15 பிப்ரவரி 2010
வேலை தருவதாகக் கூறி மோசடி : மாஜி அமைச்சர் வீடு முற்றுகை
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், தனது பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்துக்கு பணியமர்த்த, இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாகக் கூறி பாதிக்கப்பட்ட பெண், அவரது வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் அரசு உதவி பெறும் பெரியசாமி நடுநிலைப்பள்ளி உள்ளது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி, இப்பள்ளி தாளாளராக உள்ளார்.பள்ளியின் நிர்வாக மேலாளர் கலைச்செல்வி.
இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த ஆசிரியர் பணியிடம் ஒன்று காலியாக இருந்தது. அரசு உதவி பெறும் பள்ளி என்பதால் அவர்களே ஆசிரியர் நியமனம் செய்து கொள்ளும் அதிகாரம் உள்ளது.
பவானி அருகே காலிங்கராயன் பாளையத்தைச் சேர்ந்த யுவராஜ் மனைவி கற்பகம், ஆசிரியர் பணி பெற முயற்சித்தார்.
ஆசிரியர் பணியை தனக்கு வழங்கக் கோரி கற்பகம், கலைச்செல்வியிடம் விண்ணப்பித்தார். கலைச்செல்வி, கற்பகத்தை ஈஸ்வரமூர்த்தியிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். ஈஸ்வரமூர்த்தி, ""நான்கு லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை நிச்சயம். முதலில் இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்; வேலை கிடைத்த பிறகு மீதித் தொகையை கொடுத்தால் போதும்,'' என்று பேரம் பேசியுள்ளார்.
அதற்கு சம்மதித்த கற்பகம், வட்டிக்கு கடன் வாங்கி பணத்தைக் கொடுத்தார். ஆனால், நீண்ட நாட்களாக வேலை தராமல் இழுத்தடித்தனர். ஒரு கட்டத்தில் ஈஸ்வரமூர்த்திக்கும், கலைச்செல்விக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அதனால், "பணம் கிடைத்தால் போதும்' என்ற நிலைக்கு வந்த கற்பகம், பணத்தை தரும்படி கலைச்செல்வியிடம் கேட்டார். அதற்கு அவர், ""ஈஸ்வரமூர்த்தியிடம் தானே பணத்தைக் கொடுத்தீங்க, அவரிடமே போய் வாங்கிக் கொள்ளுங்கள்,'' என்றார். பணத்தைக் கேட்டு ஆறு மாதமாக ஈஸ்வரமூர்த்தி வீட்டுக்கு நடையாய் நடந்து கற்பகம் ஓய்ந்து போனார்.
வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் ஒருபுறம் நெருக்கியதால், கணவன், மனைவியான யுவராஜ் - கற்பகம் இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் கற்பகம், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் கற்பகத்தை காப்பாற்றினர். "இப்படியே விட்டால் பணம் வராது' என்று அஞ்சிய கற்பகம், தனது கணவர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பணத்தை தரக்கோரி, ஈரோடு தீயணைப்புத் துறை அலுவலகம் பின்புறம் உள்ள ஈஸ்வரமூர்த்தி வீட்டை நேற்று காலை முற்றுகையிட்டார்.
இது குறித்து கற்பகம் கூறுகையில், ""ஆசிரியர் வேலை தருவதாகக் கூறி என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கினார். வேலை கிடைத்த பிறகு இரண்டு லட்சம் கொடுத்தால் போதும் என்றார். இதேபோல், 10க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து, "எனக்கு வேலை வேண்டாம்; பணம் கொடுங்கள்' என்றேன். ஆனால், தராமல் இழுத்தடிக்கிறார். மூன்று மாதத்துக்கு முன், தலா ஒரு லட்சம் வீதம் இரண்டு "செக்' கொடுத்தார். "செக்'கை வங்கியில் செலுத்திய போது, பணமில்லை என்று திரும்பியது.
நீதிமன்றத்தில் வழக்கு தொடருவதாகக் கூறியபோது, "வேண்டாம், பணத்தை தருகிறேன்' என்றார். ஆனால், ஆறு மாதமாகியும் பணம் வரவில்லை. எங்கள் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னை வருகிறது. பணம் தரவில்லை என்றால், தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றார்.
அ.தி.மு.க., முன்னாள் நகர செயலர் பெரியார் நகர் மனோகரன், காங்கிரசை சேர்ந்த பிரகாஷ் ஜெயின் மற்றும் பலர் வந்திருந்தனர். சூரம்பட்டி எஸ்.ஐ., முருகேசன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து வைத்தார். சில நாட்களில் பணம் வாங்கித் தருவதாக எஸ்.ஐ., முருகேசன் கொடுத்த வாக்குறுதியின் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
thaniyaar uthavi perum pallikalukku kotuththulla athikaraththai murai thavari payan patuththuvathan moolamaaka nalla muraiyil iyangkum nirvaakangkalukkum ketta peyar. ippati patta nirvaakikal thandikka pata kuutiyavarkal.
பதிலளிநீக்கு