புதியவை :

Grab the widget  Tech Dreams

26 மே 2010

கரூர் வி.ஏ.ஓ.பெரியசாமி கைது


லாலாப்பேட்டை: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் வாரிசு சான்று அளிக்க லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும், திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணராயபுரம் தாலுகா, பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கே.பெரியசாமி(64). இவருடைய மாமனார் வீரபத்திரன், 1996ல் இறந்தார். கே.பெரியசாமி மனைவி செல்லம்மாள் பெயருக்கு, வீரபத்திரன் சொத்துக்கான வாரிசு சான்று கேட்டு, கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கான விசாரணை, கிருஷ்ணராயபுரம் வடக்கு பகுதி வி.ஏ.ஓ., பெரியசாமியிடம் (58) சென்றது.

வாரிசு சான்று பரிந்துரைக்க, தனக்கு 1,200 ரூபாய் அளிக்குமாறு, வி.ஏ.ஓ., பெரியசாமி கூறியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த கே.பெரியசாமி, திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தியதன் அடிப்படையில், நேற்று காலை 11 மணிக்கு, கே.பெரியசாமி பணத்துடன் சென்றார். வி.ஏ.ஓ., அலுவலகத்தில் உதவியாளர் கிருஷ்ணன், கே.பெரியசாமியிடம் பணத்தை பெற்று, வி.ஏ.ஓ., பெரியசாமியிடம் அளித்தார். பணத்தை தன்னுடைய மேஜையில் வி.ஏ.ஓ., வைத்ததும், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையில் சுற்றிவளைத்தனர். கையும், களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளரை கைது செய்து, விசாரணைக்கு கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ., பெரியசாமி வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக