மண்ணுளி பாம்பை தாங்களாகவே காரில் போட்டு, கேரள ரியல் எஸ்டேட் அதிபர்களை சிறைவைத்து லஞ்சம் கேட்ட வனக்கல்லூரி விரிவுரையாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். வனக்கல்லூரி விரிவுரையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரளா வயநாடு அருகே பரப்பனங்காடியை சேர்ந்தவர்கள் சுந்தரம்(34), அபுபக்கர்(36), மோகன்தாஸ்(45), சுந்தர். ரியல் எஸ்டேட் அதிபர்கள். நிலம் பார்ப்பதற்காக 2 நாள் முன்பு பொள்ளாச்சி வந்தனர். சிறுமுகையைச் சேர்ந்த நில புரோக்கர் ஜோஸ்(44), சுல்தான்பேட்டையில் நிலம் பார்க்க இவர்களை காரில் அழைத்துச் சென்றார்.
கூடலூர் உதவி வனப்பாதுகாவலர் நெடுஞ்செழியன், வைகைடேமிலுள்ள வனப்பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் சிவக்குமார்(52) ஆகியோர் சீருடையில் வந்து வழிமறித்து, காரை சோதனையிட்டனர். அதில் மண்ணுளிப்பாம்பு ஒரு பையில் இருந்ததை பறிமுதல் செய்தனர். ‘வன விதிகளின் படி மண்ணுளிப்பாம்பு வைத்திருப்பது குற்றம். கைது செய்யாமல் இருக்க ரூ.5 லட்சம் தர வேண்டும்’ என்று சிவகுமாரும், நெடுஞ்செழியனும் மிரட்டினர். ரூ.3 லட்சம் தருவதாக அவர்கள் கூறினர். ரூ.50 ஆயிரம் மட்டும் தந்தனர். ஒப்புக்கொண்டபடி மீதியுள்ள ரூ.2.5 லட்சத்தைத் தராததால் பொள்ளாச்சியிலுள்ள ஒரு விடுதியில் ஜோஸ்
தவிர 3 பேரையும் சிவக்குமார் அடைத்து வைத்துள்ளார்.
புரோக்கர் ஜோஸ், சிவக்குமார், நெடுஞ்செழியன் ஆகியோர் திட்டமிட்டு தங்கள் காரில் அவர்களாகவே மண்ணுளி பாம்பை போட்டு, பணம் பறிப்பதோடு, அதற்காக தங்களை கடத்தி சிறை வைத்துள்ள விவரத்தை சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள தனது நண்பருக்கு அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை இன்ஸ்பெக்டர் கொடுத்த தகவலின் பேரில் பொள்ளாச்சி கிழக்குப் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று விடுதியில் இருந்த 3 பேரையும் மீட்டனர். அவர்களுக்கு காவலாக இருந்த புரோக்கர் ஜோஸ் மற்றும் பொள்ளாச்சி கோபாலபுரம் ஸ்ரீராம்(24), போடிநாயக்கனூர் யோக ராஜ்(37) ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர் சிவகுமார்(52) கைது செய்யப்பட்டார். கூடலூர் உதவி வனப்பாதுகாவலர் நெடுஞ்செழியனை தேடி வருகின்றனர்.
வைகை டேம் வனக்கல்லூரி டீன் மனோஜ்குமார் சர்க்கார் கூறுகை யில், சம்பவ நாளில் விரிவுரையாளர் சிவகுமார் பணிக்கு ஆப்சென்ட் ஆகியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சஸ்பெண்ட் செய்துள்ளோம்’ என்றார்.
போலீசார் கூறுகையில், ‘தலைமறைவான கூடலூர் உதவி வனப்பாதுகாவலர் நெடுஞ்செழியனைத் தேடி வருகிறோம். அவர் மீது உயரதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது கைதாகியுள்ள சிவகுமார் உடுமலையில் வனச்சரகராக இருந்தபோது சந்தனக்கட்டை கடத்தலுக்கு துணை போனதாக கிடைத்த புகாரின் பேரில், வனக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டவர்,’ என்றனர்.
வன அதிகாரி மீதும் நடவடிக்கை
பொள்ளாச்சியில் பரபரப்பு
‘ஸ்னேக் சிவக்குமார்’
உடுமலையில் வனச்சரகராக சிவகுமார் இருந்தபோது, மண்ணுளி பாம்பை வைத்து பலரை சிக்க வைத்து நடவடிக்கை எடுக்காதது போல் நாடகமாடி பணம் கறப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதன் மூலம் இவர் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளது வனத்துறையினர் அறிந்த விஷயமாம். இவருக்கு ‘ஸ்னேக் சிவக்குமார்’ என்கிற அடைமொழியும் உண்டாம். இவரது மோசடியில் பாதிக்கப்பட்ட பலர் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்காததால் தப்பி வந்துள்ளார். இம்முறை சிக்கியுள்ளார்.
கோவை அருகேயுள்ள நெகமத்தைச் சேர்ந்த இவருக்கு அங்கு ஒரு கல்யாண மண்டபம், மஞ்சி மில், நூற்பாலை மற்றும் 100 ஏக்கருக்கு மேல் தென்னை தோட்டம் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக