25 மே 2010
லஞ்சமோ லஞ்சம் - கோவையில் ஓராண்டில் 12 பேர் கைது
கோவை மற்றும் திருப்பூரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஓராண்டில் நடத்திய வேட்டையில் 12 அதிகாரிகள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள்,செக்போஸ்ட்களில் நடந்த திடீர் சோதனையில் 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கையில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள் ளது, லஞ்ச ஒழிப்புத்துறை.
முன்பெல்லாம், சட்டவிதிகளை மீறி காரியம் செய்து தர மட்டுமே அரசு துறைகளில் லஞ்சம் பெறப்பட்டது. தற்போது, சட்டப்படியான கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளக்கூட, கைநீட்டும் போக்கு அதிகரித்துள்ளது.
"லஞ்சம் தராவிடில் காரியம் நடக்காது' என்ற, முறைகேடுகளுக்கு துணைபோகும் தவறான எண்ணம், மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றிவிட்டது. இதனால், லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மக்களை இணைக்க லஞ்ச ஒழிப்புத்துறை கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது.கடந்த ஓராண்டில், அதாவது 2009, ஏப்ரல் முதல் 2010 ஏப்ரல் வரை, கோவை மற்றும் திருப்பூரிலுள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள், ஊழியர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டா பெயர் மாற்றத்துக்கு 2,000 ரூபாய் லஞ்சம் பெற்ற பொள்ளாச்சி துணைதாசில்தார் நமசிவாயம், வடபுதூர் கிராம நிர்வாக அதிகாரி ஜெயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மருந்துக்கடைக்கு லைசென்ஸ் வழங்க 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கோவை மருந்து ஆய்வாளர் சிதம்பரம், புரோக்கராக செயல்பட்ட மருந்துக்கடை உரிமையாளர் திருஞானசம்மந்தம் ஆகியோர் பிடிபட்டனர்.
"சால்வன்சி' சான்றிதழ் வழங்க 600 ரூபாய் லஞ்சம் வசூலித்த திருப்பூர் தெற்கு அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் முருகேசன்,
சொத்து மறு மதிப்பீடு செய்ய 5,000 ரூபாய் லஞ்சம் வசூலித்த திருப்பூரைச் சேர்ந்த தாசில்தார் விஸ்வநாதன், ஓய்வு பெற்ற தாசில்தார் மீன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதே போன்று, அடங்கல் சான்று வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் கேட்ட கருமத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பூபதி,
வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க 300 ரூபாய் லஞ்சம் பெற்ற சின்னவேடம்பட்டி மின்வாரிய உதவி இன்ஜினியர் துரைராஜ்,
மின் இணைப்பை மாற்றித்தர 3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிணத்துக்கடவு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன்,
பள்ளி ஆசிரியருக்கு நிரந்தர பணி உத்தரவு வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வசூலித்த மாவட்ட தொடக்கல்வி அலுவலக உதவியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பிடிபட்டனர்.
பட்டா பெயர் மாற்றத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மசக்கவுண்டன்செட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி முத்துசாமி,
"டிரேடு சர்ட்டிபிகேட்' வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் கேட்ட மேட்டுப்பாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்தகுமார்,
அடங்கல் ஆவணம் வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் வசூலித்த காட்டம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி காளிமுத்து,
3000 ரூபாய் லஞ்சம் பெற்ற பொள்ளாச்சி வணிகவரித்துறை ஊழியர் சேமகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.13 லட்சம் பறிமுதல்: கைது நடவடிக்கை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் திடீர் சோதனைகளும் நடந்தன. பாலசுந்தரம் ரோட்டிலுள்ள தொழிலாளர் துறை அலுவலகம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம், பொள்ளாச்சி வளந்தாயமரம் வட்டார போக்குவரத்து துறை செக்போஸ்ட், கந்தேகவுண்டன் சாவடி போக்குவரத்து துறை செக்போஸ்ட், பொள்ளாச்சி கூட்டுறவு சார் பதிவாளர் வீடு, கோபாலபுரத்திலுள்ள கூட்டுறவு சொசைட்டி, திருப்பூரிலுள்ள இணைப்பதிவாளர் அலுவலகம், பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம், கோவை வணிகவரி அலுவலகம், பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தி 13 லட்சம் ரூபாயை முதல் செய்தனர். பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் ஒரே ஆண்டில் இரு முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.
கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், "அரசுத்துறைகளில் லஞ்ச முறைகேடுகளை ஒடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். சட்டப்படியான கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கோவை, காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் செயல்படும் மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0422 - 2238 647 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். லஞ்சத்துக்கு எதிரான சட்டப்படியான நடவடிக்கைகளில் பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்ற வேண்டும்' என்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக