந்திருந்த டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன், இன்ஸ்பெக்டர் தமிழ்ச் செல்வன், முருகனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.

ஆரப்பாளையத்திலுள்ள முருகன் வீட்டிலும் போலீசார் இரவு சோதனை நடத்தினர். அவர், ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து, ஓராண்டிற்கு முன் மதுரைக்கு மாறுதலாகி வந்துள்ளார். இதேபோல், இதற்கு முன் அவர் மீது பல புகார்கள் வந்துள்ளன. அதிலிருந்து தப்பிய முருகன், நேற்று சிக்கிக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக