புதியவை :

Grab the widget  Tech Dreams

10 அக்டோபர் 2009

ரூ.50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட பழந்தண்டலம் வி.ஏ.ஓ., லட்சுமிநரசிம்மன் கைது
சென்னை: சிட்டா, அடங்கல் நகல் வழங்க, ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு, முதல்தவணையாக 10 ஆயிரம் ரூபாய் வாங்கிய வி.ஏ.ஓ.,வை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.


தேனாம்பேட்டை, தாசன் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(35). இவரது நண்பர் செல்வராஜ். இருவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். பழந்தண்டலத்தில் உள்ள வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் பிளாட் போட முடிவு செய்தனர். இதற்காக, கடந்த 8ம் தேதி பழந்தண்டலம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்குச் சென்று, வி.ஏ.ஓ., லட்சுமிநரசிம்மன்(52) என்பவரிடம் சிட்டா, அடங்கல் நகல்களை கேட்டனர்.


இதற்கு, லட்சுமிநரசிம்மன் சிட்டா, அடங்கல் நகல்களைத் தர, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி,"எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை,' என்றனர். பின்னர்,"மொத்தப் பணத்தையும் உடனே தர வேண்டாம். முதல் தவணையாக சனிக்கிழமை(நேற்று) 10 ஆயிரம் ரூபாய் தாருங்கள்,' என்று லட்சுமிநரசிம்மன் கூறினார். பழனிச்சாமி, இது குறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் செய்தார்.


லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி., துக்கையாண்டி, எஸ்.பி., புவனேஸ்வரி ஆகியோர் உத்தரவின்படி, டி.எஸ்.பி., பொன்னுசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, அசோகன், இம்மானுவேல், ஞானசேகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வி.ஏ.ஓ., லட்சுமிநரசிம்மனை கையும், களவுமாக பிடிக்கத் திட்டமிட்டனர். போலீசார் கூறியபடி, வி.ஏ.ஓ., லட்சுமிநரசிம்மனை தொடர்பு கொண்ட பழனிச்சாமி, "பணத்தை எங்கே வந்து தரவேண்டும்,' என்று கேட்டுள்ளார்.


இதற்கு, பல்லாவரம் பஸ் ஸ்டாண்ட் அருகே வந்து பெற்றுக் கொள்வதாக லட்சுமிநரசிம்மன் கூறினார். போலீசார் ரசாயனம் பூசப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் 10 ஆயிரத்தை பழனிச்சாமியிடம் கொடுத்தனர். அதை, நேற்று மாலை லட்சுமிநரசிம்மன் வாங்கிய போது, மறைந்திருந்த போலீசார் கையும், களவுமாக அவரை கைது செய்தனர். குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டையில் உள்ள வி.ஏ.ஓ., வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்ட லட்சுமிநரசிம்மன், செங்கல்பட்டு முதன்மை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக