புதியவை :

Grab the widget  Tech Dreams

05 மே 2010

லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் கைது


சென்னை : துப்புரவு பணியாளர்களிடம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் இருவரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அமைந்தகரை, செனாய் நகர், 67 வது வார்டு பகுதியிலுள்ள மாநகராட்சி அலுவலகத்தில், துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு பணிக்கு வரும் துப்புரவு பணியாளர்கள், ரிஜிஸ்டரில் கையெழுத்திட வேண்டும். ரிஜிஸ்டரை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்ளும் மாநகராட்சி ஊழியர்கள், 'ஆப்சென்ட்' போட்டு விடுவதாக பணியாளர்களை மிரட்டினர். இப்பிரச்னையிலிருந்து தப்பிக்க, மாதம் 200 முதல் 300 ரூபாய் வரை லஞ்சம் கேட்டனர்.

இத்தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பொன்னுச்சாமியின் கவனத்திற்கு சென்றது. இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, இமானுவேல் ஞானசேகர், அசோகன், ரஞ்சித்சிங் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. செனாய் நகரிலுள்ள மாநகராட்சி அலுவலகம் அருகே, நேற்று காலை 6 மணிக்கு தனிப்படை போலீசார் பதுங்கியிருந்தனர். மாநகராட்சி அலுவலக மேஸ்திரி நாதன் (53), மாநகராட்சி களப்பணியாளர் கரா வெங்கய்யா (56) ஆகிய இருவரும் ஊழியர்களிடமிருந்து, பணத்தை மிரட்டி வசூலித்து கொண்டிருந்தனர். தனிப்படை போலீசார் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர்.

அவர்கள் வசூலித்த லஞ்சம் தொகை 12 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக