புதியவை :

Grab the widget  Tech Dreams

04 ஜூன் 2010

500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கைது



வெம்பக்கோட்டை : சிவகாசி அருகே, அரசு நிதி உதவியை வழங்க, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கமலாதேவியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, எதிர்கோட்டையைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதால், அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்காக, வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் மே 5ம் தேதி விண்ணப்பித்தார்.

விண்ணப்பத்தை ஆய்வு செய்த சமூக நல விரிவாக்க அலுவலர் கமலாதேவி(55), "500 ரூபாய் கொடுத்தால் தான் மனுவை பரிந்துரைப்பேன்' எனக் கூறினார். லஞ்சம் வழங்காததால் மனுவை கிடப்பில் போட்டார். மீண்டும் ஜூன் 1ம் தேதி ஒன்றிய அலுவலகத்திலிருந்த கமலாதேவியை சந்தித்த சந்திரசேகரன், "எனக்கு பின்னால் கொடுத்த மனுக்களை பரிந்துரைத்து விட்டீர்கள். லஞ்சமாக 500 ரூபாய் கொடுக்க என்னிடம் வசதியில்லை. என் மனுவை பரிந்துரைத்து உதவ வேண்டும்' என கெஞ்சினார். ஆனால், "பணமில்லாமல் காரியமாகாது' என கமலாதேவி, கறாராக கூறிவிட்டார்.

இதையடுத்து சந்திரசேகரன், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ரசாயன பவுடர் தடவி போலீசார் கொடுத்த ஐந்து 100 ரூபாய் நோட்டுகளை, அலுவலகத்தில் இருந்த கமலாதேவியிடம், நேற்று மதியம் 2.30 மணிக்கு வழங்கினார். பணத்தை வாங்கிய கமலாதேவியை டி.எஸ்.பி., சியமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ஆகியோர் சுற்றி வளைத்து, லஞ்ச பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர்.

அதற்குள் கமலாதேவி, ரூபாய் நோட்டுகளை கிழித்து வாயில் போட்டு விழுங்க முயற்சித்தார். சுதாரித்துக் கொண்ட போலீசார், அவரது கைகளை தட்டி விட்டு கிழிந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். பின்னர் கமலாதேவியை கைது செய்தனர்.

கமலாதேவியை கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்ற போது, தனக்கு நெஞ்சுவலிப்பதாக அவர் தெரிவித்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் வந்த ஆம்புலன்சில் அவரை ஏற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் கமலாதேவியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்க, போலீசார் காரில் அழைத்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக