
சென்னை:சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று நடத்திய திடீர் ரெய்டில், பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.சார் பதிவாளர் அலுவலகத்தில் பலர் ஊழலில் ஈடுபடுவதாகவும், பத்திரப் பதிவிற்காக புரோக்கர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் கிடைத்த தகவலையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி., போலோநாத் உத்தரவின் பேரில், ஐ.ஜி.,க்கள் சுனில்குமார், துக்கையாண்டி தலைமையில் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய சார் பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் இறங்கினர். இப்பணியில், மாவட்ட தலைநகரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார் களம் இறக்கப்பட்டனர்.
குறிப்பாக, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட கோயம்புத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தென் மண்டலத்திற்குட்பட்ட திருச்சி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணி நேரமாக சோதனை செய்தனர்.அப்போது, அந்த அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பாக, கோயம்புத்தூர் பல்லடம் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் 48 ஆயிரம் ரூபாயும், திருச்சியை அடுத்த கரூரில் உள்ள அலுவலகத்தில் 82 ஆயிரம் ரூபாயும், மதுரை அருகேயுள்ள ஒத்தக்கடை பகுதியில் உள்ள அலுவலகத்தில் 24 ஆயிரம் ரூபாயும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது போல, சென்னை செம்பியத்தில் உள்ள அலுவலகத்தில் 58 ஆயிரம் ரூபாயும், காஞ்சிபுரம் செய்யூரில் உள்ள அலுவலகத்தில் 17 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின் போது யாரும் கைது செய்யப்படவில்லை.பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில், சார் பதிவாளரை கவனிப்பதற்காக புரோக்கர்கள் கொண்டு வந்த பணமும் இருப்பதால், இதில் தொடர்புடையவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கவுள்ளனர்.
பல்லடம்:பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று திடீரென சோதனை நடத்தினர். சார்பதிவாளர் உட்பட மூன்று பேரிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத 47 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.கோவை மாவட்டம், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை விட, கூடுதலாக வசூல் செய்வதாகவும், புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. நேற்று மதியம் 12 மணிக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சண்முகபிரியா தலைமையிலான குழு, பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
பத்திரப்பதிவு உள்ளிட்ட பணிகளுக்கு சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள், அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின், அலுவலக கதவுகள் பூட்டப்பட்டன. தீவிர சோதனை துவங்கியது.சார்பதிவாளர் பிரகாஷ் அமர்ந்திருந்த டேபிள் இடதுபக்க டிராயரில், கணக்கில் காட்டப்படாத 24 ஆயிரம் ரூபாய், பல்லடத்தைச் சேர்ந்த இடைத்தரகர்களான மயில்சாமியிடம் 10 ஆயிரம் ரூபாய், ராஜேந்திரனிடம் 13 ஆயிரம் ரூபாய் என, கணக்கில் காட்டப்படாத 47 ஆயிரம் ரூபாய் இருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டறிந்து, பறிமுதல் செய்தனர்.சோதனையின் போது, பல்வேறு ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு செய்தனர். "சார்பதிவாளர் உட்பட மூன்று பேர் மீது, துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என, டி.எஸ்.பி., சண்முகபிரியா தெரிவித்தார். மாலை 4 மணிக்கு பின், வழக்கம்போல் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கத் துவங்கியது.
ஆரணி;திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சார்பதிவாளர் அலுவலகத்தில், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர். இதில் கணக்கில் வராத லஞ்ச பணம் 17,500 சிக்கியது. இதையடுத்து இந்த சோதனை மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற்றது. இறுதியில் ரூ.3 லட்ச ரூபாய் பணம் சிக்கியுள்ளனது. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக