புதியவை :

Grab the widget  Tech Dreams

29 ஜூன் 2010

65 பெண்களை ஏமாற்றிய நபருக்கு தர்ம அடி


காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இலவச வீட்டு மனை பெற்றுத் தருவதாகக் கூறி, 65 பெண்களிடம் தலா 10 ஆயிரம் ரூபாய் வாங்கி, ஏமாற்றியவரை பெண்கள் செருப்பால் அடித்து உதைத்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் அடுத்த செவிலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் விநாயகம்(41). இவர் "மக்கள் தளபதி' என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை நடத்தி வருகிறார். இதற்கு அரசு அனுமதி பெறவில்லை. தனிச்சுற்றுக்கு மட்டும் எனக் கூறி தி.மு.க., பிரமுகர்களிடம் விளம்பரம் பெற்று, மாத இதழை வெளியிட்டு வந்தார்.சில மாதங்களுக்கு முன், அரசு டாக்டரை அடித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் இவர் தாயார் குளம், கரிக்கினில் அமர்ந்தவள் கோவில் தெரு பகுதியில் அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு, இலவச வீட்டு மனை பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளார். "அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தெரியும். எனவே எளிதாக வீட்டு மனை பெற்றுவிடுவேன். அதற்கு சிறிது பணம் செலவாகும். அதை மட்டும் தாருங்கள்' எனக் கூறியுள்ளார். அதை நம்பிய பெண்கள் அவ்வப்போது அவர் கேட்ட தொகையை செலுத்தியுள்ளனர். ஒவ்வொருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்றுக் கொண்ட விநாயகம், தனது மனைவி உட்பட 65 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என, கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். அவர் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, ஆர்.டி.ஓ.,விற்கு பரிந்துரை செய்துள்ளார். அவர் தாசில்தாருக்கு அனுப்பியுள்ளார். அதன்பேரில், வருவாய் துறை அதிகாரிகள் ஓரிக்கை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்குவது குறித்து பரிசீலனை செய்துள்ளனர். அவ்விடத்தில் மொத்தம் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. அதில் குறிப்பிட்ட பகுதி ஏற்கனவே அரவாணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடத்தை அரவாணிகளுக்கே ஒதுக்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.


இந்நிலையில், அந்த இடத்தை விநாயகம் கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு, அதிகாரிகள் ஒதுக்க முடிவு செய்ததை அறிந்த அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் கிருஷ்ணவேணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த இடத்தை, ஓரிக்கை ஊராட்சியில் வீட்டுமனை இல்லாத ஏழைகளுக்கு வழங்க வேண்டும். வெளியிலிருந்து வருபவர்களுக்கு வழங்கக் கூடாது என, தாலுகா அலுவலகத்தில் கடிதம் கொடுத்துள்ளார். இதனால் அதிகாரிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்றுமுன்தினம், விநாயகம் மீண்டும் 65 பெண்களிடம் சென்று, நிலத்தை பெற மேற்கொண்டு 10 ஆயிரம் ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். அவர்கள் மறுநாள் பணம் தருவதாகக் கூறியுள்ளனர்.


நேற்று பணம் பெற வந்த விநாயகத்தை பெண்கள் சுற்றி வளைத்தனர். தங்களுக்கு நிலத்தை காட்ட வேண்டும் என்றனர். அவரும் ஆட்டோவில் பெண்களுடன் ஓரிக்கை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள நிலத்திற்கு அழைத்து சென்றார். அப்போது, அங்கிருந்த அரவாணிகள் இந்நிலம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதை எப்படி உங்களுக்கு தருவார்கள் எனக் கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் விநாயகத்தை தாக்க துவங்கினர். சிலர் செருப்பால் அடித்தனர். பின் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தகவல் அறிந்து, காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத், மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரு மற்றும் போலீசார் விரைந்து சென்று, விநாயகத்தை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.அவரிடம் பணம் கொடுத்த பெண்கள், தங்களை விநாயகம் ஏமாற்றி விட்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மோசடி, நம்பிக்கை துரோகம், மிரட்டல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.


இது குறித்து விநாயகம் கூறுகையில், "மக்களிடம் வாங்கிய பணத்தை வருவாய் துறை அதிகாரிகளுக்கு கொடுத்தேன். நான் எதுவும் எடுக்கவில்லை. அதிகாரிகளும் இடத்தை அளந்து கொடுக்க தயாராக இருந்தனர். அதற்குள் சில பெண்கள் அவசரப்பட்டு என்னை தாக்கிவிட்டனர்' என்றார்.யார், யாருக்கு பணம் கொடுத்தீர்கள் எனக் கேட்டதற்கு பெயர்களை வெளியிட மறுத்து விட்டார். இது குறித்து, தாலுகா அலுவலகத்திலிருந்த மண்டல துணை தாசில்தார் விஜயனை கேட்டபோது, "விநாயகம் 65 பெண்களுக்கு இலவச வீட்டுமனை வேண்டும் எனக் கொடுத்த மனுவை பரிசீலனை செய்தோம். ஒன்றியக் கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்ததும் நிறுத்திவிட்டோம். இடம் வழங்க முடிவு செய்யவில்லை. அவரிடம் யாரும் பணம் பெறவில்லை. அவர் வேண்டுமென்று கூறுகிறார்' என்றார்.


ஏமாந்த பெண்களிடம் அவரை எப்படி நம்பி பணம் கொடுத்தீர்கள் எனக் கேட்டபோது, "நம்பிக்கையின்பேரில் கொடுத்தோம். அவர் ரசீது எதுவும் தரவில்லை' என்றனர்.இதற்கிடையில், ஜெயகாந்தன் என்ற வாலிபர் தனது நண்பருக்கு அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி 20 ஆயிரம் பெற்றுக் கொண்டார். ஆனால் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டார் எனப் போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக