
கோவை வடக்கு ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவு நடத்திய அதிரடி சோதனையில் 5 புரோக்கர்கள் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கோவை துடியலூர் வெள்ளக்கிணர் ரோட்டில் கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் துவக்கப்பட்டது. கோவை வடக்கு பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட சிறு நகரங்களை உள்ளடக்கிய இந்த அலுவலகம் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு புதிய வாகனங்களை பதிவு செய்தல், பெயர் மாற்றம், ஓட்டுனர் உரிமம் பெறுதல், பழகுனர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போக்குவரத்து அலுவலக தொடர்பான பணிகளை மேற்கொள்ள புரோக்கர்களின் உதவியோடு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. (பொறுப்பு) பெரோஸ்கான் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், சுந்தரராஜன், உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மாலை போக்குவரத்து அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். அலுவலகத்தின் அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அதற்காக பெறப்பட்ட தொகைகள் குறித்து கணக்கீடு செய்யப்பட்டது. இதில், அலுவலகத்தின் கணக்கிற்கு வராத ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் புரோக்கர்களிடம் இருப்பது கண்டுபிடிக்கபட்டு, கைப்பற்றப்பட்டது. மேலும், விசாரணையில், உரிமம் உள்ளிட்ட ஆர்.டி.ஒ., ஆபீசின் பல்வேறு பணிகளுக்காக புரோக்கர்களாக செயல்பட்ட திருமூர்த்தி, பாபு, சுரேஷ்குமார், ஜெயக்குமார், சண்முகசுந்தரம் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் ஆர்.டி.ஒ., ஆபீசுக்கு எதிரே உள்ள கவுதம் மற்றும் செல்வநாயகி ஜெராக்ஸ் கடைகள் புரோக்கர்களின் தகவல் தொடர்பு மையமாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அவர்களிடமும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரித்தனர். ""கணக்கில் காட்டப்படாமல் புரோக்கர்கள் வைத்திருந்த தொகை தொடர்பாக அலுவலக அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரிக்கப்படுவர்'' என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். நேற்று மாலை 4.40 மணிக்கு ஆர்.டி.ஒ., அலுவலகத்துக்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு 11 மணிவரை சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக