ஒவ்வொரு துறை ஊழியர்களின் சம்பளத்திற்காக அரசு பல கோடி ரூபாய் பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்நிலையில், வி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., மற்றும் தலைமை இன்ஜினியர் என பலரும் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறப்பு சான்றிதழ் பெற லஞ்சம், மின் இணைப்பு பெற லஞ்சம், குடிநீர் இணைப்பு பெற லஞ்சம், பணத்தை மீட்டுத் தர லஞ்சம் என அனைத்து துறைகளும் தற்போது லஞ்சத்தில் திளைத்து வருகின்றன. சாதாரண வருமான சான்றிதழ் வாங்குவதற்காக வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்றால், அவருக்கு கீழ் வேலை பார்ப்பவருக்கு கணிசமான தொகை கொடுத்தால் தான் சான்றிதழ் கிடைக்கும். இதே போன்று அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடி வருகிறது.மின்சார வாரியம், குடிநீர் வாரியம், மாநகராட்சி, வருவாய் துறை, போலீஸ் என அனைத்து துறைகளிலும் லஞ்சம் இல்லையேல் ஒரு காரியமும் செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளதை நாம் அறிய முடிகிறது. ஆனால் அரசோ, ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் என்ற பெயரில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் பணத்தை வாரி வழங்கி வருகிறது. குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வையும் வழங்கி வருகிறது. இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
மின்சார வாரியத்தில் மட்டும் ஊதிய உயர்வு காரணமாக, வாரியத்திற்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வரை கூடுதல் இழப்பு ஏற்படுகிறது.ஊதிய உயர்வுக்கு பின், மின்வாரியம் சார்பில் தலைமை பொறியாளருக்கு மாதம் சாராசரியாக 70 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இருந்தாலும் அவர், அந்த சம்பளம் போதாமல் ஊழியர் இடமாற்றம், மின் இணைப்பு உள்ளிட்டவற்றிற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டே வருகிறார் என்பது வேதனையளிக்கும் விஷயமாக உள்ளது. சமீபத்தில், சென்னையில் லஞ்சம் பெற்றதாக தலைமை இன்ஜினியர் ஒருவர், லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது எடுத்துக்காட்டு. இவர்கள் தவிர வாரத்திற்கு இரண்டு வி.ஏ.ஓ.,க்கள், ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்படுகின்றனர்.
மற்ற துறைகளில் லஞ்சம் பெற்றால் தடுக்க வேண்டிய போலீஸ் துறையில் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் லஞ்சம் பெறப்படுகிறது. சமீபத்தில் டி.எஸ்.பி., ஒருவர் மற்றும் எஸ்.ஐ., - தலைமைக்காவலர் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று இன்னும் பல்வேறு பணிகளுக்காக பொதுமக்கள், குறிப்பிட்ட துறைகளுக்கு லஞ்சப் பணத்துடன் போனால் மட்டுமே காரியம் நடக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் அரசு சம்பளத்தை வாரி இறைத்த போதிலும், லஞ்சம் கரை புரள்வதும், மாதம்தோறும் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினால் மட்டுமே, "குடும்பம் நடத்த முடியும் என்ற அவல நிலை' அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதும் மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக