03 ஜூன் 2010
துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை.
பெ.நா.பாளையம்: கோவை, துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையின்போது, 77 ஆயிரத்து 400 ரூபாய் கைப்பற்றப்பட்டது. துடியலூரில் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.
இதில், 33 கிராம சுகாதார செவிலியர்கள் பணியாற்றுகின்றனர். கிராமப்புற சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம சுகாதார செவிலியர் மற்றும் துடியலூர் வட்டார மருத்துவ அலுவலர் பெயரில், ஒவ்வொரு ஆண்டும் அரசு தலா 10 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தும். அவசர, அவசிய தேவைகளின்போது வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் கிராமப்புற செவிலியர் இருவரும் கையெழுத்திட்டு பணத்தை வங்கியில் இருந்து பெற்று செலவழிக்கலாம்.
இதற்கு சரியான கணக்கு பராமரிக்க வேண்டும். இதன்படி துடியலூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் 33 கிராமப்புற சுகாதார செவிலியர்கள் கணக்கில் தலா 10 ஆயிரம் ரூபாய் இருப்பில் உள்ளது. இதில் இருந்து தலா 2,000 முதல் 6,000 ரூபாய் வரை கட்டாயமாக எடுத்து வர துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதை தொடர்ந்து நேற்று பகல் 2.00 மணிக்கு கோவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையில் போலீசார், துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிரடி சோதனையில் இறங்கினர். இதில், கிராமப்புற சுகாதார செவிலியர்களிடம் போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் காட்டப்படாத 77 ஆயிரத்து 400 ரூபாயை கைப்பற்றினர்.
இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்.பி., சண்முகப்பிரியா கூறியதாவது: தற்போது கைப்பற்றப்பட்ட ரொக்கம் கணக்கில் காட்டப்படாத பணமாக கொள்ளப்படும். விசாரணைக்கு பின், அரசு பணத்தை தவறாக கையாண்டதாக வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு சண்முகப்பிரியா கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக