புதியவை :

Grab the widget  Tech Dreams

03 அக்டோபர் 2009

லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரிக்கு இடமாற்றம் .

கிருஷ்ணகிரி டி.ஆர்.ஓ.,வாக இருந்தவர் சண்முகசுந்தரம். நான்கு மாதத்துக்கு முன் கிருஷ்ணகிரிக்கு வந்தார். இவர் வந்த பின், மாவட்டத்தில் அரசு நில ஆக்கிரமிப்பு, குவாரிகள் ஏலம், ரேஷன் அரிசி கடத்தல், மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத குற்றங்கள் கட்டுக்குள் வந்தன.

குறிப்பாக, அரசியல்வாதிகள், ஊழல் அதிகாரிகள், கடத்தல் பேர்வழிகளுக்கு வளைந்து கொடுக்காமல், நேர்மையாக செயல்பட்டதால், அதிகாரிகள் முதல் அரசியல் புள்ளிகள் வரை இவரை கண்டால் "கிலி' அடைந்தனர். இந்நிலையில், டி.ஆர்.ஓ., சண்முகசுந்தரம், திடீரென நீலகிரி மாவட்டம் கூடலூர் ஜென்ம பூமிகள் நிலவரி திட்ட அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இவரது இடமாற்றத்தின் பின்னணியில், அரசியல் பின்னணி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஓசூர் அடுத்த பாகலூருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடந்த 18ம் தேதி கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தார். அப்போது, அவர் பாகலூர் அடுத்த உளியாளம் கிராமத்தில் அம்பேத்கர் சிலையை அனுமதியின்றி திறக்க முயற்சித்தனர். அதற்கு டி.ஆர்.ஓ., சண்முகசுந்தரம் மறுத்ததால் சிலையை திறக்காமல் கொடியை மட்டும் ஏற்றிவிட்டுச் சென்று விட்டார். மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஓசூர் அடுத்த பாகலூர் சுற்றுவட்டார கிராமங்களில் ஆறு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு ஆக்கிரமித்தனர்.

குடிசைகளின் மீது இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை வருவாய் துறையினர் அகற்றினர். ஆக்கிரமிப்பையும் அதிரடியாக அகற்றினர். டி.ஆர்.ஓ., நீடித்தால், அரசியல் செய்ய முடியாது என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திருமாவளவனிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர் ஆளும்கட்சி மேலிட தலைவர்களிடம் பேசி டி.ஆர்.ஓ., இடமாற்றம் செய்யப் பட்டதாக கூறப்படுகிறது. இடமாற்றம் குறித்து டி.ஆர்.ஓ., சண்முகசுந்தரத்திடம் கேட்ட போது, அவர் கூறியதாவது: விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலர் கோவேந்தன் பலமுறை என்னிடம் தொடர்பு கொண்டு, ஏழைகள் குடிசை போட ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் எனக் கூறி என்னை தனியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

அதற்கு நான் மறுத்து விட்டேன். மேலும், சிலை திறப்பு விவகாரத்திலும், நான் கறாராக நடந்து கொண்டேன். இதனால், அவருடைய கட்சியினருக்கு என் மீது அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற இடத்தில் வருவாய்துறையினர் குடிசைக்குள் புகுந்து நகை, பணத்தை எடுத்து சென்று விட்டதாகவும், ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற கர்ப்பிணி பெண்களை எட்டி உதைத்ததாகவும் கூறி என்னிடம் கோவேந்தன் வாக்குவாதம் செய்தார்.

வருவாய் துறையை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்றார். அதற்கு, நான், உங்களால் முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்றேன். இந்நிலையில், எனக்கு திடீரென டிரான்ஸ்பர் உத்தரவு வருகிறது. தவறு செய்யாத என்னை திட்டமிட்டு பழிவாங்கி உள்ளனர். உண்மை நிலையை விளக்கி அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்ப உள்ளேன். இவ்வாறு டி.ஆர்.ஓ., கூறினார்.

2 கருத்துகள்:

  1. அரசியல்வாதிகளின் - சுய நலப் போக்கு - அதிகாரிகளை பழிவாங்க, அதுவும் நேர்மையான, ஊழலுக்கு துணை போகாத அதிகாரிகளை பழிவாங்க ஆரம்பித்தால் - இந்த நாட்டை காப்பாற்ற எவ்வளவு மகாத்மாக்கள் வந்தாலும் இயலாது. மக்கள் எல்லோரும் இதை உணர்ந்து, ஜாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு - நோட்டுக்கு வோட்டுப் போடும் பழக்கத்தை மாற்றி, நேர்மையானவர்களையும், நல்லவர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. I am seeing this blog for first time...Very nice and useful. What are the steps we are going to take against corruption ,above spreading news...?

    We have to do something boss..!

    பதிலளிநீக்கு