புதுடில்லி : "நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கு, அவர்கள் பணியாற்றும் துறைகளிடம் இருந்து, முறையான அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இவர்கள் மீதான வழக்கு விசாரணை, கடந்த நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ளது' என, லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் கடந்த மே மாத செயல்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சில அதிர்ச்சியான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, கடந்த மே மாதத்தில் மட்டும், உளவுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த 110 அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் மற்றும் லஞ்ச வழக்குகளை விசாரிப்பதற்கு, அவர்கள் பணியாற்றும் துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். இதில் பல இடையூறுகள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து அனுமதி கிடைக்காததால், 52 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான வழக்கு விசாரணை, நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ளது.இதில், அதிகபட்சமாக பணியாளர் துறை மற்றும் மத்திய நிதித் துறை அமைச்சகங்களைச் சேர்ந்த தலா 11 அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளும், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தை சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு எதிரான வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இதற்கு அடுத்தபடியாக, ரயில்வே அமைச்சகத்தை சேர்ந்த நான்கு அதிகாரிகள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் நிலுவையில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளில் ரவிசங்கர் ஸ்ரீவத்சவா, ராஜேஸ்குமார் ஸ்ரீவத்சவா, சஞ்சீவ் குமார், இந்திய வருவாய் துறை அதிகாரி பல்தேவ் சிங் சாந்து மற்றும் மும்பை சி.பி.ஐ.,யின் கூடுதல் எஸ்.பி., ஆர்.எஸ். பன்வார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.டில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், ராணுவம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த இரண்டு அதிகாரிகள், வெளியுறவு அமைச்சகத்தை சேர்ந்த ஒரு அதிகாரி ஆகியோருக்கு எதிரான வழக்குகளும், அனுமதி கிடைக்காததால் நிலுவையில் உள்ளன.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊழல் கண்காணிப்பு ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ""சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிக்கும்படி வலியுறுத்தி, அவர்கள் பணியாற்றும் துறைக்கு பல முறை நினைவூட்டல் கடிதங்கள் எழுதப்பட்டுள் ளன. இருந்தாலும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நிலுவையில் உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இந்த அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு விசாரணை துவங்கப்படும்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக