எழுமலை : இடமாறுதலுக்காக ஆசிரியையிடம் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, மதுரை மாவட்டம் சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஓணாப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் சங்கீதா. இந்த பள்ளியில் பணிபுரிந்து 2 ஆண்டுகள் முடிந்ததால், பொது மாறுதலில் வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கடந்த ஏப்ரலில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
இந்நிலையில் வீராளம்பட்டியை சேர்ந்த ஆசிரியர் கபிலன், ஓணாப்பட்டிக்கு மாற்றக் கோரினார். இந்த இரு ஆசிரியர்களும் மனமொத்த மாறுதலுக்காக மாவட்டத் தொடக்க கல்வி அலுவலரை அணுகினர். அவர் சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலரை அணுகுமாறு கூறினார்.
சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகானந்தம், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து, மாறுதல் செய்யுமாறு சங்கீதா கேட்டார். இதற்கு முத்துகிருஷ்ணன் 2000 ரூபாய் கொடுத்தால் மனமொத்த மாறுதல் செய்கிறோம் என்று சங்கீதாவிடம் கூறினார்.
இதையடுத்து சங்கீதா மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி., கலாவதி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் கூறியபடி ரசாயனம் தடவிய 2000 ரூபாயை எடுத்துக் கொண்டுசங்கீதா சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு சென்றார். ஆனால் முத்துகிருஷ்ணன் இல்லை. சங்கீதா முத்துகிருஷ்ணனிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, ""அங்கு முருகானந்தம் இருப்பார். அவரிடம் பணத்தை கொடுத்து விடுங்கள்'' எனக் கூறியுள்ளார். முருகானந்தத்திடம் சங்கீதா பணத்தை கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கையும் களவுமாக முருகானந்தத்தை கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக