வீட்டிற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் கேட்ட சி.எம்.டி.ஏ., இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னை அடுத்த மறைமலைநகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி(39). தனியார் நிறுவன உதவி பொது மேலாளர். இவர் கடந்த 1999ம் ஆண்டு மறைமலை நகரில் 856 சதுரஅடி நிலத்தை ஒரு லட்சத்து 560 ரூபாய் கொடுத்து வாங்கினார். வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் கடன்பெற்று அங்கு வீடு கட்டினார்.
கட்டடப்பணி முடிந்ததையடுத்து, வீட்டை தனது பெயரில் பதிவு செய்வதற்காக சி.எம்.டி.ஏ., வில் தடையில்லா சான்றிதழ் பெற முயன்றார். இதற்காக எழும்பூரில் உள்ள சி.எம்.டி.ஏ., அலுவலகம் சென்று ஒதுக்கீட்டு பிரிவு இளநிலை உதவியாளர் ராஜேந்திரன்(50) என்பவரை சந்தித்தார்.
தடையில்லா சான்றிதழ் வழங்க அவர் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். அதை பார்த்தசாரதி கொடுக்க மறுத்த நிலையில், 5,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால்போதும் என ராஜேந்திரன் கூறினார்.இது குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் பார்த்தசாரதி புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி., லட்சுமி, டி.எஸ்.பி., ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ராஜேந்திரனை லஞ்ச பணத்துடன் மடக்கி பிடிக்க திட்டம் வகுத்தனர்.அதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத் தனுப்பிய ரசாயன பொடி தடவிய பணத்துடன் நேற்று மாலை 5 மணிக்கு பார்த்தசாரதி சி.எம்.டி.ஏ., அலுவலகம் சென்றார். முதல் மாடியில் இருந்த ராஜேந்திரனை சந்தித்து லஞ்சபணம் கொடுத்தார்.அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர். இதையடுத்து, வியாசர்பாடியில் உள்ள ராஜேந் திரனின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக