புதியவை :

Grab the widget  Tech Dreams

06 நவம்பர் 2009

55 போலீஸ் அதிகாரிகள் மீது திருட்டு கேஸ்! இறந்த இன்ஸ்பெக்டர் மீதும் வழக்குப் பதிவு !


எஸ்.பி., கண்ணன்



கோவை மாவட்டத்திலுள்ள பல போலீஸ் ஸ்டேஷன்களில் பராமரிக்கப்பட்டு வந்த 490 வழக்குகளின் "கேஸ் டைரிகள்' காணாமல் போயின. இது தொடர்பாக, போலீஸ் அதிகாரிகள் 55 பேர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த அதிரடி நடவடிக்கையால் அரண்டு போயுள்ளனர் போலீசார். கோவை மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் மேட்டுப்பாளையம், பேரூர், பொள்ளாச்சி, வால்பாறை சப் - டிவிஷன்களில் 29 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் தினமும் குறைந்தது மூன்று வழக்குகள் வீதம் பதிவாகின்றன. அடிதடி, சிறு திருட்டு உள்ளிட்ட சாதாரண வழக்குகளில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு, வழக்குகள் கோர்ட் விசாரணைக்கு போகின்றன. ஆனால், கொலை, கொள்ளை உள்ளிட்ட பெரிய அளவிலான குற்ற வழக்குகள் போலீஸ் விசாரணை நிலையிலேயே தேங்கி விடுகின்றன. இன்னும் சில வழக்குகளில், குற்றவாளிகள் சிக்கி சிறைக்கு அனுப்பப்பட்டாலும், கோர்ட் டில் தகுந்த ஆவணங்களை போலீசார் ஒப்படைக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதனால், வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படுகிறது. குற்றவாளிகள் பிடிபடாதது, ஆவணங்கள் இல்லாதது, மேல் முறையீடு உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் நூற் றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், மாவட்டம் முழுவதும் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை பல ஆயிரத்தை கடந்து விட்டது. இவ்வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட எஸ்.பி., அலுவலகம் பலமுறை உத்தரவிட்டும், ஸ்டேஷன் இன்ஸ் பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் அலட் சியம் காட்டினர். இதையடுத்து, வழக்குகள் ஆய்வுக் கூட்டம், எஸ். பி., கண்ணன் தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில், பங்கேற்ற ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.,க் கள் கூறுகையில், "வேறு ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பராகிச் சென்ற இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், தாங்கள் முன்பு பதிவு செய்த எப்.ஐ.ஆர்., உள்ளிட்ட "கேஸ் டைரி' (வழக்கு நாட்குறிப்பு) ஆவணங்களை எடுத்துச் சென்று விட்டனர். இதனால், வழக்குகளை விரைந்து முடிக்க இயலவில்லை' என்றனர். இதையடுத்து, ஸ்டேஷன் வாரியாக நிலுவையிலுள்ள வழக்குகளில், எத்தனை வழக்குகளுக்கு "கேஸ் டைரி' ஆவணம் உள் ளது' என, கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. இதில், 800 வழக்குகளின் "கேஸ் டைரி' மாயமாகியிருந்தது. எஸ்.பி., எச்சரித்ததை தொடர்ந்து 310 "கேஸ் டைரி'களை அதிகாரிகள் திரும்ப ஒப்படைத்தனர்; எனினும், 490 ஆவணங்கள் இன் னும் வந்து சேரவில்லை.இதனால், மாயமான "கேஸ் டைரி'களை ஒப்படைக்காத போலீஸ் அதிகாரிகள் மீது எப்.ஐ. ஆர்., பதிவு செய்ய, எஸ்.பி., கண்ணன் அதிரடி உத்தரவிட்டார். இதையடுத்து அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர், பேரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு ஸ்டேஷன்களில் ஒரே நாளில் 15 இன்ஸ்பெக்டர், 40 எஸ்.ஐ.,க் கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 380 (திருட்டு) பிரிவின் கீழ், அந்தந்த ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நடவடிக்கை போலீசார் மத்தியில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி., கண்ணன் கூறியதாவது:நிலுவையிலுள்ள வழக்குகள் சம்மந்தமான "கேஸ் டைரி'களை அதிகாரிகளில் சிலர் உடன் எடுத்துச்சென்றுவிட்டனர். இவற்றை அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப் படைக்க பல முறை அறிவுறுத்தப்பட்டது. கோவையில் பணிபுரியும் அதிகாரிகள் சிலர் மட்டும் ஆவணங்களை ஒப்படைத்தனர். வேறு மாவட்டங்களுக்கு மாறுதல் பெற்றுச்சென்ற அதிகாரிகள் ஆவணங்களை ஒப்படைக்க வில்லை. எனவே, அந்த அதிகாரிகள் மீது 490 வழக்குகள் (ஒவ்வொரு கேஸ் டைரிக்கும் தனித்தனி வழக்கு) பதிவு செய்துள்ளோம்.இவ்வாறு, எஸ்.பி., கண்ணன் தெரிவித்தார்.

இறந்த இன்ஸ்பெக்டர் மீதும் வழக்குப் பதிவு: இரு ஆண்டுகளுக்கு முன் கருமத்தம்பட்டி போலீசில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சாலை விபத்தில் இறந்தார். இவர் வசமிருந்த "கேஸ் டைரி'களும், இன்னும் அந்த ஸ்டேஷனில் ஒப்படைக்கப்படவில்லை. இதை தொடர்ந்து மீதும் வழக்குப் பதிவு செய் யப்பட்டது.


இதே போன்று, புறநகரில் முன்பு இன்ஸ் பெக்டராக பணியாற்றி, டி.எஸ்.பி., யாக பதவி உயர்வு பெற்ற அசோக்குமார் உள்ளிட்ட இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. மேலும், முன்பு கோவில்பாளையம் போலீசில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் தனபால் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் 25 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில், கைதாகி சிறை சென்றவர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக