புதியவை :

Grab the widget  Tech Dreams

10 அக்டோபர் 2009

லஞ்சத்திற்கு தடை : சான்றிதழ் பெற இனி வி.ஏ.ஓ.விடம் அலைய வேண்டாம்

இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவை பெற இனி, கிராம நிர்வாக அலுவலரிடம் (வி.ஏ.ஓ.) செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

பொதுச் சேவை மையம் மூலம் வருவாய்த்துறை தொடர்பான அனைத்துச் சான்றிதழ்களையும் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, கணவனால் கைவிடப்பட்டோர் என்பதற்கான சான்று ஆகியவை அரசின் நலத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கு அத்தியாவசியமாக இருக்கின்றன.

வி.ஏ.ஓ.,விடம் அலைச்சல்... இத்தகைய சான்றிதழ்களைப் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் (வி.ஏ.ஓ.,) மக்கள் செல்கின்றனர். அப்படிச் செல்லும்போது, பெரும்பாலான கிராமங்கள், சிற்றூர்களில் வி.ஏ.ஓ.,க்கள் இருப்பதில்லை என்று மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

வி.ஏ.ஓ.க்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தாலும் ஒரு சில அலுவலர்கள் ஒவ்வொரு சான்றிதழுக்கும் குறிப்பிட்ட அளவு பணத்தை லஞ்சமாகக் கேட்கின்றனர். அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு, சான்றிதழ்களைப் பெறும் நிலைமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

கம்ப்யூட்டர் மயமாக்கும் நடவடிக்கை... அரசுத் துறைகளை கம்ப்யூட்டர் மயமாக்கும் நடவடிக்கை இப்போது தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அரசுத்துறையும் கம்ப்யூட்டருக்கு மாறி வருகின்றன.

இந்த நிலையில், வருவாய்த் துறையின் செயல்பாடுகளையும் கம்ப்யூட்டருக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இதுகுறித்து, வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியதாவது:

""நிலம் தொடர்பான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்கு வி.ஏ.ஓ., வருவாய்த் துறை ஆய்வாளர் அலுவலகம் என ஒவ்வொரு இடமாக மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை விரைவில் மாற்றி அமைக்கப்படும். ஒவ்வொரு கிராமங்களிலும் பொது சேவை மையம் என்ற அமைப்பு தொடங்கப்படும்.

இந்த மையங்களில் கம்ப்யூட்டரை நன்கு கையாளத் தெரிந்த, வேலைவாய்ப்பற்ற, படித்த இளைஞர்கள் பணியில் அமர்த்தப்படுவர். விவசாயிகள், பொது மக்கள் தங்களுக்கு எந்த வகையான சான்றுகள் தேவை என்பதை பொது சேவை மையத்தில் உள்ளவர்களிடம் தெரிவிக்கலாம். அது, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபருக்கு பதிவெண் வழங்கப்படும். அந்த எண்தான் அனைத்துக்கும் அடிப்படை.

பின்னர், சான்றுக்கு உரிய விண்ணப்பம் கம்ப்யூட்டரிலேயே நிரப்பப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள வி.ஏ.ஓ.வுக்கு அனுப்பி வைக்கப்படும். ஓரிரு வாரங்களில் அந்தச் சான்றை பொது சேவை மையம் மூலமாகவே மக்கள் பெற்றுக் கொள்ளலாம்'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடையாளம் எப்படி காண்பது? சான்று கேட்டு விண்ணப்பித்துள்ள நபர் உண்மையான முகவரி கொண்டவர்தானா? என்ற சந்தேகம் எழும். அந்த சந்தேகம் தேசிய அடையாள அட்டை மூலம் தீர்க்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

""தேசிய அடையாள அட்டைக்கான எண் மூலம், சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து விவரங்களையும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டு வருகிறது. அந்தப் பணி முழுமை பெற்றால், சான்றிதழ்களை பொது சேவை மையம் மூலம் வழங்கும் திட்டம் முழுஅளவில் வெற்றி பெறும்'' என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக