5 ஆண்டுகளாக போலீஸ் அதிகாரிகளை ஏமாற்றி சம்பாதித்தேன்; போலி ஐ.பி.எஸ். பெண் அதிகாரி வாக்குமூலம்
சென்னை விருகம்பாகம் ரெட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சாருலதா (25). இவர் நேற்று போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காரில் வண்ணாரப்பேட்டையில் வலம் வந்த போது போலீசாரிடம் சிக்கினார். போலீசார் அவரிடம் விசாரித்த போது தான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி என்று கூறி அடையாள அட்டையை காண்பித்தார். இவரிடம் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர் ஐ.பி.எஸ். படிக்கவில்லை என்பது தெரிய வந்தது.
மேலும் போலி ஆவணங்கள் அவரிடம் இருந்ததால் போலீசார் அவரை கைது செய்து கார் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். கார் டிரைவர் திலீப்குமார் கூட்டாளி பாஸ்கர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் சாருலதா வீட்டில் இருந்து லேப்-டாப், பாங்கி கணக்கு புத்தகம், போலி கிரிடிட் கார்டுகள், நேர்காணல் அழைப்புக்கான கடிதங்கள், ரூ.30 ஆயிரம் பணம், தங்க நெக்லஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் சாருலதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். வாக்கு மூலத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
எனது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம். எனது தந்தை குமார் ஏற்கனவே இறந்து விட்டார். அம்மா பெயர் ராணி. பூ வியாபாரம் செய்து வருகிறார். எனது அக்கா ஜமுனா, தம்பி ஏழுமலை ஆகியோரும் என் னுடன் உள்ளனர். நாங்கள் கஷ்டபடப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.
விளையாட்டுத்துறையில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. கபடி பயிற்சியாளராகவும், சிறிது காலம் இருந்தேன். போலீஸ் வேலைக்கு சேர விரும்பினேன். வேலை கிடைக்கவில்லை. இதனால் நானே போலீஸ் அதிகாரி ஆனால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் மிதந்தேன். இதனால் நானே போலியாக ஐ.பி.எஸ். அதிகாரி போல வலம் வந்தேன். இதற்காக வாடகைக்கு ஒரு காரை எடுத்து சென்னையை சுற்றி வந்தேன்.
போலீஸ் வேலை கிடைக்காமல் ஏங்குபவர்களைப் பார்த்து வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கினேன்.
அவர்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கடிதங்களை போலியாக அச்சிட்டு அனுப்பினேன். இதை வைத்து போலீஸ் அதிகாரிகளிடம் சிபாரிசுக்கும் அழைத்து சென்றுள்ளேன். 2005-ம் ஆண்டில் இருந்து பல பேரிடம் போலீஸ் அதிகாரி என்று சொல்லி ஏமாற்றி வந்தேன். லட்சக் கணக்கில் பணம் சேர்ந்தது. சில போலீசாரும் எனக்கு பழக்கமானார்கள். இது வரை போலீசில் சிக்காமல் இருந்த நான் வசமாக மாட்டிக் கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான சாருலதாவை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சாருலதா கைது குறித்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் கைது செய்யப்பட்ட சாருலதா நிறைய பேரிடம் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக கூறி நடித்து பண மோசடி செய்துள்ளார். இதற்காக மாதவரத்தில் வாடகைக்கு கார் எடுத்து அதில் போலீஸ் என்று எழுதி உலா வந்துள்ளார். ஒவ்வொருவரிடம் ரூ.1லட்சம், ரூ.1 1/2 லட்சம் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். 20-க்கும் மேற்பட்டோரை அவர் ஏமாற்றி இருக்கலாம் என்று தெரிகிறது.
அந்த பட்டியலை எடுத்து வருகிறோம். இவர்களது கூட்டாளிகள் சிலர் தலை மறைவாக உள்ளனர். அவர்களையும் தேடி வருகிறோம். இந்த பெண் மீது இதுவரை வழக்குகள் இல்லை. இப்போது தான் பிடிபட்டுள்ளார். இவருக்கு உதவியாக எந்த போலீஸ் அதிகாரிகள் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக