புதியவை :

Grab the widget  Tech Dreams

31 ஜூலை 2010

தமிழ் நாட்டில் மின் கட்டண உயர்வு, முழு விபரம் .


தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் கபிலன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் எங்களிடம் மனு செய்திருந்தது. அந்த மனு மீது ஆய்வுகள் நடத்தி, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 நகரங்களில் நடத்தப்பட்ட கட்டண உயர்வு பற்றிய கருத்துக் கேட்புக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். தென்னக ரெயில்வே, எரிசக்தித்துறை, நிதி, தகவல் தொழில்நுட்ப செயலாளர்கள், மின்வாரியத்தலைவர் ஆகியோரிடமும் கலந்து பேசப்பட்டது.
அதன் பேரில் மின் கட்டணத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

இரண்டு மாதத்தில் 600 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்கள், குடிசைவாசிகள், விசைத்தறி, கைத்தறியாளர்கள், பொது வழிபாட்டு தலங்கள், விவசாயம் செய்வோருக்கு தற்போதுள்ள கட்டணமே இருக்கும். அவர்களுக்கு மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.


இரண்டு மாதத்தில் 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு தலா ரூ.1 வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.


தொழில் மின் நுகர்வோரில் உயர் அழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 50 காசுகளும் தாழ்வழத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 30 காசுகளும் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.


இரண்டு மாதத்துக்கு 1,500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் குடிசை தொழில் மற்றும் குறுந்தொழில் முன்நுகர்வோருக்கு கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்படுகிறது.


இரண்டு மாதத்துக்கு 1500 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் தொழில் மின் நுகர்வோரின் தாழ்வழுத்த வகையினருக்கு மின்கட்டண உயர்வு இல்லை.


வணிக மின் நுகர்வோரின் உயர் அழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. வணிக மின்நுகர்வோரில் தாழ்வழுத்த வகையினர் யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக 50 காசுகள் செலுத்த வேண்டும்
.


உயர் அழுத்த வகை சினிமா தியேட்டர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தாழ் வழுத்த வகையினருக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.10 உயர்த்தப்பட்டுள்ளது.


இரண்டு மாதத்துக்கு 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் (தாழ்வழுத்த வகை) வணிக மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை. இரண்டு மாதத்துக்கு 100 யூனிட்களுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் சிறுகடை வியாபாரிகளுக்கு மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.1 குறைக்கப்படுகிறது.


தனியார் கல்வி நிறுவனங்களுக்கு (உயர் அழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு (உயர் அழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு 50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.


தனியார் கல்வி நிறுவனங்களுக்கு (தாழ்வழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.1.10 உயர்த்தப் பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு (தாழ்வழுத்த வகை) யூனிட் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த கட்டண மாற்றம் நாளை (ஆகஸ்டு 1) முதல் அமலுக்கு வருகிறது
.

இந்த விலை மாற்றம் காரணமாக மின்வாரியத்துக்கு 1651 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்.


நடப்பாண்டில் 6450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 100 சதவீத பற்றாக்குறையில் 20 சதவீத அளவுக்குதான் கட்டண உயர்வு அமல்படுத்தப் பட்டுள்ளது.


600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் தமிழ்நாட்டில் 5 லட்சத்து 15 ஆயிரத்து 299 பேர் உள்ளனர்.


600 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சம் பேர் இருக்கிறார்கள். இந்த 1 கோடியே 53 லட்சம் பேருக்கு கட்டண உயர்வு இல்லை.


3 சதவீத மக்கள்தான் கூடுதல் மின்கட்டணம் கொடுக்க வேண்டியதிருக்கும். இந்த கட்டண திருத்தம் 2013-ம் ஆண்டு வரை அமலில் இருக்கும்.


தற்போது வீட்டு மின் நுகர்வோருக்கு யூனிட் ஒன்றுக்கு 75 காசு முதல் ஒரு ரூபாய் 70 காசு வரை அரசு மானியமாக கொடுக்கிறது. இதேபோல கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு ரூபாய் 10 காசு முதல் ஒரு ரூபாய் 30 காசு வரையிலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு ரூபாய் 40 காசும் விவசாயிகளுக்கு குதிரை சக்தி ஒன்றுக்கு 250 ரூபாயும் அரசு மானியமாக வழங்குகிறது.


நடப்பாண்டுக்கான அரசின் மொத்த மானியத் தொகை ரூ.1652 கோடியாகும்.


கடைசியாக 2003-ம் ஆண்டு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 7 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக