15 ஜூலை 2010
காதலனை அடைய,நிச்சயித்த மாப்பிள்ளையை கொலை செய்த பெண் வக்கீல் .
பெங்களூர்: தனக்கு நிச்சயிக்கப்பட்ட புது மாப்பிள்ளையை காதலருடன் சேர்ந்து கொலை செய்த பெண்வக்கீல் உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பெங்களூர் பனசங்கரியை சேர்ந்தவர் சங்கர நாராயணா. இவர் ஒரு வக்கீல். இவரது மகள் சுபா (28). இவரும் ஒரு வக்கீல்.
சுபா பெங்களூரில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்த காலத்திலேயே தன்னுடன் படித்த அருண் வர்மாவை காதலித்தார். இவரின் காதலுக்கு பெற்றோர் சிவப்பு கொடி காட்டியுள்ளனர். ஆனால், சுபா காதலை மறப்பதாயில்லை.
இதனால் சுபாவின் பெற்றோர் அவர்கள் பக்கத்து வீட்டில் வசித்த சாப்ட்வேர் என்ஜினீயர் கிரீஷ் என்பவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.
அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்தது. நிச்சயம் ஆனாலும் சுபாவுக்கு, கிரீஷீடன் வாழ விருப்பம் இல்லை.
இதனால் கிரீஷை கொலை செய்ய முடிவெடுத்தார் சுபா. இந்த கொலையை தன் காதலன் மற்றும் அவரின் உறவினர்கள் தினகர், வெங்கடேஷ் ஆகியோருடன் கூட்டாக செய்ய திட்டமிட்டார்.
சம்பவத்தன்று விருந்துக்கு போவது போல நாடகமாடி கிரீசை மோட்டார் சைக்கிளில் சுபா அழைத்து சென்றார். அப்போது தாழ்வாகப் பறக்கும் விமானங்களை பார்க்க வேண்டும் என்று கூறி சுபா மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியுள்ளார். கிரீஷ் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சுபாவுடன் சேர்ந்து விமானத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அந்த நேரம் அங்கு பதுங்கி இருந்த வெங்கடேஷ் கிரீஷை திடீரென தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் கிரீஷ் உயிரிழந்தார்.
முதலில் கொலைக்கான காரணம் தெரியாமல் குழம்பிய போலீசார், சுபாவின் செல்போனை கைப்பற்றிய பிறகு தான் உண்மை தெரிந்தது. சுபாவிடம் நடத்திய விசாரணையில் அவரும், காதலனும் சேர்ந்து தான் இந்த கொலையை செய்தார்கள் என்று தெரிய வந்தது.
இதையடுத்து சுபா, அவரது காதலர் அருண் வர்மா, அவரது உறவினர்கள் தினகர், வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த படுகொலையின் வழக்கு விசாரணை, பெங்களூர் 17-வது விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கிற்கு நேற்று தீர்ப்பளித்த நீதிபதி வெண்டிகொடி, குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக