மண்ணச்சநல்லூர் : திருச்சி அருகே பட்டா வழங்க கூலித் தொழிலாளியிடம் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,வை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மேலசீதேவி மங்கலத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா மனைவி தமிழரசி(50). கூலித்தொழிலாளியான இவருக்கு, 2004ம் ஆண்டு இரண்டு சென்ட் நிலம் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. இதில், தொகுப்பு வீடு கட்டுவதற்காக பட்டா தேவைப்பட்டதால், மண்ணச்சநல்லூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதுதொடர்பாக, வி.ஏ.ஓ.,வை சந்தித்து சான்று வாங்கி வரும்படி தாலுகா அலுவலக அதிகாரிகள் தமிழரசியிடம் தெரிவித்தனர். மேலசீதேவி மங்கலம் வி.ஏ.ஓ., அன்பழகனிடம், பட்டா பெறுவதற்கான சான்றுகளை தமிழரசி கேட்டபோது, அவர் தர மறுத்து அலைக்கழித்தார். 1,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் சான்று வழங்குவதாகவும் வி.ஏ.ஓ., அன்பழகன் தெரிவித்துள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தமிழரசி, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., அம்பிகாபதியிடம் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், நேற்று மதியம் 12.45 மணியளவில் மண்ணச்சநல்லூரில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் சென்ற தமிழரசி, வி.ஏ.ஓ., அன்பழகனுக்கு, 1,000 ரூபாய் பணம் கொடுக்க முயன்றார்.
அப்போது, திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., அம்பிகாபதி மற்றும் அங்கு மறைந்திருந்து கண்காணித்த போலீசார், வி.ஏ.ஓ., அன்பழகனை சுற்றிவளைத்து கைது செய்தனர். திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட வி.ஏ.ஓ.,விடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பின் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வி.ஏ.ஓ.,வை ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக