புதியவை :

Grab the widget  Tech Dreams

08 அக்டோபர் 2009

2,000 ரூபாய் லஞ்சம் ,லால்குடி சர்வேயர் சீனிவாசன் கைது



நிலம் அளந்து கொடுக்க 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய லால்குடி சர்வேயரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராசு(63). விவசாயியான இவருக்கு சொந்தமான 5.96 ஏக்கர் நிலம், லால்குடியை அடுத்த நெய்குளத்தில் உள்ளது.


இந்த நிலத்தை தனது மகன்கள் அன்பழகன், ராஜேஷ் இருவருக்கும் பிரித்துக் கொடுக்க எண்ணிய ராசு, கடந்த ஜூலை மாதம் லால்குடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த மனு சர்வேயர் சீனிவாசனிடம்(53) வரவே, நிலத்தை அளப்பதற்கு உரிய கட்டணம் உள்ளிட்டவைகளை செலுத்தும்படி கூறியுள்ளார். இதை முடித்த ராசு, கடந்த மாதம் சர்வேயர் சீனிவாசனை சந்தித்துள்ளார். பத்து நாள் கழித்து வருமாறு சர்வேயர் கூறவே, நேற்று முன்தினம் தாலுகா அலுவலகம் சென்ற ராசு, சர்வேயர் சீனிவாசனை சந்தித்துள்ளார்.


லஞ்சமாக 2,000 ரூபாய் கொடுத்தால் தான் நிலத்தை அளந்து கொடுக்க முடியுமென சீனிவாசன் கூறியுள்ளார். பணம் கொடுக்க விருப்பமில்லாத ராசு, சம்பவம் குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்சம் கொடுப்பதற்காக நேற்று காலை லால்குடி தாலுகா அலுவலகத்துக்கு ராசு சென்ற போது, சர்வேயர் அங்கு இல்லை. இதையடுத்து அவருடன் தொடர்பு கொண்ட போது, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஸ்டார் தியேட்டர் அருகில் வருமாறு கூறினார்.


நேற்று மாலை அங்கு சென்ற ராசு, லஞ்சப் பணம் 2,000 ரூபாயை சர்வேயர் சீனிவாசனிடம் கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையிலான போலீசார், சர்வேயர் சீனிவாசனை கைது செய்து லஞ்சப் பணத்தை கைப்பற்றினர். திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சீனிவாசன், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக