புதியவை :

Grab the widget  Tech Dreams

03 ஜூன் 2010

பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம்: சர்வேயர்கள் இரண்டு பேர் கைது


சிவகாசி: சிவகாசியில், பட்டா வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் மற்றும் தலைமை சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி தாலுகா, கீழான்மறைநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர், சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். சிவகாசியில் இவருக்கு 10 சென்ட் பூர்வீக நிலம் உள்ளது. இந்நிலத்தை "சப்-டிவிஷன்' செய்து தனிப்பட்டா வழங்கக் கோரி, சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரிடம் கடந்த ஏப்., 13ம் தேதி மனு அளித்தார். தாசில்தாரும் மனுவை எதிர்கோட்டை சர்வேயர் வேலுவுக்கு பரிந்துரை செய்து அனுப்பினார்.

15 நாள் ஆகியும் தகவல் எதுவும் வராததால் கிருஷ்ணசாமி, சர்வேயர் வேலுவிடம் பட்டா குறித்து கேட்டார். நிலத்தில் சிக்கல் உள்ளதால், தலைமை சர்வேயர் நிலத்தை அளக்க வேண்டும். தனக்கும், தலைமை சர்வேயருக்கும் தலா 5,000 ரூபாய் தந்தால் தானே பட்டா வாங்கிக் கொடுப்பதாகவும், சந்தேகமிருந்தால் தலைமை சர்வேயரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று வேலு கூறினார்.
கிருஷ்ணசாமி, மொபைல் போனில் கேட்டபோது "பணத்தை வேலுவிடமே கொடுங்கள். பட்டா கொடுத்து விடுகிறோம்' என, தலைமை சர்வேயர் கூறினார்.

இதுகுறித்து கிருஷ்ணசாமி, விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ரசாயன பவுடர் தடவி போலீசார் கொடுத்த 10 ஆயிரம் ரூபாயை, சாட்சியாபுரம் ஓட்டல் அறையில் தங்கியிருந்த வேலுவிடம், நேற்று மாலை 3 மணிக்கு கிருஷ்ணசாமி கொடுத்தார். அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., சியாமளா தேவி, இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார், பணத்தை கைப்பற்றி வேலுவையும், பின்னர் தலைமை சர்வேயர் சேதுபாண்டியனையும் கைது செய்தனர். ரிசர்வ் லைனிலுள்ள வேலுவின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக