புதியவை :

Grab the widget  Tech Dreams

17 பிப்ரவரி 2010

மோசடி நிதி நிறுவனத்தில் லஞ்சம் வாங்கிய இரண்டு இன்ஸ்பெக்டர்கள் சஸ்பெண்ட்


திருப்பூரில் செயல்பட்ட "பாசி பாரெக்ஸ் டிரேடிங் இந்தியா பி., லிமிடெட்' நிதி நிறுவனத்திடம், பல லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இவ்விவகாரத்தில், மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஆறு போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர்.

திருப்பூர் அவினாசி ரோட்டில் "பாசி பாரெக்ஸ் டிரேடிங் இந்தியா பி., லிமிடெட்' என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது. அதன் இயக்குனர்களாக கதிரவன், அவரது மகன் மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர் செயல்பட்டனர்.

இந்நிறுவனம்
, வெளிநாட்டு கரன்சிகள் மீது முதலீடு செய்து, அதிக லாபம் பெற்றுத்தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் பணம் வசூலித்தது. திருப்பூர், கோவை, ஈரோடு, மதுரை, சென்னை, திருச்சி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு, வட்டியுடன் கூடிய தவணை தொகையை முன்தேதியிட்டு, அந்நிறுவனம் காசோலைகளாக வழங்கியது.

இந்நிலையில், வங்கியில் பணம் இல்லாமல் காசோலைகள் திரும்பின. மத்திய குற்றப்பிரிவு போலீசார், அந்நிறுவனம் மீது திடீரென வழக்கு தொடர்ந்து, "சீல்' வைத்தனர். நிறுவனத்தினர், ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். இதுதொடர்பான வழக்கில், "பணம் முதலீடு செய்தவர்கள், தாமாக முன்வந்து திருப்பிக் கேட்டால், அப்பணத்தை பெற்றுத்தர கமிட்டி அமைத்து கண்காணிக்க வேண்டும்' என, திருப்பூர் எஸ்.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, திருப்பூர் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது.

திருப்பூர் எஸ்.பி.,யாக இருந்த சாந்தி கண்காணிப்பில், டி.எஸ்.பி.,யாக இருந்த ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டது. முதலீடு செய்த பொதுமக்களில், சிபாரிசு உள்ளவர்களுக்கு மட்டும், அந்நிதி நிறுவனத்திடம் பணத்தை திரும்ப பெற்றுத்தர இக்கமிட்டி உதவியதாக தெரிகிறது. அதன் மூலம், பல லட்ச ரூபாயை போலீஸ் அதிகாரிகள் சிலர் லஞ்சமாக பெற்றனர். இந்நிலையில், எஸ்.பி., சாந்தி, திருட்டு "விசிடி' தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, எஸ்.பி.,அருண் பொறுப்பேற்ற பின், இந்நிதி நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகள் பற்றி ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. ராஜேந்திரனுக்கு பதிலாக, டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்ட ராஜா தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. போலீஸ் உயரதிகாரிகள் விசாரணையில், "பாசி பாரெக்ஸ் டிரேடிங் இந்தியா பி., லிமிடெட்' நிறுவனத்துக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடந்தையாக செயல்பட்டு, லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக, ஆதாரப்பூர்வமான தகவல் அடங்கிய விவரங்களை எஸ்.பி., அருண், டி.ஐ.ஜி., பாலநாகதேவியிடம் சமர்ப்பித்தார். இது தொடர்பாக டி.ஐ.ஜி.,யும் விசாரணை நடத்தினார்.

அதையடுத்து, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சண்முகய்யா, வால்பாறைக்கு மாற்றப்பட்டார். அதன்பின், திருச்சி மண்டலத்துக்கு உட்பட பகுதிக்கு மாற்றப்பட்டு, தற்போது, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர், இந்நிதி நிறுவனத்தாரிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், பொள்ளாச்சி தாலுகா ஆனைமலையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மோகன்ராஜ், தானாகவே விரும்பி இடமாற்றம் கேட்டு, திருப்பூர் மத்திய குற்றப்பிரிவுக்கு இன்ஸ்பெக்டராக வந்தார். அவருக்கு, இந்நிதி நிறுவன செயல்பாடுகளில் மறைமுக தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோகன்ராஜூம், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவ்விரு இன்ஸ்பெக்டர்களுக்கும் "சஸ்பெண்ட் ஆர்டர்' வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் மற்றும் ஆறு போலீசாரையும் எஸ்.பி., கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளார். அருள்தாஸ், தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கும், ஏட்டு ரங்கசாமி மங்கலம் ஸ்டேஷனுக்கும், ஏட்டு வேலுச்சாமி பெருமாநல்லூருக்கும், விஜயக்குமார், வெள்ளியங்கிரி ஆகிய ஏட்டுகள் அவினாசிக்கும், ஏட்டு சுந்தரபாண்டியன் குமரலிங்கத்துக்கும், ஏட்டு தாகூர் பல்லடம் ஸ்டேஷனுக்கும் மாற்றப்பட்டனர்.

பாசி பாரெக்ஸ் டிரேடிங்' நிறுவனத்துக்கு உடந்தையாக செயல்பட்டு, லஞ்சம் பெற்ற விவகாரத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்நிறுவனத்தில் லஞ்சம் பெற்ற விவகாரத்திலும், மற்றொரு விவகாரத்திலும் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள், சில நபர்கள் விரைவில் சிக்குவர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கை கூட வரலாம், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக