
திருமங்கலம்:மதுரை அருகே முகவரி மாற்ற ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்(பொறுப்பு) துரைராஜ் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டியை சேர்ந்த அரவிந்தன் (27). மின்சாதன பொருட்கள் ஏஜன்சி நடத்தி வருகிறார். அதே தெருவில் வேறொரு இடத்திற்கு ஏஜன்சியை மாற்றவும், டி.கல்லுப்பட்டி மெயின் ரோடு மற்றும் மம்சாபுரத்தில் கிளைகளை திறக்க முடிவு செய்தார். இதற்காக அனுமதி எண் (டின் எண்) பயன்படுத்த அனுமதி கேட்டு வணிகவரித்துறைக்கு விண்ணப்பித்திருந்தார்.
இதற்காக வணிகவரி உதவி கமிஷனர்(பொறுப்பு) துரைராஜ், 5000 ரூபாய் லஞ்சம் கேட்டார். முன்பணமாக 1000 ரூபாயை வாங்கிக் கொண்டார்.நேற்று காலை வணிகவரித்துறை அலுவலகத்திற்கு வந்த அரவிந்தன் சான்றிதழ்களை கேட்டார். அதற்கு துரைராஜ் மீதிப்பணம் ரூ. 4 ஆயிரத்தை கொடுத்தால் மட்டுமே சான்றிதழ் கொடுப்பேன் என கூறியுள்ளார். பின்னர் 3 ஆயிரம் ரூபாய்க்கு துரைராஜ் சம்மதித்துள்ளார்.
இது குறித்து அரவிந்தன் மதுரை லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., குலோத்துங்கனிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து டி.எஸ்.பி., தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், ஜெயக்குமார், ரமேஷ் மற்றும் போலீசார், ரசாயன பவுடர் தடவிய 3000 ரூபாயை அரவிந்தனிடம் கொடுத்தனர். அதை அலுவலகத்தில் வைத்து துரைராஜிடம கொடுத்தார். அதை வாங்கிய துரைராஜை போலீசார் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக