புதியவை :

Grab the widget  Tech Dreams

31 ஜூலை 2010

ரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எம்.எல்.ஏ. சிக்கினார்


இந்தூர், ஆக.1:
பொறியியல் கல்லூரி தொடங்க உதவி செய்வதாக கூறி மத்திய பிரதேச பா.ஜ. எம்.எல்.ஏ.

ரூ 10ஆயிரம் லஞ்சம் வாங்குவது கேமராவில் ரகசியமாக படம் பிடித்து வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், பா.ஜ.வுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ. ஆட்சி செய்கிறது. இங்கு, சிவபுரி மாவட்டத்தில் உள்ள கரிரா சட்டப்பேரவை தொகுதி பா.ஜ. எம்.எல்.ஏ.வாக ரமேஷ் கத்திக் இருக்கிறார். சொராபுதீன் போலி என்கவுன்டர் பிரச்னையால் குஜராத்தில் பா.ஜ.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் கத்திக் மூலமாக புதிய தர்மசங்கடம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் அஜீத். கரிரா தொகுதியில் பொறியியல் கல்லூரி தொடங்குவதற்காக 6 மாதங்களுக்கு மேல் அலைந்து பார்த்தார். எங்கும் காரியம் நடக்காததால், கடைசியாக ரமேஷ் கத்திக்கின் உதவியை நாடினார். கல்லூரி தொடங்க அனுமதி கொடுக்கும்படி அரசுக்கு பரிந்துரை கடிதம் வழங்குவது, கல்லூரி கட்ட அரசு நிலத்தை வாங்கி கொடுப்பது உள்ளிட்ட உதவிகளை செய்வதற்காக அஜீத்திடம் கத்திக்
ரூ 5லட்சம் லஞ்சம் கேட்டார். அதற்கு ஒப்புக் கொண்ட அஜீத், முதல் கட்டமாக
ரூ 10ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அதை கத்திக் வாங்குவதையும், அந்த நேரத்தில் அவருடன் பேசிய விவரங்களையும் அஜீத் தந்திரமாக வீடியோ கேமராவில் படம் பிடித்துள்ளார். கத்திக் & அஜீத் இடையே நடந்த உரையாடல் விவரம் வருமாறு:

கத்திக்:
எத்தனை பேர் சேர்ந்து கல்லூரி தொடங்க உள்ளீர்கள்?
அஜீத் :
8 பேர் சார்...
கத்திக் :
சரி, கல்லூரிக்கு தேவையான அரசு நிலத்தை வாங்கி கொடுப்பது மற்றும் உங்களுக்கு அவவப்போது தேவைப்படும் உதவிகளை செய்து தருகிறேன்.
அஜீத் :
ஓகே சார்... பரிந்துரை கடிதத்தை எப்போது தருகிறீர்கள்?
கத்திக் :
அதற்கு ஏற்பாடு செய்கிறேன். தேவைப்படும் போது எல்லாம் பணம் கொடுங்கள். மற்ற காரியங்களை நான் செய்து தருகிறேன். உங்களுக்கு எங்கு நிலம் வேண்டும்?
அஜீத் :
நெடுஞ்சாலை நான்கு வழிப்பாதைக்கு அருகே அல்லது அரை கி.மீ. சுற்று வட்டாரத்துக்குள் வேண்டும்.
கத்திக் :
நீங்கள் வாங்கும் இடத்துக்கு அருகே அரசு நிலம் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நிலத்தை உங்களுக்கு ஒதுக்கித் தர ஏற்பாடு செய்கிறேன்.
இவ்வாறு உரையாடல் நடக்கிறது.

காட்சி வெளியானதில் இருந்து, பத்திரிகையாளர்களிடம் சிக்காமல் கத்திக் தப்பி வருகிறார். இது பற்றி மத்திய பிரதேச சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சர் நரோதம் மிஸ்ரா அளித்த பேட்டியில், “பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட சி.டி.யை கேட்டுள்ளோம். அது உண்மையானது தானா என்று ஆராய்ந்து முடிவு செய்த பிறகு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே 13 அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி லோக் ஆயுக்தாவின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதுபோன்ற நிலையில் பா.ஜ. எம்.எல்.ஏ. ஒருவர் லஞ்சம் வாங்கி சிக்கி இருப்பது பா.ஜ.வுக்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ரகசிய வீடியோ வெளியானது



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக