திருப்பூர் : திருப்பூரில் மகளிர் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதை வீடியோவில் பதிவு செய்த "வீடியோ' சுப்ரமணியம் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் இந்திராணி நேற்று மதியம் கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்றுள்ளார்; அங்கிருந்த கடை உரிமையாளர் சரவணனிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், அதை "வீடியோ' சுப்ரமணியம் மற்றும் அவரது உதவியாளர் அத்துல் வீடியோவில் பதிவு செய்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார், நான்கு வாகனங்களில் சென்று "வீடியோ' சுப்ரமணியம், சரவணன், அத்துல் ஆகிய மூவரையும் பிடித்து தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பின், சுப்ரமணியத்தை ரூரல் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
பரபரப்பு: "வீடியோ' சுப்பிரமணியம் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் நேற்று திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டேஷனில் வைத்து சுப்ரமணியத்தை போலீசார் கடுமையாக தாக்குவதாகவும், அவர் காலை உடைத்து விட்டதாகவும் தகவல் பரவியதால், ரூரல் போலீஸ் ஸ்டேஷன் முன் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். திருப்பூர் துணை மேயர் செந்தில் குமார், இந்து முன்னணி மாநில பொது செயலாளர் சுப்பிரமணியம், கோட்ட ஒருங்கிணைப்பாளர் கிஷோர்குமார் மற்றும் இதர கட்சிகள் சார்ந்த சிலர் ஸ்டேஷனுக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 6.00 மணி வரை பரபரப்பு நீடித்த நிலையில், போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தாக 332வது பிரிவின் கீழ் "வீடியோ' சுப்ரமணியம், அவரது உதவியாளர் அத்துல்; இதற்கு உடந்தையாக செயல்பட்ட கடை உரிமையாளர் சரவணன், கடை ஊழியர்கள் சண்முகம், மணி மற்றும் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; இவர் கள், திருப்பூர் ஜே.எம்., கோர்ட் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் சிறைக்காவலில் வைக்கப் பட்டனர்.
லஞ்சம் வாங்கியது உண்மையா? இன்ஸ்பெக்டர் இந்திராணி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் உள்ள நிலையில், போலீஸ் தரப்பில் அது முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது; இச்சம்பவம் தொடர்பாக வீடியோவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிடவில்லை. அதேபோல், கைது செய்யப்பட்ட"வீடியோ' சுப்ரமணியத்தை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை ஸ்டேஷனுக்குள் போலீசார் செல்ல விடாமல் தடுத்தனர். தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சம்பவம் நடந்த நிலையில், ரூரல் ஸ்டேஷனுக்கு சுப்ரமணியத்தை அழைத்துச் சென்று மறைவிடத்தில் வைத்து விசாரணை நடத்தியதால் மர்மம் நீடிக்கிறது.
சுப்ரமணியம் "சமூக சேவை'யாளரா? கைது செய்யப்பட்ட "வீடியோ' சுப்ரமணியம், அரசு தரப்பிலும், அதிகாரிகள் தரப்பிலும் பல்வேறு குற்றவாளிகளை வீடியோவில் பதிவு செய்து மக்களுக்கு வெளிச்சப்படுத்தியவர். தன்னை சமூக சேவையாளராக மக்களுக்கு அடையாளம் காட்டிக் கொண்டவர். அதேநேரத்தில், இவரது வீடியோ வெளிச்சத்தில் விழுந்த சிலரை, ஊழல் ஆதாரத்தை வெளியிடாமல் மறைக்க, பல லட்சங்கள் கேட்டு அவர் பேரம் பேசியதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. லஞ்சம் வாங்கியதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பதிவு செய்து சில மாதங்கள் கழிந்த நிலையில், இவர் வீடியோ ஆதாரங்களை வெளியிடுவதால், குறிப்பிட்ட காலம் வரை இவர் தன்னிடம் சிக்கிய ஊழல் பேர்வழியிடம் பேரம் பேசியதாகவும், பேரம் படியாதவர்களின் ஊழலை மட்டுமே அம்பலப்படுத்தியதாகவும் சந்தேகங்கள் உள்ளன. இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக