புதியவை :

Grab the widget  Tech Dreams

12 ஜூலை 2010

ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசன் கைது.


"உத்தமர் காந்தி விருது' வாங்கிய டி.எஸ்.பி., சீனிவாசன் !
50 லட்சம் சொத்து ஆவணம் பறிமுதல்


ராசிபுரம் :கோழிப் பண்ணை விவகாரம் தொடர்பாக போலீசில் பதியப்பட்ட வழக்கின் மீது மேல்நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நாமக்கல் டி.எஸ்.பி., மற்றும் புரோக்கர் ஒருவரை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து இரண்டு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்(66). அவருக்கு நாமக்கல் மாவட்டம் கங்கநாயக்கன்பட்டி, என்.புதுப்பட்டி ஆகிய இரு இடங்களில் கோழிப் பண்ணைகள் உள்ளன.

கோழிப் பண்ணை அமைக்க நாமக்கலைச் சேர்ந்த சேக் நவீத் என்பவர் வங்கிக் கடன் பெற்றுத் தருவது போன்ற உதவிகளைச் செய்துள்ளார். அதற்காக 5 சதவீத பங்குதாரராக சேக் நவீத், ஆரோக்கியராஜிடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.அதில் ஏற்பட்ட குளறுபடியால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இச்சூழலில் கடந்த 6ம் தேதி இரவு, சேக் நவீத் சில அடியாட்களுடன் சேர்ந்து, ஆரோக்கியராஜ் கோழிப் பண்ணையில் உள்ள 85 ஆயிரம் கோழிகளை லாரி மூலம் கடத்தி விற்பனை செய்ய முயன்றார்.

இது பற்றி நாமக்கல் டி.எஸ்.பி., சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. கோழிகளை கடத்திய லாரியை மோகனூர் போலீசார் பிடித்தனர். சேக் நவீத், சண்முகம், ரவி ஆகிய மூவர் மீதும் டி.எஸ்.பி., சீனிவாசன் உத்தரவின்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். "பதியப்பட்ட வழக்கு சம்பந்தமாக கைது நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது; புகாரின் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது. புகார்தாரரை சமரசம் பேச அழைக்க வேண்டும்' என்று சேக் நவீத் தரப்பினர், டி.எஸ்.பி., சீனிவாசனிடம் பேசினர்.அதற்கு, "ஒரு லட்சம் ரூபாய் வேண்டும்' என சீனிவாசன் கேட்டார்.

அந்தத் தொகையை தன் தனி உதவியாளர் (புரோக்கர்) சுப்ரமணி மூலம் கடந்த 7ம் தேதி காலையில் பெற்றார். பின், மீண்டும் 50 ஆயிரம் ரூபாய் கேட்டதின் பேரில் சேக் நவீத் தரப்பினர், கடந்த 7ம் தேதி இரவு அத்தொகையை டி.எஸ்.பி., சீனிவாசனிடம் வழங்கினர்.

வழக்கு தொடர்பாக மூவரையும் கைது செய்யாமல் இருக்க வேண்டுமெனில் மேலும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்' என, டி.எஸ்.பி., சீனிவாசன் கேட்டார்.மேலும், லஞ்சம் கொடுக்க விரும்பாத சேக் நவீத் தரப்பைச் சேர்ந்த சண்முகம், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பெரியசாமியை சந்தித்துபுகார் தெரிவித்தார்.

போலீசார் கொடுத்த ஆலோசனைபடி, லஞ்சமாகக் கேட்ட தொகையை நேற்று மதியம் சண்முகம், டி.எஸ்.பி., சீனிவாசனிடம் கொடுக்க நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு வந்தார்.அவரை வீட்டுக்கு வரும்படி டி.எஸ்.பி., சீனிவாசன் தெரிவித்தார். அதன் பேரில் ராசிபுரம் சேர்மன் சுப்ரமணி நகரில் உள்ள சீனிவாசன் வீட்டுக்கு பணத்துடன் சண்முகம் சென்றார்.

பின், அங்கிருந்த டி.எஸ்.பி., தனி உதவியாளர் சுப்ரமணி, சண்முகத்திடம்இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வாங்கி, டி.எஸ்.பி., சீனிவாசன் அறையில் உள்ள மேஜை மீது வைத்தார்.அப்போது, வீட்டைச் சுற்றி மாறுவேடத்தில் இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., பெரியசாமி, இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, நடராஜன், ரங்கராஜன், முருகேசன் ஆகியோர் அதிரடியாக வீட்டினுள் நுழைந்து, டி.எஸ்.பி., சீனிவாசன்(58), அவரது உதவியாளர் சுப்ரமணியத்தை சுற்றி வளைத்தனர். பின்,

லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர்.மேலும், டி.எஸ்.பி., சீனிவாசன் கொடுத்த தகவலின் பேரில் அங்கிருந்த சுமோ காரினுள் இருந்து 60 ஆயிரத்து 500 ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. அவரது வீட்டில் இருந்து இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 500 ரூபாய், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி., சீனிவாசன், உதவியாளர் சுப்ரமணியம் ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சீனிவாசன், சேந்தமங்கலத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்தபோது, "உத்தமர் காந்தி விருது' பெற்றுள்ளார். அவர் ஓய்வு பெற ஒன்பது மாதமே உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், 2006 டிச., 5ல் ப.வேலூர் டி.எஸ்.பி.,யாக இருந்த தினகரன், நிலப்பிரச்னை தொடர்பாக 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கியது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது டி.எஸ்.பி., சீனிவாசன் இரண்டாவதாக லஞ்ச வழக்கில் கைதாகியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக