புதியவை :

Grab the widget  Tech Dreams

12 ஜூன் 2010

நான் அவனில்லை - திருமணம் செய்வதாக சொல்லி 17 பெண்களை மயக்கி மோசடி

திருமணம் செய்துகொள்வதாக கூறி கல்லூரி பேராசிரியை உள்பட 17 பெண்களிடம் மோசடி செய்ததாக கோவையைச் சேர்ந்த ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

.
பெண் சப்இன்ஸ்பெக்டர் ஒருவர் மூலம் அவரை பொறி வைத்து போலீசார் பிடித்தனர். அவர் பயன்படுத்திய கார், விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.போரூரைச் சேர்ந்த திலகவதி என்ற பெண் சென்னை புறநகர் போலீஸ் கமிஷ்னர் ஜாங்கிட்டிடம் புகார் ஒன்றை கொடுத்தார். அசோக் என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடைய ஏடிஎம் கார்டில் இருந்த பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளதாக அந்த புகாரில் கூறியிருந்தார்.

ஜாங்கிட் உத்தரவின் கீழ் புறநகர் உதவிக் கமிஷனர் வீரபெருமாள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அன்பழகன் ஆகியோருடன் மங்கள லட்சுமி என்ற பெண் சப் இன்ஸ்பெக்டரும் இந்த குழுவில் இடம்பெற்றிருந்தார்.

அவரை எப்படி பொறியில் சிக்க வைத்து பிடித்தோம் என்பதை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் விவரித்தார்.

அசோக் செல்போனுக்கு மங்கள லட்சுமி போன் செய்து, "சதீஷ் இருக்கிறாரா? அவரிடம் திருமண விஷயமாக பேச வேண்டும்' என்று கூறி இருக்கிறார். உடனே, அசோக் "இது சதீஷ் நம்பர் அல்ல, என் பெயர் அசோக்' என்று கூறியிருக்கிறார். உடனே மங்கள லட்சுமி "சாரி, ராங் நம்பர்' என கூறியிருக்கிறார்.

ஆனால் அசோக் விடாமல் "பரவாயில்லை, சதீஷ் என் நண்பர்தான். அவரிடம் என்ன கூற விரும்புகிறீர்களோ அதை என்னிடம் கூறலாம்' என்று கூறியிருக்கிறார். அப்போது மங்கள லட்சுமி "நான் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். நீண்ட நாட்களாகியும் எனக்கு திருமணம் ஆகவில்லை' என்று கூறியிருக்கிறார். "நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?' என்று மங்கள லட்சுமி கேட்டிருக்கிறார்.

"நான் எம்பிஏ பட்டதாரி. தங்க வியாபாரம் செய்கிறேன். விதவை பெண்கள், நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள் யாருக்காவது வாழ்வு கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களை வேண்டுமானால் நான் திருமணம் செய்துகொள்கிறேன்' என்று அசோக் கூறினார்.

"திருமணத்திற்காக நான் 3 லட்ச ரூபாய் சேர்த்து வைத்திருக்கிறேன். இப்போதே அந்த பணத்திற்கு தங்கம் வாங்கி வைத்துக்கொள்ளலாம். ஆகவே நேரில் பார்ப்போமா' என மங்கள லட்சுமி கேட்டிருக்கிறார்.மங்கள லட்சுமி விரித்த வலையில் விழுந்த அசோக் அவரை நேராக சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். பணத்துடன் முதலில் வண்டலூருக்கு வருமாறு கூறினார்.
மங்கள லட்சுமி மப்டியில் வண்டலூருக்கு சென்றிருக்கிறார். அவருக்கு பின்னால் போலீசார் மாறு வேடத்தில் சென்றார்கள். அப்போது அசோக் சிங்கபெருமாள் கோயிலுக்கு வருமாறு போனில் கூறியிருக்கிறார்.

மங்கள லட்சுமி சிங்கபெருமாள் கோயிலுக்கு சென்றார். "இங்கு வேண்டாம். திண்டிவனம் பஸ்ஸில் ஏறி மேல்மருவத்தூருக்கு வந்து விடுங்கள். அங்கு தங்கம் வாங்கி தருகிறேன்' என்று கூறியிருக்கிறார். அதன்படி மங்கள லட்சுமி ஒரு பஸ்ஸில் ஏறி மேல்மருவத் தூருக்கு சென்று கொண்டிருந்தார். அந்த பஸ் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது அசோக் மீண்டும் கூப்பிட்டார்.

"நீங்கள் பஸ்ஸை விட்டு இறங்கி விடுங்கள். நான் காரில் வந்து உங்களை அழைத்துச் செல்கிறேன்' என்று கூறியிருக்கிறார். அதன் படியே, மங்கள லட்சுமி பஸ்ஸை விட்டு இறங்கி, நின்று கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அசோக் ஒரு காரில் வந்தார். அவருடைய காரில் மங்கள லட்சுமி ஏறும் சமயத்தில் பின்னால் மாறுவேடத்தில் வந்த போலீசார் அவருடைய காரை சூழ்ந்து கொண்டு மடக்கி பிடித்தார்கள்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவருடைய உண்மையான பெயர் ரவிச்சந்திரன் (வயது 34) என தெரியவந்தது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுண்டக்காபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், 10 ம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறார் என தெரியவந்தது.

5 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை வீட்டிலிருந்து பெற்றோர் துரத்தி விட்டனர். அதன் பிறகு அவர் மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் சுற்றிக் கொண்டிருந்தார். கல்யாண மாலை புத்தகத்தை பார்த்த பிறகு அவருக்கு இந்த மோசடி திட்டம் உருவாகி இருக்கிறது. அதில் உள்ள பெண்களுக்கு போன் செய்து தன் வலையில் வீழ்த்தி வந்திருக்கிறார்.

முதலில் தாராபுரத்தைச் சேர்ந்த உமாதேவி என்ற பேராசிரியை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார். முதலில் பேராசிரியையின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரச் செய்து அங்கு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு பேராசிரியையின் பெற்றோர்கள் அவர்களே சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மனைவியுடன் குடும்பம் நடத்தினார். அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஸ்ரேயா என்ற குழந்தை உள்ளது.

ஒரு செல்போன் வாங்கி அந்த செல்போன் மூலம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சாந்தி என்ற பேராசிரியை தொடர்பு கொண்டு திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார். அவரை பெண் பார்த்து விட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் மீண்டும் வந்து தனது தாய் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக ரூ.3 லட்சம் தேவைப்படுவதாகவும் தன்னிடம் ரூ.1 லட்சம் மட்டுமே இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இதை நம்பி பேராசிரியை தனது ஏடிஎம் கார்டை கொடுத்திருக்கிறார். அதிலிருந்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து எடுத்துக்கொண்டு அசோக் தலைமறைவாகிவிட்டார். இதேபோல ஆவடியைச் சேர்ந்த ரமா என்ற பேராசிரியை ஏமாற்றி அவருடைய ஏடிஎம் கார்டிலிருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை மோசடி செய்திருக்கிறார்.

இதுபோல சுமார் 17 பெண்களிடம் அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 4 பெண்கள் பற்றிய விவரமே தெரியவந்துள்ளது. மற்றவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். மதுரையைச் சேர்ந்த நண்பரிடமிருந்து காரை பழுது பார்ப்பதாக கூறி வாங்கி வந்து ஏமாற்ற முயன்றபோது தான் அவர் போலீசாரிடம் சிக்கினார். அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர் பயன்படுத்தி ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள செல்போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒவ்வொரு பெண்களையும் ஏமாற்றுவதற்கு முன்பு ஒரு செல் நம்பரை வாங்கி பயன்படுத்தி விட்டு பின்னர் தூக்கி எறிந்துவிடுவார். மேலும் பொய்யான முகவரியை கொடுத்து இதுபோல அவர் சிம்கார்டு பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக