புதியவை :

Grab the widget  Tech Dreams

02 அக்டோபர் 2009

1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது!.


ஈரோடு மாவட்டத்திலுள்ள மாதம் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேல், ரூபாய் 1000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக இக்கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இச்சம்பவம் பற்றி கூறப்படுவதாவது:

மாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி. இவரின் நிலம் தொடர்பான வழக்கு சத்தியமங்கலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக நிலத்தின் சிட்டா, அடங்கல் மற்றும் வரைபடம் ஆகியவற்றைக் கேட்டு அவரின் மகன் பிரபு, மாதம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலை அணுகியுள்ளார்.

நிலத்துக்கான சிட்டா, அடங்கல், வரைபடம் வழங்க ரூ.1,000 லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று பிரபுவிடம் கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேல் கேட்டுள்ளார். "என்னுடைய சொத்தின் விவரங்களைப் பெற நான் எதுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்?" என்று ஆவேசமான பிரபு, இதுபற்றி ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயன பொடி தடவிய 1,000 ரூபாய் நோட்டுகளுடன் வெற்றிவேல் கூறியபடி,நேற்று மாலை புஞ்சை புளியம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு வந்த பிரபு, கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலிடம் ரூ.1,000 நோட்டுகளைக் கொடுத்தார். அப்போது அங்கு சாதாரண உடையில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், கிராம நிர்வாக அதிகாரி வெற்றிவேலைக் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவருடைய வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். கைதான கிராம நிர்வாக அதிகாரி ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்காமல் தன் உரிமையை நிலைநாட்டிய பிரபுவை அக்கிராம மக்கள் ஆச்சரியத்துடன் புகழ்ந்து பாராட்டுகின்றனர்.

4 கருத்துகள்: