புதியவை :

Grab the widget  Tech Dreams

26 நவம்பர் 2009

லஞ்சம் வாங்கிய கல்குளம் சர்வேயர் கைது .


நாகர்கோவிலை அடுத்த அம்மாண்டிவிளையை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது தம்பி ரகுபதி. இவர்களுக்கு சொந்தமான 6 சென்ட், கல்குளம் தாலுகா கடியப்பட்டணம் பகுதியில் உள்ளது. இச்சொத்தினை பிரித்து உட்பிரிவு செய்ய பார்த்தசாரதியும், ரகுபதியும் முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் சொத்தை பிரித்து உட்பிரிவு செய்யக்கோரி கல்குளம் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இது பற்றி ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும்படி கல்குளம் தாலுகா சர்வேயர் மனோகரனுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி சர்வேயர் மனோகரன் சம்பந்தப்பட்ட நிலத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அதன்பின்பு அவர் நில உரிமையாளர்கள் பார்த்தசாரதி, ரகுபதி இருவரிடமும் இது தொடர்பான அறிக்கை கொடுக்க தனக்கு ரூ.1000 பணம் தரும்படி கேட்டார்.
சர்வேயர் மனோகரன் லஞ்சம் கேட்டது பற்றி பார்த்தசாரதி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அவர்கள் மனோகரனை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி பார்த்தசாரதி பணத்தை தன்வீட்டில் வந்து வாங்கி கொள்ளும்படி மனோகரனிடம் கூறினார். ஆனால் அவர் இன்று காலை பார்த்தசாரதிக்கு டெலிபோன் செய்து பணத்தை தனது வீட்டிற்கு வந்து தரும்படி தெரிவித்தார். இதனை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்து விட்டு பார்த்தசாரதி லஞ்சப்பணத்துடன் இன்று காலை 9 மணிக்கு சர்வேயர் மனோகரன் வீட்டிற்கு சென்றார்.
அங்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர்கள் ஹெக்டர் தர்மராஜ், கண்ணன், பீட்டர்பால், ஏட்டு குமரேசன் ஆகியோர் மறைந்து இருந்தனர். அவர்கள் மனோகரன் லஞ்சப்பணத்தை வாங்கும் போது அவரை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வீட்டிலும் சோதனை நடத்தினர். காலை 9மணி முதல் பகல் 11 மணிவரை இச்சோதனை நீடித்தது. இதில் சர்வேயர் மனோகரன் இதுபோல பலரிடம் லஞ்சம் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை நாகர்கோவில் கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் மீண்டும் விசாரணை நடக்கிறது.
லஞ்சம் வாங்கிய சர்வேயரை அவரது வீட்டுக்கு சென்றே போலீசார் கைது செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக