புதியவை :

Grab the widget  Tech Dreams

23 மே 2010

கேதன் தேசாய் உதவியாளருக்கு 1,000 சட்டை, 200 கோட், 100 ஜோடி ஷூ


புதுடில்லி : லஞ்ச வழக்கில் கைதான கேதன் தேசாயின் உதவியாளர் ஜித்தேந்தர் பால் சிங்கின் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, சி.பி.ஐ., அதிகாரிகளே ஆச்சர்யப்படும் வகையில், விலை உயர்ந்த 1,000 சட்டைகள், 200 கோட், 100 ஜோடி ஷூக்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.

இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய், மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கேதன் தேசாயின் உதவியாளராகச் செயல்பட்ட ஜித்தேந்தர் பால் சிங் என்பவரும் கைது செய்யபட்டார். தன்னை ரியல் எஸ்டேட் அதிபர் என கூறிக் கொள்ளும் ஜித்தேந்தர், உண்மையில் கேதன் தேசாயின் நம்பத்தகுந்த உதவியாளராகச் செயல்பட்டு வந்தார்.

லஞ்சம் வாங்கும் விவகாரங்களில், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கும், தேசாய்க்கும் இடையே இடைத்தரகராகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, டில்லியில் உள்ள ஜித்தேந்தர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த பொருட்களை பார்த்து சி.பி.ஐ., அதிகாரிகளே மலைத்துப் போயினர். ஜித்தேந்தர் சிங், ராஜபோக வாழ்க்கை நடத்தி வந்தது தெரிய வந்தது.

அவரது வீட்டு அறையில் மிகவும் விலை உயர்ந்த 1,000க்கும் மேற்பட்ட சட்டைகள் இருந்தன. கோடீஸ்வரர்களும், அதிகாரிகளும் அணியும் விலை உயர்ந்த 200 டிசைனர் கோட்டுகளும் இருந்தன.

விலை மதிப்புள்ள 15 மொபைல் போன்கள் (ஒவ்வொரு போனின் விலையும் தலா 10 லட்சம் ரூபாய்), 100 ஜோடி ஷூக்கள் (ஒவ்வொன்றும் தலா 70 ஆயிரத்தில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் விலை உடையவை), விலை உயர்ந்த ஒயின் பாட்டில்கள் (ஒவ்வொரு பாட்டிலும் தலா 25 ஆயிரம் ரூபாய்) ஆகியவையும் இருந்தன. இவை அனைத்தையும் சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறுகையில், "ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் ஒரு நபர், அந்த தொழிலில் கிடைக்கும் வருவாய் மூலம், பழங்கால மன்னர்கள் போல் ராஜபோக வாழ்க்கை நடத்துவது என்பது சாத்தியமற்றது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக நடந்த முறைகேடுகளில், இடைத்தரகராக செயல்பட்டதன் மூலமே, ஜித்தேந்தர் இந்த அளவுக்கு ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளோம்' என்றனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக