புதியவை :

Grab the widget  Tech Dreams

20 அக்டோபர் 2009

மகளிர் சங்க தலைவி சிவகாமி கைது : சுனாமி நிவாரண நிதி ரூ. 1 1/2 கோடி மோசடி



சென்னை எண்ணூரில் உள்ள நெட்டுக்குப்பத்தைச் சேர்ந்த காஞ்சனா என்ற பெண் சுமார் 500 பெண்களுடன் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அதில் நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மகளிர் மீனவர் சங்க தலைவி சிவகாமி என்பவர் ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனம் வழங்கிய ரூ. 1 கோடி பணத்தையும் அதற்கு வட்டி என்று சுமார் ரூ. 35 லட்சம் அளவிற்கு மக்கள் பணத்தை வசூலித்து மோசடி செய்து தலைமறைவாகி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
புகாரின் பேரில் கமிஷனர் ஜாங்கிட் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையிலான போலீசார் தீவிரவிசாரணை நடத்தினர். இதில் வெளியூரில் பதுங்கி இருந்த சிவகாமியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் ரூ. 1 கோடியே 35 லட்சம் சுனாமி நிவாரண நிதியை அவர் வாரிச்சுருட்டி உள்ளது தெரிய வந்தது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆஸ்சார்ம் என்ற தொண்டு நிறுவனம் கடந்த 2005-ம் ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக ரூ. 1 கோடி நிதி உதவியை கலைச்செல்வி கருணாலயா சமூக சேவை நிறுவனத்திடம் வழங்கியது.
இதை தெரிந்து கொண்ட நெட்டுக்குப்பம் மகளிர் மீனவர் கூட்டுறவு சங்க தலைவி சிவகாமி தங்கள் பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதற்காக 10 பேர் கொண்ட 10 குழுக்களை அமைத்தார். குழுவில் உள்ளவர்களுக்கு தனி தனி வங்கிகணக்குகள் தொடங்கினார். நிவாரண பணத்தை நேரடியாக வங்கிகளின் மூலம்தான் பெற முடியும் என்று கூறினார்.
ஆனால் தொண்டு நிறுவனத்திடம் இருந்து ஒரு குழுவுக்கு ரூ. 50 ஆயிரம் வீதம் பெற்று வங்கிகணக்கில் செலுத்தினார். ஒருவருக்கு தலா ரூ. 5 ஆயிரம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார். ஒவ்வொரு குழுவும் மாதம் ரூ. 2000 வீதம் 33 மாதங்கள் செலுத்தினால் நிவாரண பணம் இரட்டிப்பாகும் என்று ஆசைவார்த்தை கூறினார்.
குழுவில் இடம் பெற்ற பெண்களின் வங்கிகணக்கு புத்தகம், காசோலை போன்ற வற்றை சிவகாமியே வைத்துக் கொண்டார். குழுவில் உள்ளவர்களும் பணம் இரட்டிப்பாகும் என்று கடந்தசில ஆண்டுகளாக வங்கிகளில் பணம் கட்டிக்கொண்டிருந்தனர்.
இதற்கிடையே சிவகாமி, தனது தம்பி ராம்குமாரை ஒருங்கிணைப்பாளராகவும், தோழி வள்ளி என்பவரை செயலாளராகவும் கொண்டு கலங்கரை விளக்கம் என்ற சமூகசேவை அமைப்பை தொடங்கினார். மீனவ பெண்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எல்லாம் கலங்கரை விளக்கம் அமைப்பின் வங்கி கணக்கிற்கு மாற்றினார்.

இதற்காக அவரே மற்ற பெண்கள் போல போலி கையெழுத்து போட்டு காசோலைகளை பயன்படுத்தி உள்ளார். லட்சக்கணக்கான மதிப்புள்ள பணத்தை சொந்த உபயோகத்திற்குபயன் படுத்தி கொண்டார்.
இந்த நிலையில் காஞ்சனா உள்ளிட்ட பெண்கள் வங்கி கணக்கை சரிபார்த்த போது கணக்கில் பணம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஒரு சில மாதத்தில் பணம் வந்து விடும் என்று கூறி சமாதானப்படுத்திய சிவகாமி தலைமறை வானதை தொடர்ந்து போலீசில் சிக்கி உள்ளார்.
சிவகாமியின் மோசடிக்கு உடந்தையாக இருந்த வள்ளி, ராம்குமார், புனிதா ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர். சுமார் ரூ. 1 1/2 கோடி அளவுக்கு சுனாமி நிவாரண நிதி மோசடி செய்திருக்கலாம் என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினர்.
சிவகாமியை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைத்தனர்.


1 கருத்து:

  1. பணம் யாரைத்தான் விட்டது...

    நல்ல சமூக முற்போக்கு சிந்தனை.. வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு