02 பிப்ரவரி 2010
லஞ்ச புகார்: பாப்பாக்குடி இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு
பாப்பாக்குடி இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெறுவதாக வந்த புகார்களையடுத்து, அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பெ. கண்ணப்பன் உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சுந்தரமகாலிங்கம் (54). ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த நிலத் தரகர் சுப்பிரமணியனுக்கும், பாளையங்கோட்டையைச் சேர்ந்த நிலத் தரகர் மனோகருக்கும் இடையே தொழில்ரீதியாக முன்பகை இருந்தது.
இதனிடையே, சுப்பிரமணியன் கடந்த 1}8}2006 ஆம் தேதி பாப்பாக்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், மனோகர் மீது இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குத் தொடர்ந்தார்.
இதனால், அதிர்ச்சியடைந்த மனோகர், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தன் மீது பொய் வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் ஆஸ்ராகர்க் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மனோகரன் மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி.க்கு, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் ஆஸ்ராகர்க் விசாரணை செய்தார். விசாரணையில், இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், அவ் வழக்கின் புகார்தாரர் சுப்பிரமணியத்திடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பொய் வழக்குபதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டது.
உடனே டி.ஐ.ஜி. பெ. கண்ணப்பன், இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கத்தை நவம்பர் மாதம் 4 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும், சுந்தரமகாலிங்கம் பணியாற்றிய இடங்களில் அவர் மீதான முறைகேடுகள் குறித்து ஆஸ்ராகர்க் விசாரணை மேற்கொண்டார். இதில் சுந்தரமகாலிங்கம் 2003 ஆம் ஆண்டில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது, ஒரு வழக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பணியிடை நீக்கத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கத்துக்கு கட்டாய ஓய்வு அளித்து டி.ஐ.ஜி. கண்ணப்பன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக