கோவை:பட்டா மாறுதலுக்கு 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்த இரண்டு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (28); "ஷேர் மார்க்கெட்' தொழில் செய்து வருகிறார். சமீபத்தில், மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில், ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கினார். பட்டாவில் பெயர் மாற்றுவதற்காக, கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
இம்மனுவை விசாரித்து பரிந்துரை செய்ய, மசக்கவுண்டன் செட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முத்துச்சாமிக்கு அனுப்பப்பட்டது. சரவணக்குமாரை அலுவலகத்துக்கு வரவழைத்த முத்துச்சாமி, சம்பந்தப்பட்ட நிலத்தின் பட்டாவில் பெயர் மாற்றித்தர, ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றார்
தன்னிடம் அந்தளவுக்கு பணம் இல்லை என கூறியதற்கு, "கண்டிப்பாக பணம் தர வேண்டும். அதுவும் அலுவலகத்தில் தரக்கூடாது; மாலை 6 மணிக்கு மேல், வீட்டில் தர வேண்டும்' என, வற்புறுத்தினார். இறுதியில், 75 ஆயிரம் ரூபாய் தர ஒப்புக் கொள்ளப்பட்டது.கிராம நிர்வாக அலுவலரின் செயலில் அதிருப்தி அடைந்த சரவணக்குமார், மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., தலைமையில், இன்ஸ்பெக்டர்கள், பணத்துடன் சென்ற சரவணக்குமாரை பின்தொடர்ந்து சென்று, முத்துச்சாமியை கைது செய்தனர்.வீட்டில் நடத்திய சோதனையில், சிறு, சிறு தொகைகளாக கவர்களில் மறைத்து வைத்திருந்த இரண்டு லட்சத்து 11 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர்.
தவிர, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பத்திரங்கள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், பல இடங்களில் வீட்டு மனை வாங்கியதற்கான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.கைதான கிராம நிர்வாக அதிகாரியை நேற்று, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கணேசன், வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில், அவரை வைக்க உத்தரவிட்டார்.கோர்ட்டில் முத்துச்சாமியை ஆஜர்படுத்தியபோது, ஜாமீனில் விடக்கோரி அவர், மனு தாக்கல் செய்தார். இம்மனு, வரும் 18ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக