புதியவை :

Grab the widget  Tech Dreams

06 ஜூலை 2010

லஞ்சம் : கோவை கலால் துணை கமிஷனர் கைது


கோவை : ஓட்டல்களில், "பார்' லைசென்சை புதுப்பிப்பதற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, கோவை கலால் துணை கமிஷனர் மூர்த்தி கைது செய்யப்பட்டார்.


கோவை மாவட்ட கலால் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் மூர்த்தி. இவர் இதற்கு முன், இதே மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர், மாவட்ட வருவாய் அலுவலர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளிலும் இருந்துள்ளார்.இந்த பணிகளில் அவர் இருந்தபோதே, அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன.இரு மாதங்களுக்கு முன்னர் தான் அவரை மாற்றியது தமிழக அரசு. அப்போதும் கூட, அதிகாரமும், பணப்புழக்கமும் அதிகமுள்ள பதவியான கோவை கலால் துணை கமிஷனர் பணிக்கு அவர் மாற்றப்பட்டார்.

ஓட்டல்களுடன் சேர்ந்து இயங்கி வரும் எப்.எல்.3 எனப்படும் அன்னிய மதுபானக் கூடங்கள் (பார்) வைப்பதற்கான உரிமம் வழங்குவது, புதுப்பிப்பது, ஆய்வு செய்வது என பல்வேறு அதிகாரங்களையும் கொண்டது இந்த பதவி. புதிய பொறுப்புக்கு வந்த பின்னும், மூர்த்தியின் போக்கில் மாற்றமில்லை.


கோவை மாவட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தில் இருந்து சாதாரண ஓட்டல்கள் வரை, 120க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் "பார்'கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இதே தொகையைச் செலுத்தி, உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.விடுபட்ட ஒரு சில "பார்'களின் உரிமங்களைப் புதுப்பிக்க, சம்பந்தப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களிடம், உரிமம் புதுப்பிக்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென்று மூர்த்தி வற்புறுத்தியுள்ளார். அதைத் தவிர்த்து, ஒவ்வொரு "பார்' உரிமையாளரும், மாதந்தோறும் 5,000 ரூபாய் மாமூல் தர வேண்டுமென்று அவர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதேபோல, பொள்ளாச்சியைச் சேர்ந்த "பார்' உரிமையாளர் ஒருவரிடமும் அவர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது பற்றி, கோவை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் வந்துள்ளது.


லஞ்ச ஒழிப்புத் துறையினர், சம்பந்தப்பட்ட "பார்' உரிமையாளரிடம் ரசாயன பவுடர் தடவிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து அனுப்பினர். கோவை கலெக்டர் அலுவலகத்திலுள்ள மூர்த்தியின் அலுவலகத்துக்கு நேற்று மாலை சென்ற அந்த "பார்' உரிமையாளர், லஞ்சப் பணத்தை மூர்த்தியிடம் கொடுத்தார்.அப்போது, அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சண்முகப்பிரியா, இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர் ஆகியோர், அறைக்குள் நுழைந்து லஞ்சப் பணத்துடன் இருந்த மூர்த்தியைக் கைது செய்தனர்; நேற்றிரவு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.1 கருத்து:

  1. சரியான தண்டனை கிடைக்கும்படி செய்யவேண்டும் இல்லையெனில் எந்த பயனும் இல்லை

    பதிலளிநீக்கு